‘ரெட்ட தல’ திரைப்பட விமர்சனம்

அருண் விஜய், சித்தி இத்நானி ,தான்யா ரவிச்சந்திரன், யோகிசாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளனர்.
கிரிஸ் திருக்குமரன் இயக்கியிருக்கிறார். இசை -சாம் சி எஸ், ஒளிப்பதிவு – டிஜோ டாமி, படத்தொகுப்பு – ஆண்டனி ,கலை இயக்கம் -அருண் சங்கர் துரை, ஸ்டண்ட் – பிசி ஸ்டண்ட்ஸ், தயாரிப்பு – பாபி பாலச்சந்திரன்.

மாஹிக்கு இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரம் என்று தொடங்குகிறது படம்.காளியும் ஆந்த்ரேயும் பெற்றோர் இல்லாமல் வளர்கிறார்கள். சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் கொடிய கசப்பான அனுபவங்கள் அவர்களை இறுக்கமாக்குகிறது.பெற்றோரின் அரவணைப்பின்றி வளர்வதால் அவர்களுக்குள் அன்புக்கான ஏக்கம் உண்டு.ஒருவருக்கொருவர் துணை என்று வளர்கிறார்கள்.ஆந்த்ரே அவனுக்கொரு கடிகாரம் பரிசளிக்கிறாள்.தன் நினைவாக எப்போதும் இருக்கட்டும் என்று கூறுகிறாள்.தனது மகிழ்ச்சிக்கு எல்லாம் காரணம் அவள் தான் என்று காளி கருதுகிறான்.

வேலை காரணமாக வெளியூர் செல்கிறான் காளி.ஐந்து வருடங்கள் ஓடி விடுகின்றன.தன் அன்புக்குரிய ஆந்த்ரேயைச் சந்திக்க பாண்டிச்சேரி வருகிறான்.அவளிடம் மனமாற்றம் தெரிகிறது. ஒரு காலத்தில் அன்புக்கு ஏங்கியவள் , இப்போது பணம்தான் அனைத்திற்கும் பிரதானம் என்கிற மனப் போக்குடன் இருக்கிறாள்.பணம் தான் நமது காதலைத் தீர்மானிக்கும் என்கிறாள்.அவளுக்காகப் பணத்தைத் துரத்துகிறான்.ஒரு கட்டத்தில் தன்னைப் போலவே தோற்றத்தில் இருக்கும் உபேந்திராவைச் சந்திக்கிறான் காளி. அந்த உபேந்திரா ஒரு பணக்காரன் . குற்ற நிழல் படிந்தவன் .சிறையிலிருந்து பரோலில் வந்திருக்கிறான். தோற்ற ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு காளி,உபேந்திராவாக மாறி அவனது சொத்துகளை அனுபவிக்கலாம் என்று காதலர்கள் திட்டமிடுகிறார்கள்.அதனால் காளி உபேந்திராவைக் கொலை செய்து விடுகிறான்.ஆனால் அதற்குப் பிறகு காளியின் பாதை சொகுசாக இல்லை .காளிக்குப் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுக்கின்றன. உபேந்திராவின் உண்மை முகம் தெரிய வரும்போது காளி வாழ்க்கை சிக்கலாகிறது.வாழ்வா சாவா என்கிற மரணப் போராட்டம். முடிவு என்ன என்பதுதான் 113 .40 நிமிடங்கள் கொண்ட’ ரெட்ட தல’ படத்தின் மீதிக் கதை.

அருண் விஜய் ‘ரெட்ட தல ‘படத்தில் இரண்டு முகம் காட்டுகிறார் .ஸ்டைலான தோற்றம், அதற்கேற்ற உடல் மொழி என்று இரு வேடங்களிலுமே ஸ்கோர் செய்கிறார் அருண் விஜய். அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். ஆனால் இவ்வகை குணச்சித்திரம்  ஏற்கெனவே பார்த்து அனுபவத்தை தருகிறது.இந்த யானைப் பசிக்கார நடிகருக்கு மேலும் தீனி போட்டிருக்கலாம்.

பணத்தின் மீது பேராசை கொண்ட ஒரு பெண்ணாக வரும் நாயகி சித்தி இத்நானி எதிர்மறை நிழல் படிந்த பாத்திரத்தில் வருகிறார் .அவர் நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

வழக்கமான வெறுப்பேற்றும் போலீஸ்காரராக வருகிறார் ஜான்விஜய். அவர் பேசும் சில வசனங்கள் எரிச்சல் ரகம்.

உபேந்திரா – காளி என்று இருதுருவ மோதல் நிலவும் போர்க்களத்தில் ஹரிஷ் பெராடி , யோகேஷ், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர்முனையில் வருகிறார்கள். அவர்களுக்கான காட்சிகளில் தோற்றங்களில் பிரம்மாண்டமும் பரபரப்பும் உள்ளன.ஆனாலும் அந்த குணச்சித்திரங்களை மேலும் வலுவாக அமைத்திருக்கலாம்.

ஒரு திரில்லருக்கான அழகான கேன்வாஸில் சரியான ஒளியமைப்பில் இயக்குநர் சொல்ல விரும்பிய திரை மொழியைக் காட்சிகளாக மாற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி.
இருட்டையும் ரசிக்க வைக்கும் வகையிலான ஒளியமைப்பில் காட்சிகளை உருவாக்கியுள்ளார். இவரது ஒளிப்பதிவில் பாண்டிச்சேரி ,கோவா என்ற நிலக்காட்சிகள் கண்களுக்கு விருந்து.

சண்டைக் காட்சிகளிலும் அதே தரத்தை பராமரித்துள்ளார்கள். சாம் சி.எஸ்ஸின் இசையில் பாடல்களை விடப் பின்னணி இசை அமர்க்களம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சர்ப்ரைஸ் காட்டியுள்ளார்.

நாயகனின் இரட்டை வேடம் கதாநாயகியின் பேராசை அக்னி குண்டத்தில் குதிப்பது போல் சாகசம் செய்ய இறங்கி துப்பாக்கி முனைகளை எதிர்கொள்ளும் நாயகன் என்ற கற்பனை சுவையான ஒன்றுதான் .இந்த ஒரு வரி பார்வையாளர்களை இருக்கை நுனிக்குக்கொண்டு வரப் போதுமானது.இந்த ஒரு வரியை விரித்துத் திரைக்கதையாக்கி முழுப் படமாக மாற்றும் போது ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் தலைகாட்டவே செய்கின்றன.

காதலர்கள் இருவர் முன்னும் மரணம் வந்து நிற்கிறது. யார் எப்படி முடிவு எடுக்கிறார்கள் என்பது ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு.இப்படி கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட்கள் ஆச்சரிய மின்னல்கள்.மொத்தத்தில் இந்த ’ரெட்ட தல’ படம் ஒரு ஸ்டைலிஷ் ஆன ஆக்சன் அனுபவத்தைத் தருகிறது எனலாம்.