’லிப்ட்’ விமர்சனம்


மென்பொருள் துறை ஊழியரான கவின் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மாறுதலாகி  வருகிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பனியில் டீம் லீடராக தல்ல கௌரவமான வேலை பாரிக்கிறார். அதே கம்பெனியில்  வேலை பார்த்து வருகிறார் நாயகி அம்ரிதா. கவினுக்கும், அம்ரிதாவுக்கும் இடையே ஒரு சிறு மோதல் வந்து பிறகு  கவின் மீது அம்ரிதாவுக்குக் காதல் ஏற்படுகிறது. ஆனால், கவின் அதை மறுத்துவிடுகிறார்.ஒரு கட்டத்தில் கம்பெனியில் ஒரு முக்கிய புராஜெக்டை முடிக்க வேண்டி இருக்கிறது. கவின் மட்டும் இரவு கம்பெனியிலேயே தங்கி வேலை செய்து கொண்டிருக்கின்றார். நள்ளிரவில் வேலை முடிந்த பிறகு தரைத்தளத்திற்கு செல்ல கவின் லிப்டில் ஏறுகிறார். அப்போது லிப்டில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. இதனால் அவரால் தரைத்தளத்திற்கு மட்டும் செல்ல முடியவில்லை.

இந்தநிலையில், நாயகி அம்ரிதாவும் அலுவலகத்தில் உள்ள வேறு ஒரு அறையில் சிக்கி இருப்பதை அறியும் கவின், அவரைக் காப்பாற்றி விடுகிறார். ஆரம்பத்தில் கவின் தான் இவ்வாறு செய்ததாக சந்தேகப்படும் அம்ரிதா, பின் உணர்ந்து புரிந்து கொள்கிறார். இதையடுத்து இருவரும் வெளியேற எண்ணித் தரைத்தளத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.

அப்போதும் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன . இறுதியில், அவர்கள் வெளியே சென்றார்களா? இல்லையா? என்பதை திகில் கலந்து சொல்லி இருக்கும் படம் தான் ’லிப்ட்’.

நாயகன் கவின், டீக்கான ஐடி ஊழியராக வருகிறார். அக்கதாபாத்திரத்திற்கு கசித்தமாக பொருந்தி இருக்கிறார். கோபம், பயம், கொஞ்சம் நகைச்சுவை என நடிப்பில் பலரசம் காட்டி இருக்கிறார். நாயகி அம்ரிதா அழகிலும் , நடிப்பிலும்  கவர்கிறார்.

 வேலைப் பளுவால் ஐடி ஊழியர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை இதில் சொல்லி இருக்கிறார்கள். இயக்குநர் வினீத் வரப்பிரசாத்துக்கு இது அறிமுகப் படம். இப்படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், பின்னர் திகில் மற்றும் அமானுஷ்ய விஷயங்களை புகுத்தி விறுவிறுப்பைக் கூட்டி இருக்கிறார். 
படத்தில் ஒரே பாடல் தான். அதையும் படத்தின்  இறுதியில் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். படம் முழுக்க பின்னணி இசை மூலமே பயமுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல். யுவ குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் ‘லிப்ட்’ ரசிகர்களுக்கான திகிலூட்டும் கிப்ட் எனலாம்.