‘லவ் மேரேஜ்’ திரைப்பட விமர்சனம்

விக்ரம் பிரபு ,சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ் ,சத்யராஜ், ரமேஷ் திலக் ,கஜராஜ் ,அருள் தாஸ் நடித்துள்ளனர்.ஷண்முகப்ரியன் எழுதி இயக்கியுள்ளார் .ஒளிப்பதிவு  மதன் கிறிஸ்டோபர் , படத்தொகுப்பு  பரத் விக்ரமன்,  இசை ஷான் ரோல்டன் ,பாடல்கள் மோகன் ராஜன் – ஷான் ரோல்டன். அஷ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் நிறுவனங்கள் சார்பில் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளனர்.

ஒரு கிராமத்தில் துணிக்கடை வைத்திருக்கும் விக்ரம் பிரபுவிற்குத் திருமணம் தள்ளிக் கொண்டே போய் 33 வயது ஆகிவிடுகிறது. அதனால் சொந்த பந்தங்களில் கூட பெண் இல்லாமல் ஜாதி மாறி கூட கல்யாணம் செய்துவிடலாம் என்று வேறு ஊரான குழப்பலூர் என்ற ஊருக்குப் பெண் பார்க்கச் செல்கிறார்கள், நிச்சயதார்த்த ஏற்பாட்டோடு செல்கிறார்கள்.பெண்ணும் அவருக்குப் பிடித்து விடுகிறது. நிச்சயதார்த்தத்துடன் ஊருக்குத் திரும்பலாம் என்றால் அதற்குள் கொரோனா லாக் டவுன் வந்து விடுகிறது. அங்கேயே தங்க நேரிடுகிறது.அந்தப் பெண் சுஷ்மிதா இவருக்குப் பிடித்து போகிறது, நெருங்கிப் பழகும் போது,அவர் அந்த அளவிற்கு நெருங்காதது போல் இருக்கிறார். பிறகு அவர் வேறொருவரைக் காதலிப்பது  தெரிகிறது. ஒரு வாரத்தில் திருமணம் என்று முடிவு செய்து மகிழ்ச்சியாக இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று சுஷ்மிதா காணாமல் போய்விடுகிறார். விக்ரம் பிரபு அதிர்ந்து போய் விடுகிறார். தனது விதியை நினைத்து நொந்து போகிறார். விரக்தியில் கோபமாக இருக்கிறார். அப்போது சுஷ்மிதாவின் தங்கை மீனாட்சி தினேஷ் ,விக்ரம் பிரபுவுடன் நெருங்கி வருகிறார் .முதலில் விக்ரம் பிரபு அதை நம்ப முடியாமல் தவிர்க்கிறார். பிறகு இருவரும் வாழ்க்கையில் இணைந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது,ஒரு நாள் காணாமல் போன சுஷ்மிதா திடீர் என்று வருகிறார்.அவரது காதல் எல்லாருக்கும் தெரிகிறது. தங்கள் குடும்பத்துக்கு நிச்சயமான பெண் வீட்டை விட்டு வெளியேறி திரும்பி வந்ததால் அருள்தாஸ் ஆவேசப்பட்டு சண்டை போடுகிறார். இரு குடும்பத்திற்கும் இடையில் களேபரம் ஆகிறது.விக்ரம் பிரபு குடும்பம் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்து வெளியேறுகிறார்கள். விக்ரம் பிரபு மீனாட்சியைப் பார்க்க திரும்பி வருகிறார்.ஆனால் பொது முடக்கம் அவர்களை சொந்த ஊருக்குச் செல்ல விடாமல் தடுக்கிறது. அதற்கு பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை.

ஒரு கிராமத்து மண்ணின் எளிய காதல் கதையை நகைச்சுவை முலாம் பூசி 126.37 நிமிடங்கள் கொண்ட படமாகக் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் ஷண்முகப் பிரியன்.விக்ரம் பிரபு இதில் ராமச்சந்திரன் என்கிற பாத்திரத்தில் வருகிறார். திருமண ஏக்கத்தில் இருந்தவருக்கு முதலில் ஒரு பெண்ணைப் பார்க்கும் போது கனவுகள் அலை அலையாக வருகின்றன. அதை முகத்தில் காண்பித்து அவர் மகிழும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. தனது திருமணம் நின்று போனது குறித்து மற்றவர்கள் கேலி செய்யும் போது ஆவேசமாக அவர் சண்டை போடும் போதும், மீனாட்சி தினேஷ் மீது வேறொருவன் சீண்டல் செய்யும் போது  அவன் நண்பர்கள் கூட்டத்தையும் அடித்துத் துவம்சம் செய்யும் போதும் முரட்டு ஆக்சன் அவதாரம் காட்டுகிறார். மற்றபடி ஒரு குடும்பத்தில் எளிய இளைஞராக அனுதாபங்களை அள்ளுகிறார். அம்பிகாவாக வரும் சுஷ்மிதா அதிகம் பேசாமலேயே அவரது பாத்திரத்தை உணர வைக்கிறார். ராதாவாக வரும் மீனாட்சி தினேஷ்,  நல்ல நிறம் அழகு என்று விக்ரம் பிரபுவை காதலிக்கும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.சத்யராஜ் அமைதிப்படை நாகராஜசோழனை  நினைவூட்டும் எம்எல்ஏ பாத்திரத்தில் வந்து கலகலப்பூட்டுகிறார். ரமேஷ் திலக் நல்ல நண்பனாக வந்து அவர் கடமையைச் செய்துள்ளார். விக்ரம் பிரபுவின் தந்தையாக கஜராஜ் வருகிறார். ஒரு பொறுப்புள்ள தந்தையாக அவர் நடித்துள்ளார். விக்ரம் பிரபுவின் மாமாவாக வரும் அருள்தாஸ் வில்லனைப் போல் தோன்றினாலும் அந்தப் பாத்திரத்தின் இயல்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார். இப்படி எளிய பாத்திரங்களின் மூலம் ஒரு யதார்த்தமான படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் .குறிப்பிட்ட லொகேஷன்களில் கதை நடந்தாலும் சலிப்பூட்டாமல் இந்தப் படம் பார்க்கும்படி உள்ளது .

மோகன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு கதை, பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் உள்ளது.ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும் பின்னணியும் குறை சொல்ல ஒன்றும் இல்லை.கல்யாண கலவரமே என்ற ஜாலி பாடலும், எனக்கு டார்ச்சர் என்கிற போதை பாடலும், பேஜாராவுரேன் போன்ற பாடல்களும் கேட்க வைக்கின்றன.

எளிமையான கதை அளவான பட்ஜெட் குறைந்த படப்பிடிப்பிடங்கள் தேவையான நடிகர்கள் என்ற பார்முலாவில் வரும் படங்கள் இப்போது வெற்றி பெறுகின்றன .அந்த வகையில் இந்த படமும் வெற்றி நோக்கிச் செல்லும். மொத்தத்தில் இந்தப் படம் கலகலப்புக்கு கேரண்டி.