‘ரேகை’ இணையத் தொடர் விமர்சனம்

புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இணையத் தொடர் ‘ரேகை’.
இத்தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, கோபலன் பிரகதேஷ்,வினோதினி வைத்தியநாதன்,அஞ்சலி ராவ், ஸ்ரீராம் எம் , இந்திரஜித் ஈ,பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்தொடரை இயக்கி இருக்கிறார் தினகரன்.எம் .  எஸ் எஸ் குரூப் புரொடக்ஷன் சார்பில் எஸ்.சிங்காரவேலன் தயாரித்துள்ளார் .இது ஜி5 ஓடிடி தளத்தில் 28ஆம் தேதி வெளியாகிறது..

சம்பந்தமில்லாத விதத்தில் ஒரே நேரத்தில் நான்கு கொலைகள் நடக்கின்றன. காவல்துறை எப்போதும் இப்படிப்பட்ட கொலைகளை ஒப்பிட்டு பொருத்திப் பார்க்கும் .அப்படி இந்தக் கொலையில் ஏதாவது பொதுமையான அடையாளம், ஆதாரம் இருக்கிறதா என்று பார்க்கிறது. ஆனால் தடயங்கள் சிக்கவில்லை. கிடைக்கிற தடயங்கள் ஒன்று போல் உள்ளன . ஒரே விதத்தில் ரேகையைக் கண்டுபிடிக்கிறார்கள்.அது எப்படி நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டதற்கு ஒரே மாதிரியாக ரேகை இருக்கும் என்று கேள்வி எழுகிறது. புலனாய்வு தொடங்கத் தொடங்க, புதிர்கள் துலங்கத் தொடங்குகின்றன . இந்தக் கொலைகளைச் செய்தது யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது அதிர வைக்கும் காட்சிகள். முடிவு என்ன என்பதுதான் ‘ரேகை’ இணையத் தொடரின் பரபர கிளைமாக்ஸ்.

ஏழு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர் தென்காசி, குற்றாலம் பின்னணியில் நடக்கும் கதைச் சூழலில் சம்பவங்கள் விரிகின்றன. ஒவ்வொருவராக கொலை செய்யப்படுவதும் அதன் பின்னணியில் தொடரும் மர்மங்களும் யூகித்தறியத் தடையாக இருக்கும் தடயங்களும் இத்தொடரை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கின்றன. சாதாரண குற்றமாக கருதப்படும் ஒன்று எப்படி மருத்துவ மாஃபியா வரை செல்கிறது என்பது திகிலூட்டும் காட்சிகள்.அதற்கான ஒளிப்பதிவும் இசையும் தொடரின் வேகத்தை உயர்த்திப் பிடித்து இதயத்துடிப்பினை எகிற வைக்கின்றன.

இதில் நிகழும் மரணங்களை சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து சாதாரண மரணம் என்று அனைவரும் கோப்புகளை மூட முயற்சி செய்ய,துடிப்பான காவல் அதிகாரி வெற்றியோ அவர்களுக்கு எதிராக உண்மையைத் தேடும் பயணத்தைத் தொடங்குகிறார். அவருக்குத் துணையாக வருகிறார் சந்தியா என்கிற பெண் காவலர்.
வெற்றியாக நடித்திருக்கிறார் பால ஹாசன் .கட்டான உடலுடன் கம்பீரமான தோற்றத்துடன் வந்து அனைவரையும் கவருகிறார். பெண் காவலராக வருகிறார் பவித்ரா.தோற்றத்திலும் நடிப்பிலும் மனதில் பதிகிறார்.யாரும் எதிர்பாராத எதிர்மறை சாயல் கொண்ட பாத்திரத்தில் வந்து கலங்கடிக்கிறார் வினோதினி .இவர்கள் தவிர நடித்திருக்கும் அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தங்கள் பணியைச் சிறப்பாக செய்துள்ளனர்.குறை சொல்ல ஒன்றும் இல்லை.
கதை நிகழும் பின்புலத்தில் கவனம் சிதற விடாதபடிக்கு கதாபாத்திரங்களின் உணர்வுகளைக் கடத்தியுள்ள பணியைச் செய்துள்ள வகையில் ஹென்றியின் ஒளிப்பதிவும் இசையும் பாராட்டத்தக்கவை.

யோசிக்க முடியாதபடிக்கு கதையை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று ஒரு முழு நீள திருப்தியான இணையத் தொடர் அனுபவத்தை அளிக்கிறது இந்த ‘ரேகை’.ராஜேஷ்குமாரின் சிந்தனையை மையமாக வைத்து பின்னப்பட்ட அழகான திரைக்கதையால் இத்தொடரை வெற்றிகரமாக இயக்கி இருக்கிறார் தினகரன்.

இப்படிப் பெரிய எழுத்தாளர்களின் கதையைப் பின்னணியாக வைத்து ஏராளமான காட்சி ஊடகத் தொடர்களை,திரைப்படங்களை என படைப்புகளை உருவாக்கி ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரலாம். ஜி 5 இப்போது தொடங்கியுள்ளது தொடரட்டும்.