‘லாந்தர்’ திரைப்பட விமர்சனம்

விதார்த் ,ஸ்வேதா டோரதி , விபின், சஹானா, பசுபதிராஜ், கஜராஜ் ,மீனா புஷ்பராஜ் மதன் அர்ஜுனன் நடித்துள்ளனர். சாஜி சலீம் எழுதி இயக்கி உள்ளார்.
ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.எம் எஸ் பிரவீன் இசையமைத்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார்.எம் சினிமா ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

இந்த‘லாந்தர்’ ஒரு திரில்லர் ரகப் படமாக உருவாகி உள்ளது.விதார்த் கோவை மாநகரில் உதவி காவல் ஆணையர் .அவர் பெயர் அரவிந்த்.
மிக நேர்மையான அதிகாரி.போலி மது பானங்கள் தயாரிக்கும் கூட்டத்தைக் கூண்டோடு பிடிக்கிறார். கோவையில் கறுப்பு ரெயின் கோட் போட்டுக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு ஒரு மர்ம மனிதன் கண்டவர்களை எல்லாம் கண் மண் தெரியாமல் தாக்குகிறான், கொலை செய்கிறான்.நகரை பரபரப்பு பற்றிக் கொள்கிறது.அவன் மன நோயாளியா? இதற்குப் பின்னே காரணங்கள் உள்ளனவா ? ஒன்றும் புரியவில்லை.ஒருவனை சந்தேகப்பட்டு விரட்டிச் செல்கிறது காவல் துறை. விரட்டிச் செல்லும்போது அந்த நபர் காவல் துறையினரின் வாகனம் மோதி இறந்து விடுகிறார். ஆனால், அந்த ஆள் கொலைகாரன் இல்லை என்று தெரிய வருகிறது. பட்டுக்கோட்டையில் கொலைகாரன் பற்றிய ஒரு துப்பு கிடைக்கிறது. மோப்பம் பிடித்துக் கொண்டு தொடர்கிறது காவல் துறை. அந்தக் கொலையாளியைப் பிடிக்க காவல் துறையால் முடிந்ததா இல்லையா என்பதுதான் ‘லாந்தர்’ படத்தின் மீதிக் கதை.

படம் தொடங்கியதும் பரபரப்பாக வேகமாக நகர்கிறது. துண்டு துண்டாகக் காட்சிகள் தொடர்பின்றிக் காட்டப்படுகின்றன. ஆனால் பிறகு அவை இணைக்கப்படுகின்றன. அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது. அது இடைவேளை வரைக்கும்தான்.

இரண்டாவது பாதி ஆரம்பித்த உடனேயே கொலைகாரன் யார் என்று நாம் ஊகிப்பது மட்டுமின்றி படத்திலேயே சொல்லி விடுகிறார்கள்.அதன் பிறகு முன் கதைச் சுருக்கம் – அல்ல விளக்கமாகவே செல்கிறது கதை.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நடக்கின்றன. எந்த நேரத்தில் நடக்கிறது என்று ஒவ்வொரு காட்சிக்கும் நேரத்தைப் போடுகிறார்கள்.
இப்படிப் படம் ஓடும் 116.53 நிமிடங்களும் நேரம் காட்டப்படுகிறது.

இப்படத்தை ரசிக்க வைப்பதற்கான நம்பிக்கை தருவது ஞானசௌந்தரின் ஒளிப்பதிவும், பிரவீனின் இசையும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்து இயக்குநருக்குக் கை கொடுத்துள்ளன.

விதார்த் போலீஸ் அதிகாரியாக மட்டுமல்ல ஒரு அன்பான கணவனாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வீட்டில் இருளைக்கண்டு பயப்படும் மனைவியைத் தனியே விட்டுவிட்டு கடமை கடமை என்று அலையும் போது அவர் குற்ற உணர்ச்சியுடன் தவிப்பது நல்ல நடிப்பு.

சஹானா, ஸ்வேதா டோரத்தி என இரண்டு நாயகிகள் படத்தில் இருந்தாலும் சிறப்பான நடிப்பை தந்திருப்பது மஞ்சுவாக நடித்திருக்கும் சஹானாதான். காதல், மன அழுத்தம், கோபம் என பல உணர்வுகளைச் சிறப்பாகத் தந்துள்ளார்.திரைக்கதை சரியாக இருந்திருந்தால் இந்த ‘லாந்தர்’ வெளிச்சம் பிரகாசமாக அமைந்திருக்கும்.

சில கேள்விகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்த திரில்லர் படம் இவ்வகை ரசிகர்களைக் கவரும்.