லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு
‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரியவருகிறது.
‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்று கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா..? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் அமரர் கல்கி உலகம் போற்றும் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்றை உரிய கல்வெட்டு ஆதாரங்களுடன் ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலாகப் படைத்திருக்கிறார். இந்நிலையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படங்களைத் தயாரித்து, அதனை சர்வதேச அளவிலான தமிழர்களுக்கும், ரசிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் அலாதியான பெருவிருப்பம் கொண்டு தயாரிப்பாளர் சுபாஷ்கரன் லைகா ப்ரொடக்ஷன்ஸ் என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் நோக்கத்தை துல்லியமாக அவதானித்த தமிழ் சினிமாவின் ஒப்பற்ற படைப்பாளி மணிரத்னம், தன்னுடைய நீண்ட நாள் கனவு படைப்பான ‘பொன்னியின் செல்வனை’ உருவாக்க லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். படத்தின் பட்ஜெட் 800 கோடி ரூபாய் என்றும், இரண்டு பாகங்களாக உருவாக்கலாம் என்றும் மணிரத்னம் ஆலோசனை சொன்னபோது,சுபாஷ்கரன் ஏற்றுக்கொண்டு படத்தயாரிப்பில் முழு மனதுடன் ஈடுபட்டார்.
மணிரத்னம் என்ற படைப்பாளி- அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவல்- இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் -ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்- எழுத்தாளர் ஜெயமோகன் என ஒவ்வொரு துறையில் இருந்தும் சிறந்த படைப்பாளிகளின் கூட்டணியுடன் உருவான இந்த ‘பொன்னியின் செல்வன்’ படைப்பிற்குத் தங்களுடைய ஒத்துழைப்பை மனமுவந்து அளித்தார் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்.
இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து உருவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்திற்கான டீசர் வெளியிட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பட குழுவினருடன் லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ் குமரன் கலந்து கொண்டார்.
‘பொன்னியின் செல்வன்’ டீசர், தமிழ் மண்ணின் அசலான வரலாற்றை டிஜிட்டலில் பதிவு செய்திருக்கும் பிரம்மாண்டமான காவியம் என இணையவாசிகளின் பாராட்டைப்பெற்றது. அத்துடன் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியலை காட்சி வழியாக அடுத்த தலைமுறைக்கும் சென்றடைய செய்த பட குழுவினரை அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டையும், மகிழ்ச்சியையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.