லைகா தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கிறார்!

லைகா புரொடக்‌ஷன்ஸ், சுபாஸ்கரன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்!

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்‌ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் வெளியிட்டிருக்கிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜிகேஎம் தமிழ் குமரன் கூறும்போது, “நல்ல கதைகளை எங்களின் தயாரிப்பு நிறுவனம் எப்பொழுதும் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், ஜேசன் சஞ்சய் கதை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் புதிதாகவும் இருந்தது. குறிப்பாக, அந்தக் கதையில் பான் இந்தியா படத்திற்கான களம் இருப்பதை உணர்ந்தோம். ‘நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்’ என்ற மையக்கருவை சுற்றிதான் படம் நகரும். தனது திறமையான நடிப்பால் சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.

படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி கேட்டபோது, “படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் மற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினரும் பணிபுரிய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவோம். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.