துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி, ராம்கி, மானசா ,சூர்யா சீனிவாஸ், சர்வத்மான் டி.பானர்ஜி,சிறுவன் ரித்விக்,சச்சின் கெடேக்கர், சாய்குமார், டினு ஆனந்த், சிவ நாராயணா நரி பெட்டி, சரண் லக்க ராஜு நடித்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் அண்ட் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூரிய தேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர்.
மனிதனின் மனஇயல்புகளை மாற்றக்கூடிய சக்தி அதிகாரத்திற்கும் பணத்திற்கும் உண்டு.அதனால்தான் பணம் உள்ளவர்கள் அதிகாரம் கொண்டவர்களாகவும் அதிகாரம் கொண்டவர்கள் அதன் மூலம் பணத்தை ஈட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
பணத்தின் மீது பற்று வந்துவிட்டால் அதை அடையும் வழிகளில் இருக்கிற கறைகளைப் பற்றி கவலைப்படாத மனம் வந்து விடுகிறது.
அன்றாடத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் ஒரு நாயகன் பணத்தேவை ஏற்படும் போது எப்படி மாறுகிறான்?அந்த ஆசை அவனை எப்படி ஆட்டி வைக்கிறது? அதுவரை துரதிர்ஷ்டசாலியாக தொட்டதெல்லாம் துலங்காத அன்லக்கி பாஸ்கர் ஆக இருக்கும் துல்கர், குறுக்கு வழியில் சென்று எப்படி லக்கி பாஸ்கர் ஆக மாறுகிறார்? என்கிற பாதையில் செல்லும் கதை தான் ‘லக்கி பாஸ்கர்’.
இக்கதை மும்பையில் தொடங்கி நடக்கிறது.நாயகன் துல்கர் சல்மான் மஹதா வங்கியில் காசாளராக இருக்கிறார்.குடும்ப பண நெருக்கடிகளில் விழி பிதுங்கித் தவித்து நிற்கிறார்.அதன் விளைவாக புறக்கணிப்புகள் அவமானங்களை எதிர்கொள்கிறார்.எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்.அந்த வழியில் நேர்மை நீதி நியாயத்திற்கு இடமில்லை என்று மனம் நினைக்கிறது.துணிந்து அந்த வழியில் செல்கிறார். வங்கியில் பணத்தில் கை வைக்கிறார் .அது அவரை ஏராளமான பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்கிறது. அவற்றைச் சமாளித்தாரா? சிக்கிக்கொண்டாரா? அவர் எதிர்கொள்ளும் சவால்களின் பயணம்தான் ‘லக்கி பாஸ்கர்’.
ஒரு படத்தின் நாயகன் என்கிற இளைய வயது தோற்றத்திலிருந்து சற்று முதிர்ந்த ஒருகுழந்தைக்குத் தகப்பனான குடும்பஸ்தராக பாஸ்கர் என்கிற பாத்திரத்தில் துல்கர் சல்மான் வருகிறார்.பிரச்சினைகளின் போது அதிகம் வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே சிந்தித்துச் செயல்படும் ஒரு பாத்திரம்.சிக்கல்கள் நேரும் போது நடந்தது எண்ணி கலங்காமல் அடுத்தது என்ன என்று யோசிக்கும் மனநிலை உள்ள பாத்திரத்தில் தோற்றம் ,உடல் மொழி ,பேச்சு ,முகபாவனை என்று அசத்தியுள்ளார்.
பதவி உயர்வு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில், வங்கி மேளாளரிடம் பொங்கி ஆவேசமாகி பிறகு அவரிடமே அழுது கெஞ்சும் காட்சியிலும் சரி, அடுத்த சில நிமிடங்களில் அந்தச் சூழலை மறந்துவிட்டு மனதைச் சம நிலையாக்கி சாதாரண நிலைக்கு திரும்பும் போது சரி,நடிப்பில் முத்திரைகள் பதிக்கும் தருணங்களாக உணர வைக்கிறார்.
துல்கர் சல்மானின் மனைவியாக நடித்திருக்கிறார் மீனாட்சி செளத்ரி.அழகிய தோற்றம், ஜீவன் உள்ள கண்கள், இயல்பான முக பாவனைகள் என்று எந்தக் குறையும் இல்லாமல் வருகிறார்.ஆண்டனி என்கிற கதாபாத்திரத்தில் வரும் ராம்கி,மானசா ,சூர்யா சீனிவாஸ், சர்வத்மான் டி.பானர்ஜி,சிறுவன் ரித்விக்,சச்சின் கெடேகர், சாய்குமார், டினு ஆனந்த், சிவ நாராயணா நரி பெட்டி, சரண் லக்க ராஜு போன்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் குறை இல்லாத நடிப்பை வழங்கி உள்ளனர்.தங்கள் பாத்திரத்தின் இருப்பைப் பதிவு செய்துள்ளனர்.
எண்பதுகள் தொண்ணூறுகள் என்று கதை பயணித்தாலும் அந்த காலகட்டத்தைக் கண் முன் நிறுத்தி,காட்சிப் படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி. அவரது ஒளிப்பதிவில் கதையின் தீவிரத் தன்மைக்கு ஏற்றபடி காட்சிகளைப் பிரமாதப்படுத்தியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசையில் வழக்கமான கருவிகளை விடுத்து புதிய ஒலியில் ஒளிர்கிறார்.
கதையின் பின்புலம் மும்பை என்பதே படத்திற்கு வேறொரு நிறத்தையும் தரத்தையும் கொடுத்து விடுகிறது.காட்சிகளுக்கு அது ஒரு பிரம்மாண்ட கேன்வாஸ் ஆக அமைகிறது.
நவீன் நூலியின் படத்தொகுப்பு திரைக்கதை செல்லும் பாங்கில் அமைந்துள்ளது.90 கள் காலக்கட்டத்தின் மும்பையை வடிவமைத்த கலை இயக்குநரின் பணிபாராட்டத்தக்கது.
ஒரு சாமானியன் தன் குடும்பத்தின் வலியைப் போக்கவும்,அவமானத்தைத் துடைக்கவும் எந்த எல்லைக்கும் செல்வான் என்று சொல்கிற கதை.இதில் ஒவ்வொரு சாமானிய இந்தியனும் தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்வான்.வங்கி மோசடி, பங்குச் சந்தை மோசடி ஆகியவற்றின் பின்னணியில் இந்திய நடுத்தர குடும்ப மக்களின் வாழ்க்கைப் போராட்டமாக கூறப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒரு நேர்த்தியான படைப்பாக அளித்துள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி.சிறு சிறு தவறுகள் செய்பவன் எப்படிப் பெரிய தவறுக்கு இட்டுச் செல்லப்படுகிறான் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளார்கள்.
வங்கியில் நடைபெறும் மிகப்பெரிய மோசடிகள், பங்குச் சந்தை மோசடி ஆகியவற்றை இப்படத்தின் மூலம் எளிய மக்களுக்குக் கடத்தியுள்ளார் இயக்குநர் வெங்கி.
மொத்தத்தில் இந்த லக்கி பாஸ்கர் ஒவ்வொரு சாமானியனும் தன்னை நேரில் கண்டு உணரும் தருணத்தை அளிக்கிறது.
‘லக்கி பாஸ்கர் வழக்கமான டெம்ப்ளேட் கதைகளிலிருந்து சற்று விலகி நின்று வெளியாகி இருக்கிற படமாக ரசிக்க வைக்கிறது.அந்த வகையில் பார்வையாளர்களைத் திருப்தி செய்யும் படம் என்றே கூறலாம்