‘ராம் அப்துல்லா ஆண்டனி’ திரைப்பட விமர்சனம்

பூவையார் , அர்ஜுன்,அஜய் அர்னால்டு, சௌந்தரராஜா, சாய் தீனா, வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய் நடித்துள்ளனர்.ஜெயவேல் டி எழுதி இயக்கியுள்ளார். எல்.கே. விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். வினோத் சிவகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். டி எஸ் கிளமெண்ட் சுரேஷ் தயாரித்துள்ளார்.

ராம் நன்றாக படிக்கக் கூடிய மாணவன் 1330 திருக்குறளையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவன் .அவன் திருக்குறள் போட்டியில் வென்று பரிசு பெறுகிறான். மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு பெறும் போது பரிசைப் பெற மறுக்கிறான். தனது நண்பர்கள் இருவரை மேடைக்கு அழைத்து வந்தால் தான் பரிசு பெற்றுக் கொள்வேன் என்கிறான் அதன்படி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து அப்துல்லா, ஆண்டனி என்கிற அந்த இரு நண்பர்களைக் கொண்டு வருகிறார்கள் அவர்களுடன் இணைந்து பரிசினைப் பெற்றுக் கொள்கிறான்.

ராம் ,அப்துல்லா, ஆண்டனி என்கிற பள்ளி மாணவர்கள் பீடித் தொழில் அதிபர் வேலராமமூர்த்தியின் பேரனை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து சாக்கு முட்டையில் போட்டு விட்டதாகக் காவலர் சௌந்தரராஜாவிடம் பிடிபடுகிறார்கள்.பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இதைச் செய்தார்களா என்று சௌந்தர்ராஜாவுக்கு ஒரு பக்கம் சந்தேகம் இருந்தாலும்,சிறுவர்கள் மீது கருணையே காட்டாமல் இன்ஸ்பெக்டர் சாய் தீனா மூலம் போலீஸ் சித்திரவதையை அனுபவிக்கிறார்கள்.நாங்கள் இரண்டு பேர் சேர்ந்துதான் கொலை செய்தோம் ராம் மீது தவறில்லை என்று ராமை அவர்கள் விடுதலை செய்ய வைக்கிறார்கள்.
அந்த அளவிற்கு மூவரும் ஒற்றுமையாக இருக்கும் நண்பர்கள் .சௌந்தரராஜாவுக்கு அவர்கள் புகை போதை பழக்கத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று புரிய வருகிறது.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் அந்த சிறுவர்களை அணு அணுவாகக் கொல்லும்படி வேலராமமூர்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் தீனா விடம் கூறுகிறார். அதன்படி அவர்களை நெருக்கடி சூழ்ந்து கொள்கிறது. கான்ஸ்டபிள் செளந்தர ராஜாவுக்கு பணத்துக்காக சாய் தீனா செய்யும் சதித்திட்டங்கள் எல்லாம் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார்.சிறுவர்களுக்கு ரகசியமாக உதவ நினைக்கிறார்.
அவர்கள் வேல ராமமூர்த்தியின் பேரனை ஏன் கொலை செய்ய வேண்டும்?போன்ற கேள்விகளுக்கு பதில் தான் 120 நிமிடங்கள் கொண்ட ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ படத்தில் மீதிக். கதை.

ஒரு காலத்தில் ‘அமர் அக்பர் ஆண்டனி’,’சங்கர் சலீம் சைமன்’ என்று மூன்று மதத்தைச் சேர்ந்த பாத்திரங்களை வைத்து படங்கள் வெளிவந்தன. இந்த 2025-ல் வெளிவந்திருக்கும் படம் தான் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’.

படத்தில் ராம் ,அப்துல்லா, ஆண்டனி என்கிற அந்த மூவருக்கும் இடையில் உள்ள நட்பும் புரிதலும் விட்டுக் கொடுத்தாலும் காட்டப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு விஷயத்தை சேர்ந்து எதிர்ப்பதில் அவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பதும் காட்டப்பட்டுள்ளது. அவர்களின் கூட்டணியும் அவர்கள் செய்யும் செயலும் சிலருக்கு இடையூறாக இருப்பதால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ராம் ,அப்துல்லா, ஆண்டனி என்கிற பள்ளி மாணவர்கள் பாத்திரத்தில் வரும் பூவையார் , அர்ஜுன்,அஜய் அர்னால்டு மூன்று மதம் மட்டுமல்ல , மூன்று வித உடல் மொழி, முகபாவனைகள் என்று அந்த மூன்று சிறுவர்களுமே நன்றாக மனதில் பதிகிறார்கள்.

சாய் தீனா வில்லன் வேடம் கொடுத்தாலே அளவுக்கு அதிகமாக அலப்பறை செய்வார் .இதில் அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் சற்று சுதந்திரம் கொடுத்ததும் குரூர வில்லத்தனத்தில் வெறுப்பேற்றி மகிழ்கிறார்.முதல் பாதி படத்தில் அவரது கை தான் ஓங்கி இருக்கிறது.

சௌந்தரராஜா மெல்ல மெல்ல கதாநாயகனாக படிகளில் ஏறும் காலம் இது. அவருக்குக் கொடுத்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள் பாத்திரத்தில் அவர் சின்ன சின்ன முகபாவனைகளில் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார். அவரை வைத்து தான் படமே தொடங்குகிறது. படத்தில் இரண்டாவது பாதியில் அவரது பாத்திரம் மேலும் அழுத்தம் பெறுகிறது.அப்துல்லாவின் தந்தையாக வரும் தலைவாசல் விஜய் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அப்துல்லாவின் தந்தையாக வரும் தலைவாசல் விஜய் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.பீடித் தொழில் அதிபர் வேலராமமூர்த்தி வழக்கம் போல் வில்லத்தனத்தில் குரூரம் காட்டுகிறார்.

இயக்குநர் பாதையில் ஒளிப்பதிவாளர் எல்.கே. விஜய், இசையமைப்பாளர் டி . . கிருஷ்ணசேத்தன்இருவரும் பக்கபலமாக இணைந்து பயணப்பட்டுள்ளனர்.

சிறுவர்களின் ஆரம்ப காட்சிகள் மனதில் திகிலூட்டுகின்றன.உச்சகட்ட காட்சியில் சிறுவர்களைப் பயன்படுத்தி இருப்பது கலங்க வைக்கிறது அதிர்ச்சியும் தருகிறது.

சாதாரண மசாலா படம் என்று,திரில்லர் படம் என்று நினைத்துக் கொண்டு பார்க்க உட்கார்ந்தால் போகப் போக புகை, போதைக்கு எதிரான படமாக ஆரோக்கியமான பாதையில் சென்று முடிகிறது.

அந்த முயற்சிக்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.