சார்லி, ஜெகன் பாலாஜி, அதிதி பாலன், சரண்யா ரவிச்சந்திரன்,விநாயகராஜ், அருண் பிரசாத் ,தமிழ் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை அறிமுக இயக்குநர் உதய்குமார் இயக்கி உள்ளார்.விஷ்ணு கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.இசை –தீபக் நந்தகுமார் .இந்தப் படம் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நமது இந்திய நாட்டில் பல விஞ்ஞானிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.அதன் பின்னணியில் அவர்களுக்கான புறக்கணிப்பும் அங்கீகாரமின்மையும் புலப்படும்.அறிவியலுக்கு எதிரான அரசியலும் தென்படும்.
ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடிக்கும் ஓர் இளைஞனும் அதற்கான அங்கீகாரத் தேடலுக்கான வலி மிகுந்த பயணமும் அதன் விளைவும் பற்றிய கதைதான் இந்த லைன் மேன் .
இந்தக் கதை தூத்துக்குடி பகுதியில் உப்பளம் சூழ்ந்த கிராமத்தில் தொடங்கி நடக்கிறது. அந்த ஊரில் லைன் மேன் ஆக சுப்பையா இருக்கிறார் ,அதாவது நடிகர் சார்லி. அவரது மகன் செந்தில், அதாவது நடிகர் ஜெகன் பாலாஜி. தாயை இழந்த பிள்ளைக்குத் தாயுமானவராகி அன்பையும் உரிமையையும் கொடுத்து வளர்த்து வருகிறார் சுப்பையா.செந்தில் மின்னணு பொறியியல் படித்தவர்.கண்டுபிடிப்பில் ஆர்வம் மிக்க இளைஞர்.
வீணாகும் மின்சாரத்தை சேமித்து மிச்சப்படுத்த வைக்கும் வகையில் சூரிய வெளிச்சம் மறைந்ததும் தெரு விளக்குகள் தானாக எரிவது போலவும் ஒளி வந்ததும் தானாக அணைவது போலவும் ஒரு சாதனத்தை உருவாக்குகிறார் செந்தில்.தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் தேடி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க முயல்கிறார். பிறகு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு முதல்வரைச் சந்திக்க முயற்சி செய்கிறார் .ஆனால் எங்கு பார்த்தாலும் அவருக்குத் தோல்வியே கிடைக்கிறது. உள்ளூரிலும் அவரைத் தவறாக சித்தரிக்கிறார்கள். சமுதாயமும் அவரை வேறு விதமாகப் பார்க்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தனது கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் தேடும் அவரது பயணம் என்ன ஆனது என்பதைச் சொல்கிறது இந்தப் படம்.
கரிப்பு சூழ்ந்த உப்பள வாழ்க்கை, உப்பு வயல்கள் நடுவே வீடுகள், கனவுகள் கொண்ட தோழிகள், தாயாகி அரவணைக்கும் தந்தை, நாயகனின் வீடு, கண்டுபிடிப்பாளனைப் பைத்தியக்காரன் எனக் கூறும் ஊர், பகைமை கொண்டு விரோதிக்கும் முதலாளி, அவனது கையாள்கள்,பேச முடியாத டீ கடைக்காரர் என ஆரம்பத்தில் காட்சிகள் பாத்திரச் சித்தரிப்புகளாகத் தொடர்கின்றன.அதை பார்க்கும் போது டெம்ப்ளேட் சினிமாவில் இருந்து விலகி நாம் உள்ளே நுழைந்து கொள்கிறோம்.
எந்தக் கதைக்குள்ளும் சினிமாத்தனத்தைப் புகுத்தி விடும் நம்மவர்கள் மத்தியில் அந்த நிழல் விழாதவாறு எச்சரிக்கையோடு இயல்பாகக் காட்சிகளை உருவாக்கி நகர்த்துகிறார் இயக்குநர் உதய்குமார் .
இந்த நாயகனுக்கும் காதல் உண்டு ஆனால்,தமிழ் சினிமா நடிகர்கள் செல்லும் வழி செல்லாமல் சின்ன சின்ன பார்வை பரிமாறல்கள் ,அதன் வழியே கசியும் ஏக்கம் என மெல்லுணர்வுகளாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.தூத்துக்குடியின் பின்புலமும் வட்டார வழக்கும் படத்தை வேறு விதமாக உணர வைக்கின்றன.
நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சார்லி இப்போது குணசித்திரச் சுற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவர் அந்த சுப்பையா பாத்திரத்தில் இயல்பான கிராமத்துத் தந்தையாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.அதேபோல எப்போதும் ஏக்க முகத்துடன் காணப்படும் செந்தில் பாத்திரமும் அறிமுக நாயகன் ஜெகன் பாலாஜிக்குப் பொருத்தம் தான்.
சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், நச்சு ஆலைக்கு எதிராகப் போராடும் தமிழ், ஒரு காட்சியில் மட்டும் தோன்றி விட்டுச் செல்லும் அதிதி பாலன் பிற நடிப்புக் கலைஞர்களும் அந்தந்த பாத்திரத்தில் அளவோடு வெளிப்பட்டுள்ளார்கள்.
விஷ்ணு கே ராஜாவின் ஒளிப்பதிவும்,தீபக் நந்தகுமாரின் இசையும் இயக்குநருடன் இணைந்து சென்றுள்ளன.
சிறுபட்ஜெட்டில் இதை ஒரு சீரிய முயற்சியாக உணர வைக்கிறது. மிகைபடச்சொல்லப்படாத உச்சகட்ட காட்சியும் இதம் தான்.
அப்படி என்றால் படத்தில் குறைகள் இல்லையா? பட உருவாக்கத்தில் சில போதாமைகள் இருக்கவே செய்கின்றன ஆனால், தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட சிறு முன்னகர்வு முயற்சிகளைக் குறைகளைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து நாம் புறந்தள்ளி விடக்கூடாது.தாராளமாக இப்படிப்பட்ட முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்த வேண்டும்.