அனுபமா பரமேஸ்வரன் , சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட் , லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா அழைத்துள்ளனர்.
ஏ. ஆர் .ஜீவா இயக்கியுள்ளார் ஒளிப்பதிவு கே.ஏ. சக்திவேல், இசை என் .ஆர் . ரகுநந்தன். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
கொரோனா நெருக்கடி காலம் எத்தனையோ கதைகளை உருவாக்கியுள்ளது. அதில் ஒரு கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்தான் கதை நாயகி அனுபமா பரமேஸ்வரன்.நல்ல வேலை தேடும் முயற்சியில் இருக்கிறார்.ஐடி துறையில் இரவு நேர பணியாகவே கிடைக்கிறது.எனவே நல்ல பகல் நேர வேலைக்கான தேடலில் அவர் இருக்கிறார். ஒரு நாள் வேலை சார்ந்து தனது தோழியுடன் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறார். அது பார்ட்டி கலாச்சாரம் உள்ள இடம்.அந்த உல்லாச உலகத்தைப் பார்த்து மனம் அலை பாய்கிறது. இவை பெற்றோருக்குத் தெரியாது.ஒரு கட்டத்தில் தன்னிலை மறக்கிறார்.அது மட்டுமல்ல மெய் மறந்த நிலையில் அவர் கர்ப்பம் ஆகிறார்.அது அவருக்கே தெரியாது .பிறகான நாளில் தான் தெரிகிறது. கர்ப்பத்திற்குக் காரணமானவர்கள் யார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை.அது கொரோனா காலம். எங்கும் ஊரடங்கு நிலை கொண்டிருந்தது. கருவும் பிரச்சினையும் வளர்ந்து கொண்டிருக்கிறது.எனவே தனது சிக்கலுக்குத் தீர்வு காண முடியாமல் தவிக்கிறார்.இந்தப் பிரச்சினையை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதனை ஒரு பெண்ணின் பார்வையில் உணர்ச்சி மயமாகச் சொல்வதுதான் ‘லாக் டவுன்’ படத்தின் மீதிக் கதை.
பிரச்சினைகளை யாரிடமும் சொல்லாமல் ஒத்திப் போடுவது ,மூடி மறைப்பது கூடாது என்று ஆண்களுக்கும் பெண்களுக்குமான செய்தியாக இந்தப் படம் இருக்கிறது.அந்தக் கதையை எடுத்துக்கொண்டு ஒரு படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா பாராட்டுக்குரியவர். ஊரடங்கு உத்தரவு பின்னணியில் கதைக்கான சுவாரசியத்தைச் சேர்த்துள்ளார்.
வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் இப்படி ஒரு சவாலான பாத்திரத்தை ஏற்றதற்கு முதலில் அவரைப் பாராட்ட வேண்டும்.நினைத்துப் பார்த்தால் சர்ச்சையாகத் தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் மிளிர்ந்திருக்கிறார்.எவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும் சூழல் , சந்தர்ப்பம் எப்படி மனித மனத்தை மாற்றி விடுகிறது என்பதற்கு அவரது பாத்திரம் உதாரணம் .அது வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சரியாகவே இவர் நடிப்பில் காட்டியுள்ளார்.
நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சார்லி, நிரோஷா இருவரது எதார்த்தமான நடிப்பு மிடில் கிளாஸ் மனங்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.
பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா என பிற பாத்திரங்களில் வருபவர்களும் தங்கள் பங்கைச் சரியாக ஆற்றி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் கதாநாயகனே இல்லை. நாயகியை மையப்படுத்திய கதை இது. அவர் வேலை தேடி அலைவது, கருக்கலைக்க முடியாமல் தவிப்பது, அதற்காக பணம் தேடி சிரமப்படுவது, மருத்துவர்கள் மாத்திரைகள் என்று தேடி அலைவது போன்றவை பார்ப்பவர்களைக் கலங்க வைக்கும். இதற்கிடையில் குடும்பத்தினரைச் சமாளிக்க அவர் படாத பாடுபடுகிறார் அதுவும் உணர்ச்சிகரமான காட்சிகள் தான்.
சில குறிப்பிட்ட இடங்களில் கதை நிகழ்ந்தாலும் அது தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வீட்டுக்குள் நிகழும் காட்சிகள் கூட ரசிக்கும்படி உணர்வுகளை வெளிக்காட்டும்படி உள்ளன.
இசையமைப்பாளர்கள் என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இருவரது இசையில் பாடல்கள் பாத்திரங்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வெற்றிப் பயணம் செய்துள்ளன. பின்னணி இசையும் பார்வையாளர்களுக்குக் கதையின் தன்மையை அழகாக எடுத்துக் கூறுகிறது.

ஒரு பெண்ணின் மனப்போராட்டம் செல்லும் திசையை தனது படத்தொகுப்பு மூலம் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் வி.ஜெ.சாபு ஜோசப்.
எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.ஜீவா, கொரோனா ஊரடங்கு உத்தரவு காலக்கட்டத்தை கதையின் முக்கிய அம்சமாக பயன்படுத்தியிருந்தாலும், ஒரு பெண் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அதற்கான திரைக்கதையைச் சுவையாகவே பின்னி சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.
நாயகியின் பிரச்சினைக்கு காரணம் யார் என்று முதலில் எழும் கேள்வி பிறகு அவற்றையெல்லாம் எப்படி நாயகி எதிர்கொள்கிறார் என்று வேறொரு திசையில் பரபரப்பு கூட்டுகிறது.அனைத்தையும் மறந்து போகும் விதத்தில் எதிர்பாராத திருப்பத்தின் மூலம் பெரும் அதிர்ச்சியளிக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா.அத்துடன் தான் சொல்ல வந்த செய்தியையும் அழுத்தமாகப் பதிய வைக்கிறார்.
மொத்தத்தில், ‘லாக்டவுன்’ நல்லதொரு செய்தியை நல்லுணர்வுகள் மூலம் வெளிப்படுத்தி உள்ள படம் எனலாம்.


