தற்கால சைபர் புரட்சியில் இன்று எதுவும் ரகசியமில்லை என்றாகிவிட்டது. இந்நிலையில் அந்தரங்கம் புனிதமானது அதைப் பொதுவெளிக்கு வரச்செய்யும் விபரீதத்தை ஆணி அடிப்பது போலச்சொல்லி எச்சரித்துள்ள படம்தான் இந்த ‘லென்ஸ்’.ஆனால் இது நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டுமேயான படம்.
இந்த ‘லென்ஸ்’, தங்களது வீடாக இருந்தாலும் அந்தரங்கமான விஷயங்களை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும், என்கிற விழிப்புணர்ச்சியையும் தருகிறது..
மற்றவர்களின் அந்தரங்கத்தை திருட்டுத்தனமாக படம் பிடித்து அதை இண்டர்நெட்டில் ஏற்றும் சில வக்கிர விஷமிகளால், பலரது வாழ்க்கை எப்படி சீரழிந்து போகிறது, என்பதை அழுத்தமாக நெஞ்சில் அறைந்து சொல்வதுதான் லென்ஸ் .
படத்தின் ஆரம்பக் காட்சியில்,கதாநாயகன் என நம்பப்படுகிற ஆசாமியும் அவரைப் போலவே வீடியோ சாட் செய்யும் பெண்ணும், முகமுடியுடன் உடை களைந்து நிர்வாணக் காட்சியளிக்க, திரையரங்கமே சற்று அதிர்கிறது.
பிறகு வரும் ஒருகாட்சியில் அந்த நபர் மீண்டும் லேப்டாப்பை எடுத்து சாட் செய்ய, அதில் ஒரு பெண் பெயர் தென்படுகிறது. உடனே அவருடன் சாட் செய்ய தொடங்குகிறார். சில நிமிடங்களில் அவருடன் வீடியோ சாட் செய்ய பெண் பெயரில் வந்தவர் பெண் அல்ல ஒரு ஆண் என்பது தெரிய வருகிறது.அதிர்கிறார்.
எதிர்முனையில் இருக்கும் அந்த ஆண், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், அதை நீ பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். பதறிப்போகும் முகமூடிஆள் அதெல்லாம் முடியாது வேலை இருக்கிறது, என்று கூறி இணைப்பை துண்டிக்க முயலும் போது, தற்கொலை வில்லன் முகமூடிஆளி ன் நிர்வாண சாட் வீடியோவை காட்டி, இந்த வீடியோவ நெட்டுல போடவா? என்று மிரட்ட, பதறிப்போய் , நீ யார்? எப்படி இந்த வீடியோ கிடச்சது? அந்த பெண்ணுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? என்று பல கேள்விகளை கேட்க, அத்தனைக்கும் பதில் சொல்கிறேன் என்கிறார். நிர்வாண மனிதனின் கேள்விகளுக்கான விடை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கை நுனியில் உட்கார வைக்கிறது படம். தற்கொலை மனிதரின் பின்னணி என்னவாக இருக்கும், அவன் நல்லவனா கெட்டவா? என்ற கேள்வியோடு படம் படு பரபரப்பாக நகர்கிறது.
படத்தின் முதல் பாதி முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து ஒருவர் பதற்றதுடன் பேச, மறுமுனையில் இருப்பவர் ரொம்ப கூலாக பேசி வருகிறார். இந்த இருவரது சாட்டிங் மட்டுமே முதல்பாதி படமாக இருந்தாலும், அந்த உணர்வே நமக்கு ஏற்படாத வகையில் படம் பரபரப்பாகவே நகர்கிறது.
நிர்வாண ஆசாமியாக இப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடித்திருக்கிறார். கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து அவர் செய்யும் இன்ப சாட்டிங்காகட்டும், சாட்டிங்கில் வசமாக சிக்கிக் கொண்டு திணறும் காட்சிகளாகட்டும் தனது முகபாவம் மூலம் நம்பும் அளவுக்கு மவுனமாகவே மிரட்டுகிறார் ..
தற்கொலை ஆசாமி வேடத்தில் மொட்டை தலையுடன் வரும் ஆனந்த்சாமி, ரகுவரன் போல சைலண்டாக வசனம் பேசினாலும், தனது பார்வையினாலேயே நம்மை பயமுறுத்துவதோடு, காட்சிக்கு ஏற்ப தனது பாவனையை மாற்றிக் காட்டி, உட்கார்ந்த இடத்திலேயே அசத்துகிறார்.
ஜெயபிராகாஷ் – ஆனந்தசாமி இந்த இரண்டு கதாபாத்திரங்களும், உட்கார்ந்த இடத்திலேயே முழு படத்தினையும் விறுவிறு பரபரவென நகர்த்திச் செல்ல, இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் சில நடிகர்களும் தங்களது நடிப்பால் மனதில் நின்றுவிடுகிறார்கள். குறிப்பாக ஏஞ்சல் என்ற வேடத்தில் நடித்திருக்கும் வாய்பேச முடியாத அந்த பெண்ணின், நடிப்பும் தற்கொலையும், தப்பி தவறி கூட அப்படிப்பட்ட வீடியோக்களை பார்த்துவிடக் கூடாது, என்று நினைக்க தோன்றுகிறது.
திரைக்கதைக்கு நடிகர்கள் உயிர்கொடுத்திருக்கிறார்கள் என்றால், காட்சிகளுக்கு எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் உயிர்க்கொடுத்திருக்கிறது.
ஜாலிக்காக வீடியோ எடுக்கிறேன், என்று சொல்லிக்கொண்டு அந்தரங்கமான விஷயங்களை வெளியே விட்டுவிட்டு பிறகு வேதனை படுவதை விட, எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் இப்படம், அதுபோன்ற வீடியோக்களை இண்டர்நெட்டில் ஏற்றுவதால், பலரது வாழ்வு எப்படி பறிபோகிறது, என்பதை ரொம்ப அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது படம். பாராட்டுக்கள்.
நாலு சுவராக இருந்தாலும், யாரோ ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டு தான் இருப்பார், எனவே உஷாராக இருங்கள் என்று நம்மை எச்சரிப்பதுடன் இந்த ‘லென்ஸ்’ படம் கண்டிப்பாக இந்த சைபர் யுகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமி ன்றி தம்பதிகள் கூட இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்.