அசோக் குமார், கார்த்திகேசன் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி,பாலா,எஸ். கே. பாபு, திலீப்குமார்,இ .எஸ் . பிரதீப் நடித்துள்ளனர்.
மணி மூர்த்தி இயக்கி உள்ளார் . ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.
காரைக்கால் பகுதியில் உள்ள நிரவி காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் வருகிறது.ஒரு பெண்ணின் உடல் கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கிறது என்று.போய்ப் பார்த்தால் முகம் தெரியாமல் சிதைக்கப்பட்ட உடல் அது.லாரன்ஸ் என்பவன் தனது மனைவி ஸ்டெல்லாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறான் .அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அடிக்கடி வந்து குறைப்பட்டுக் கொள்கிறான்.
இந்நிலையில்தான் அந்தச் சடலம் கிடைக்கிறது.அதை இனம் காண முடியாமல் முகம் சிதைவுற்று , உடலில் சில பாகங்கள் சேமடைந்த நிலையில் இருக்கிறது.லாரன்ஸிடம் அது உன் மனைவியா என்று அடையாளம் பார் என்று சொல்கிறது போலீஸ் .அதைப் பார்த்த லாரன்ஸ் தனது மனைவி அதுவல்ல என்கிறான். ஆனால் தன் மனைவியை அவனே கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறான் என்று ஒரு மர்மத் தொலைபேசி காவல் நிலையத்திற்கு வருகிறது.லாரன்ஸைச் சந்தேகித்த போலீஸ் அவனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது.அவன் மர்மமாகத் தெரிகிறான். அவனுக்குள் ஏதோ ரகசியம் ஒளிந்து இருப்பதாக போலீஸ் சந்தேக படுகிறது.ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.போலீஸ் விசாரணைப் பயணத்தின் போது அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விசாரணையை வெவ்வேறு திசைகளுக்கு இட்டுச் செல்கிறது.அப்படி போகும் வழியில் தோண்டத் தோண்ட மர்மங்கள் எதிர்ப்படுகின்றன.ஹவாலா பணம் மோசடி செய்பவர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்கள், அவர்களைக் கொடுமைப்படுத்தப்படும் மர்ம மனிதர்கள், லாராவின் காதல் கதை,ஆதரவற்றோர் இல்லம் ,ஆயுதங்கள் தயாரிப்பு என்று கதை கிளைக் கதைகளாகப் பிரிகிறது.பரபரப்பாக படம் போய்க் கொண்டிருக்கும் போது லாராவின் காதல் கதை அத்தியாயம் விரிகிறது. அந்தக் காதல் கதைக்கும் இந்த கொலை கதைக்கும் என்ன தொடர்பு?
போலீசின் சந்தேக வளையத்தில் உள்ளூர் கவுன்சிலர் வருகிறார், அவருக்கு எம்எல்ஏ ஆதரவாக இருக்கிறார்.போலீஸ் சந்தேகப்படும் ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டால் ஆதாரங்கள் இல்லாமல் இருக்கிறது.போலீஸ் விழிபிதுங்கி நிற்கிறது .ஒரு கட்டத்தில் போலீஸின் அத்தனை சந்தேகங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு வேறொரு திருப்பம் நிகழ்கிறது. அது என்ன என்பதுதான் லாரா படத்தின் கதை.
போலீஸ் சடலத்தைக் கைப்பற்றி விசாரிப்பதிலிருந்து தொடங்குகிறது படக்கதை.
வளர்ந்து வரும் நாயக நடிகர் அசோக் குமார் வரும் பகுதிகள் குறைவு என்றாலும் அவர் தனக்கான நடிப்பை வெளிப்படுத்தி திருப்தி அளிக்கிறார்.குறைந்த பகுதி காட்சிகள் உள்ளே இப்படிப்பட்ட படத்தில் நடித்து ஆதரவு கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் கார்த்திகேசன் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டராக வருகிறார் .விசாரணை செய்யும் காட்சிகள் நீளமாக இருந்தாலும் சலிப்பூட்டாமல் அமைக்கப்பட்டுள்ளன.
லாராவாக அனுஷ்ரேயா ராஜன் வருகிறார்.சுமாரான தோற்றம் என்றாலும் பாத்திரத்தின் வழியே அனுதாபங்களை அள்ளுகிறார். ஸ்டெல்லாவாக வரும் வெண்மதி, வாலிபர்களால் துரத்தப்படும் ஜெயாவாக வரும் வர்ஷினி இருவருமே அவரவர் பாத்திரங்களில் போட்டி போட்டு நடித்துள்ளனர். பரூக் யாசின் என்கிற எம் எல் ஏ பாத்திரத்தில் பரூக் யாசின் என்கிற எம் எல் ஏ பாத்திரத்தில் வரும் மேத்யூ வர்கீஸ் ,கவுன்சிலராக வரும் எஸ்.கே.பாபு, வேன் ஓட்டுநராக வரும் பாலா, பெண் ஆசையால் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களாக வரும் திலீப் குமார் , இ.எஸ்.பிரதீப், என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பின் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவண் குமார்.ஒரு க்ரைம் திரில்லருக்குத் தேவையான ஒளிப்பதிவும் இசையும் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.
லாராவின் முன் கதை பரபரப்பான புலனாய்வுக் கதையில் இடைச் செருகலாக வருகிறது காட்சிகள் நீளம் தான்.நகைச்சுவைக் காட்சிகள் என்று எதுவும் இல்லை என்றாலும் அந்தந்த பாத்திரங்கள் அதற்குரிய தருணங்களில் நடந்து கொள்வதும் பேசுவதும் சிரிப்பை மூட்டுகின்றன. உதாரணமாக காவல் ஆய்வாளரும் உடன் இருக்கும் போலீசும் டீ சாப்பிடும் காட்சிகளிலும் லாரன்ஸின் அம்மா யாரைப் பார்த்தாலும் 100 ரூபாய் கேட்கும் போதும் சிரிப்பு வருகிறது. .படத்தில் வரும் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி குறை சொல்ல ஒன்றும் இல்லாமல் நிறைவைத் தருகிறது.
எழுதி இயக்கியிருக்கும் மணி மூர்த்தி புதுமுகங்களை வைத்துக்கொண்டு ஒரு புலனாய்வுக் கதையை புத்திசாலித்தனமாக நகர்த்திச் சென்று ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
குறிப்பிட்ட லொக்கேஷன்களில் கதை நடந்தாலும் காட்சிகளில் சோர்வு வெளிப்படாமல் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்தப் படம் கிரைம் திரில்லர் ரகமாக சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட த்ரில்லர் படமாக ரசிகர்களைக் கவரும்.