கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர். மனோகர், கிருத்திகா , கே ஆர் விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, பாவா லட்சுமணன், சேஷு, டைகர் தங்கதுரை, கல்லூரி வினோத் என ஏகப்பட்ட தெரிந்த முகங்கள் நடித்துள்ளனர்.ராம்நாத் டி இயக்கியுள்ளார்.இசை கணேஷ் ராகவேந்திரா, சின்னச்சாமி சினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.
ராயர் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். தன் தங்கை கஸ்தூரி காதலுனுடன் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டதால், காதலை வெறுக்கிறார். அதனால், தன் மகள் காதல் திருமணம் செய்து கொள்ள கூடாது என தீவிரமாக இருக்கிறார்.பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் மொட்டை ராஜேந்திரன் ஒரு சிறிய கட்சி நடத்துகிறார், அதன் செயல்திட்டம் காதலர்களை பிரித்து வைப்பது, அவர்கள் காதல் என்ற கருத்தை நம்புவதில்லை.
தனது ஊரில் யார் ஜோடியாகச் சேர்ந்து சுற்றினாலும் காதலிப்பதாகக் கூறினாலும் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் மூலம் அவர்களைப் பிரிக்கும் வேலையை மறைமுகமாக செய்வார். இப்படிப்பட்ட நிலையில் அந்த ஊருக்கு வருகிறார் நாயகன் கிருஷ்ணா. அவரை நாயகிகள் கிருத்திகா சிங், அனுஷா தவான் என இருவர் காதலிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய காதலை கிருஷ்ணா ஏற்கவில்லை. மறுத்து வருகிறார்.
இதற்கிடையே, தனது மகள் சரண்யாவைக் கிருஷ்ணா காதலிப்பதாக ராயர் நினைத்துக் கொள்கிறார். எனவே அவரைக் கொலை செய்யவும் ராயர் முடிவு செய்கிறார். அந்த சதித் திட்டத்திலிருந்து கிருஷ்ணா தப்பித்தாரா? இல்லையா? அவர் எதற்காக அந்த ஊருக்கு வந்தார்? போன்ற கேள்விகளுக்குப் பதிலாக நகைச்சுவை மூலம் பூசிக் காட்சிகள் அமைத்துப் படமாக்கி இருக்கிறார்கள்.இதுதான் ‘ராயர் பரம்பரை’ படக்கதை.
இந்தப் படத்தில் உற்சாகமான மகிழ்ச்சியான ஜாலியான கதாபாத்திரத்தில் வருகிறார் கிருஷ்ணா. மூன்று கதாநாயகிகளுடன் டூயட் பாட்டு, நடனம், காதல் என்று படம் முழுவதும் உற்சாக உலா வருகிறார்.அவரது பாத்திரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தொற்றிக் கொள்ள வைக்கும்.
கிருத்திகா சிங், அனுஷா தவான் , சரண்யா என மூன்று பேர் கதாநாயகிகள். அந்த மூன்று பேரும் தங்களுக்குக் கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்தது போல் தோன்றுகிறது. ஆனால் யாரும் பெரிதாக மனதில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.அந்த அளவிற்கு அந்தப் பாத்திரங்கள் பலவீனமாக உள்ளன.
மூன்று கதாநாயகிகளில் ஒருவரது அப்பாவாக ராயர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆனந்தராஜ் . வில்லத்தனத்திலும் நகைச்சுவை நிறத்திலும் அவர் காட்டியுள்ள நடிப்பு அவரது அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.’காதலர்களை கண்டதும் பிரித்துவிடும் கட்சி’ என்ற பெயரில் கட்சி நடத்துகிறார் மொட்டை ராஜேந்திரன்.
அவர், படம் முழுக்க வந்தாலும், டெம்ப்லேட் ரக நடிப்பால் நமக்கு சலிப் பூட்டுகிறார்.நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத் , தங்கதுரை இருவரும் மொட்டை ராஜேந்திரன் தவறவிட்ட சுவாரஸ்யப் பள்ளங்களை நிரப்பி சமன் செய்கிறார்கள்.இவர்கள் இருவரும் இணைந்து தோன்றும் காட்சிகள் சிரிப்பூட்டும் ரகம்.வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக்கு உத்திரவாதம் தரும் நடிப்பை வழங்கி உள்ளார்கள்.
வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சின்னசாமி மெளனகுரு வருகிறார்.படம் முழுக்க வந்த கலகலப்பூட்டுகிறார்.இறுதியில் குழந்தைப் பேறில்லாத தனது குறையைக் கூறி நம்மை கலங்க வைத்து விடுகிறார்.மனோபாலா, ஆர்.என்.ஆர்.மனோகர், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, சேஷூ ஆகியோர் தங்கள் தோற்றத்தின் மூலம் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு இயற்கை எழில் தவழும் இடங்களில் வண்ணமயமாக காட்சிகளைப் படமாக்கி உள்ளார்.கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை ரகம்.
பின்னணி இசையிலும் குறையில்லை.
ஒரு காதல் கதையை எடுத்துக்கொண்டு நகைச்சுவை ரசம் பூசி கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராமநாத்.டி. சில இடங்களில் திசை மாற்றம் இருந்தாலும் சொல்ல வந்ததை நகைச்சுவையோடு சொல்லி முடித்துள்ளார். முடியும் போது படத்தில் வரும் செங்கல்வராயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் வெடிச்சிரிப்பு வர வைப்பவை.
படத்தின் முதல் பாதியில் தளரவிட்ட கதையினை, இரண்டாவது பாதியில் இறுக்கிப் பிடித்து வெற்றி பெற்று விட்டார் இயக்குநர் ராமநாத்.டி.காதலர்கள் பெற்றோர்கள் என்று இருதரப்பினரின் குரலையும் எதிரொலித்துள்ளார். மொத்தத்தில், ‘ராயர் பரம்பரை’ நகைச்சுவை மசாலாப்படம் ஏமாற்றாத பொழுதுபோக்கு அனுபவம்.