ரோஜா கம்பைன்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘மாம்போ’-வின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு அறிவிப்பு விழா!

பெண்ணின் மனதை தொட்டு, தேவதையை கண்டேன், பேரரசு போன்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தயாரிப்பாளர் M.காஜா மைதீன் அவர்களின் ‘ரோஜா கம்பைன்ஸ்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் தயாரிப்பு பணிகளை துவங்கி உள்ளது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு தயாரிப்பதால் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய அவர்கள் மைனா,கும்கி,கயல்,செம்பி போன்ற தலைசிறந்த திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அவரது
எழுத்து மற்றும் இயக்கத்தில், அவரது ஆஸ்தான இசையமைப்பாளரான D.இமான் அவர்களின் இசையில், பழம்பெரும் நடிகர் விஜயகுமார் அவர்களது பேரனும், நடிகர் ஆகாஷ் அவர்களின் மகனுமான விஜய் ஶ்ரீஹரி கதாநாயனாக அறிமுகமாக, நடிகர் ‘யோகி’பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மாம்போ’ திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.

‘மாம்போ’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

முன்னதாக இசையமைப்பாளர் D.இமான் படத்தின் பின்னணி இசைக் கோர்வையை தனது இசைக் குழுவுடன் வாசிக்க, படத்தின் பெயருடன் கூடிய முதல் தோற்றக் காணொளி வெளியிடப்பட்டது.

தயாரிப்பாளர் காஜா மைதீன்

பின்னர் படத்தின் தயாரிப்பாளர் காஜாமைதீன் அனைவரையும் வரவேற்று பேசும்பொழுது,”எங்களது அழைப்பை ஏற்று வந்திருக்கும் நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

T.சிவா

அவரை தொடர்ந்து ‘அம்மா கிரியேஷன்ஸ்’ T.சிவா அவர்கள் வாழ்த்தி பேசும் பொழுது,”தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் எனும் திரைப்படத்தை தந்தது மட்டுமல்லாமல், அவர் படம் தயாரித்துக் கொண்டிருந்த காலம் தமிழ் சினிமாவிற்கு பொற்காலமாக இருந்தது. 100% சினிமாவை நேசிக்கக் கூடிய, வேட்கை கொண்ட, போராட்ட குணமுடைய தயாரிப்பாளர்களால் மட்டுமே இங்கு நீடித்திருக்க முடியும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னாள் நண்பர்கள் சந்தித்துக்கொண்ட தருணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. அவரது தயாரிப்பு நிறுவனம் ஒரு குடும்பம் போன்றது. அதில் நாங்கள் எல்லாம் ஒரு குடும்ப உறுப்பினர்களாக என்றுமே இருப்போம். நல்ல சிறந்த கதையம்சம் கொண்ட வித்தியாசமான திரைப்படத்தை தரக்கூடிய தலைசிறந்த இயக்குனர் பிரபுசாலமனுடன் இணைந்து தனது தயாரிப்பை மீண்டும் துவங்கி உள்ளார். தயாரிப்பாளர்களின் இசையமைப்பாளராக இருக்கும் D.இமான் போன்றவர்களால் தான்  தயாரிப்பாளர்கள் இன்னும் தங்கள் பயணத்தை தெடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘லயன் கிங்’ உலக அளவில் வெற்றி அடைந்தது போல இந்த ‘மாம்போ’ திரைப்படமும் வெற்றியடைய  வாழ்த்துகிறேன்,” என்றார்.

தனஞ்ஜெயன்

தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசும்பொழுது,” இயக்குனர் பிரபு சாலமன் மிருகங்களை வைத்து எடுக்கும் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதே போல இந்த  படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். படத்தின் தயாரிப்பாளருக்கும் எனக்கும் 24-ஆண்டு கால பழக்கவழக்கம் உள்ளது. பிரபு சாலமன் படைப்புகள் அனைத்தும் இயற்கையோடு இணைந்தவையாக இருக்கும். D.இமான் அவர்களும் புதுமையான விதத்தில் முதல் தோற்றக் காணொளியுடன் தனது
இசைக்குழுவையும் வாசிக்க வைத்தது, சிறப்பாக இருந்தது. இந்த ‘மாம்போ’ திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று முடித்தார்.

கே.எஸ்.அதியமான்

அடுத்ததாக இயக்குனர் கே.எஸ்.அதியமான் பேசும்பொழுது,” ஒவ்வொரு திரைப்படத்தையும் சிறந்த திரைப்படமாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். பிரபு சாலமன்-இமான் கூட்டணியில் கும்கிப் படத்தைப் போலவே இந்த ‘மாம்போ’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்றார்.

ராஜ்கபூர்

தொடர்ந்து பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ராஜ்கபூர்,”காஜா மைதீன் அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த பொழுது மிகச் சிறந்த கதையம்சம் கொண்ட வெற்றிப் படங்களை மட்டுமே  கொடுத்துக் கொண்டிருந்தார். மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட தலைசிறந்த தயாரிப்பாளர். தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பிரபு சாலமன், அவருடன் இமானுடைய கூட்டணி இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் என்று வாழ்த்துகிறேன்”,என்றார்.

கிருஷ்ணா

இயக்குனர் கிருஷ்ணா பேசும் பொழுது,”படத்தின் தயாரிப்பாளர் காஜா மைதீனுக்கும் எனக்கும்  நல்ல நட்பும்,அன்பும் உண்டு.  இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் இயற்கையை சார்ந்து திரைப்படம் எடுப்பதில் தனித்திறன் மிக்கவர்.  விஜய் ஶ்ரீஹரியை நான் சிறுவனாக பார்த்தேன், இன்று அவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம்  மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்று நிறைவு செய்தார்.

சித்ரா லட்சுமணன்

சித்ரா லட்சுமணன் வாழ்த்திப் பேசிய பொழுது,”காஜாமைதீன் அனைவருக்கும் நெருக்கமானவர் இந்த மேடையில் நிற்பது என்னுடைய தயாரிப்பு மேடையில் நான் இருப்பதை போல மிக மகிழ்ச்சியாக உள்ளது. அவரது அலுவலகம் ஆலமரத்தை போன்றது அனைவரும் அங்கே கூடுவோம். அவர் தனது தயாரிப்பில் யாருக்கும் எந்த நிலுவைத் தொகையும்  வைக்காமல் உடனுக்குடன் கொடுத்து விடுவார். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழையே மிகவும் சிரத்தையோடு அவர்கள் உருவாக்கியுள்ளனர், அதிலேயே அவர்களது உழைப்பு தெரிகிறது. இந்த காணொளியை காணும் போதே படத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு தெரிகிறது.
படத்தின் கதாநாயகன் ஸ்ரீஹரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பிரபுசாலமன்-இமான் கூட்டணி மிகச் சிறந்த கூட்டணி. இந்த படக்குழுவினருக்கு படம் வெற்றியடையவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

கணேஷ் கே பாபு

‘டாடா’ எனும் வெற்றிப் பட இயக்குனர் கணேஷ்.கே.பாபு

பேசும்பொழுது,” நான் இந்த மேடையில் இருப்பதற்கு இந்த படக்குழுவில் இருக்கும் காஜா மைதீன், பிரபு சாலமன் போன்றோரும் ஒரு காரணம். இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் எனக்கு ஒரு முன்மாதிரியான நபர். எனக்கு இந்த மேடையில் இடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி. விஜய் ஶ்ரீஹரியுடன்  இணைந்து பணியாற்றவும் ஆசைப்படுகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் “,என்றார்.

விநாயக் சந்திரசேகர்

‘குட் நைட்’ திரைப்பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் பேசும்பொழுது,”நான் பார்த்து வியந்த முக்கியமான மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். இந்த மேடை எனக்கு மிகவும் சிறப்பானது. ‘குட் நைட்’ படம் திரையிடுவதற்கு முன்பு மைனா,கும்கி போன்ற திரைப்படங்களை கற்றலுக்காக மீண்டும் பார்த்தேன். அதேபோல மிகச்சிறந்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், இருவரது கூட்டணியும் தமிழ் சினிமாவில் தலைசிறந்த கூட்டணி ஆகும்.
இத்திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் படம் மிகப்பெரிய வெற்றியடையவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”,என முடித்தார்.

பின்னர் நடிகர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

நடிகர் விஜயகுமார்

அதைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஜயகுமார்,”இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்த முடியும் என்று இயக்குனர் பிரபு சாலமன்  நிரூபித்துள்ளார். நிகழ்ச்சி வருகை தந்திருக்கும் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் ஶ்ரீஹரி வாழ்க்கையில் தன்னைத்தானே ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றினார். பின்னர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து, அவரது  ஆலோசனையுடன் அவரது அப்பா நடிகர் ஆகாஷ் அவர்களது ஆசைக்கிணங்க பிரபு சாலமன் இயக்கத்தில், அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு எடுத்தோம். தயாரிப்பாளர் காஜா மைதீன் அவர்களது ஒத்துழைப்புடன் இந்த படம் மிகப்பெரிய படமாக வந்துள்ளது. அனைவரது ஆசியிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”, என்றார்.

இயக்குனர் பிரபு சாலமன்

இறுதியாக நன்றி தெரிவித்து இயக்குனர் பிரபு சாலமன் பேசிய பொழுது,” நான் குழந்தைகளுக்கான உலகத் தரத்திலான படம் எடுக்க வேண்டும் என்று விரும்புவேன். அப்படி ஒரு படம் தான் இது. தலைசிறந்த கதைக்கரு மீது நம்பிக்கை இருந்தது, மேலும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களிடம் கதையைக் கூறினேன். பிறகு படத்தின் தலைப்பு மற்றும் அறிமுக விழா இந்த அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது. எங்களது படக்குழுவும் தங்களது கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விரைவில் சிறப்பான இசை வெளியீட்டு விழாவில் சந்திப்போம். ஊடகத் துறையினரின் ஒத்துழைப்புக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”,என நிறைவு செய்தார்.

‘மாம்போ’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு அறிவிப்பு விழா இனிதே நிறைவுற்றது.