தனுஷ் ,எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், சரவணன், திலீபன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ,துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தனுஷ் எழுதி இயக்கியுள்ளார் .இசை ஏ .ஆர் . ரகுமான், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
தனுஷ் தாய் தந்தை இல்லாததால் தனது தம்பி, தங்கையைப் பாசத்தோடு வளர்க்கிறார்.தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவரைச் சுற்றி வன்முறை உலகம் சூழ்ந்துகொண்டு சீண்டுகிறது.அந்த நிழல் உலகத்தில் இருந்து அவர் விலக நினைத்து உடன் பிறந்தவர்களை வளர்ப்பதில் குறியாக இருக்கிறார். ஆனால், அவரது தம்பி செய்யும் ஒரு பிழையால் , தனுஷ் வன்முறை வழியைத் தேர்ந்தெடுத்து கத்தி எடுக்க வேண்டியதாகி விட்டது.அதன் பிறகு அவர் வாழ்க்கையில் நடந்த திசை மாற்றம் என்ன? தம்பி தங்கைகள் என்ன ஆனார்கள் என்பதை ரத்தம் தோயச்சொல்வது தான் ‘ராயன்’.
இது தனுசுக்கு ஐம்பதாவது படம் இயக்குநராக இயக்கியிருக்கும் படமும் கூட, என்பதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு ஒரு முழு நீள கமர்சியல் வெற்றிப்படமாக ஆக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு அதற்கான அனைத்து அம்சங்களையும் கலந்து அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
தான் ஏற்று உள்ள ராயன் பாத்திரத்தை நன்றாகச் சித்தரித்துள்ளார்.மொட்டை தலை முரட்டு மீசையுடன் கம்பீர தோற்றம் தொடங்கி பல்வேறு விதமான நடிப்பு தருணங்களுக்கு வாய்ப்பளித்து அந்தப் பாத்திரத்தை உருவாக்கி உள்ளார் .இந்தத் தோற்றத்தில் உள்ள இவரா இத்தனை கொலைகளைச் செய்தார் ?என்கிற கேள்விக்குப் பதிலாக அந்தப் பாத்திரத்தைச் சித்தரித்துள்ளார்.
தம்பி தங்கையிடம் பாசம் காட்டும் அண்ணனாகவும் துரோக வலியால் ஆவேசப்படுபவராகவும் பளிச்சிடுகிறார்.
தனுஷின் தம்பிகளாக வரும் சந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம், இளமை கொண்ட பாத்திரத்தில் ஒளிர்கிறார்கள். தனுஷின் தங்கையாக வரும் துஷாரா விஜயன்,தனக்கு ஏற்பட்டதை விட தனது அண்ணனுக்கு நேர்ந்த துரோகம் தாங்காமல் ஆவேசமாவது கவனம் ஈர்க்கிறது.
எதிர்மறை பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான டிரேட் மார்க் நடிப்பை வழங்கி கவர்கிறார்.செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், திலீபன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் படத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் இணைந்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னால் முடிந்த அளவிற்கு காட்சிகளின் வேகத்தையும், விறுவிறுப்பையும் கூட்ட உதவியுள்ளார்.ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமரா காட்சிகளை பிரமாண்டமானதாக மாற்றியுள்ளது.கலை இயக்குநர் ஜாக்கியின் கைவண்ணத்தில் ராயனின் இளம் வயது கிராமத்து வீடு, சென்னை குடிசைப்பகுதி, கிளைமாக்ஸ் பாடல் காட்சி என பின்புலங்கள் மிளிர்கின்றன.
படத்தின் விறுவிறுப்பில் பிசிறு தட்டாத வகையில் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் பிரசன்னா .
சண்டைக்காட்சிகளை யதார்த்த நோக்கில் அமைத்து கவனம் ஈர்க்கிறார் சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன்.
ஆக்சன் செண்டிமெண்ட் என்கிற சரிவிகிதக் கலவை செய்து அனைத்து தரப்பினரையும் கவரும் முழு நீள ஆக்சன் படமாக மாறி உள்ளது ராயன் .
சினிமாவின் வணிக நாடித் துடிப்பு அறிந்து தனது 50 வது படத்தை முழு நீள வெற்றிப் படமாக மாற்றி உள்ளார் இயக்குநர் தனுஷ்.
.