குகன் சக்கரவர்த்தி, அலினா ஷேக், டிப் லேனா ,வையாபுரி, பொன்னம்பலம் , வாசு விக்ரம், நடித்துள்ளனர். குகன் சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பகுதியில் பிரபலமான தொழிலதிபராக இருக்கிறார் குகன் சக்கரவர்த்தி.ஒரு குறுநில மன்னனாக அந்தப் பகுதியில் அண்ணாச்சி அண்ணாச்சி என்று நண்பர்களாலும் மற்றவர்களாலும் அன்போடும் மதிப்போடும் நடத்தப்படுகிற குகன் சக்கரவர்த்தி, வசதியும் அரசியல் செல்வாக்கும் மிக்கவராக இருக்கிறார்.குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை.மனம் உடைந்து தனிமையில் இருக்கிறார்.அப்போது அவரது முன்னாள் காதலியைப் பார்க்க நேரிடுகிறது. அதுவும் அவர் தற்கொலை முயற்சி செய்யும்போது.அதிர்ச்சியடையும் அண்ணாச்சிஅவரைக் காப்பாற்றுகிறார்.தன்னைப் போலயே தனது காதலியும் வாழ்வில் தோல்வியடைந்தது அறிந்து மிகவும் வருந்துகிறார். இருவர் மனம் ஒன்றிணைகின்றன.ஒரு பக்கம் இவருடன் சேர்ந்து வாழ்கிறார்.
வசதியைக் கூட்டிக் கொள்ளவும் செல்வாக்கைக் அதிகரித்துக் கொள்ளவும் அரசியலில் மேலே வரவும் பணக்காரர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது சகஜமாகிவிட்டது .அந்தப் பாதையில் அண்ணாச்சியும் செல்கிறார். எதிர்ப்பவர்களை, இடையூறாக இருப்பவர்களைக் கூலிக்கு ஆள் வைத்துத் தீர்த்துக் கட்டுகிறார்.இந்த நிலையில் அவரால் கொலை செய்யப்பட்டவர்,அவரது காதலியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். இறந்து போனவர் எப்படி மீண்டும் உயிரோடு வந்து பேச முடியும்?என்று குழம்புகிறார் அண்ணாச்சி.மேலும் நடக்கும் பல சம்பவங்கள் அவரது காதலியையும் அவரையும் அதிர்ச்சிள்ளாக்குகின்றன.குழம்பவும் வைக்கின்றன. அதன் உண்மைத் தன்மையை அறிய முயற்சி செய்கிறார்.முடிவு என்ன என்பது தான் ’வங்காள விரிகுடா’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கிறார் குகன் சக்கரவர்த்தி.படம் முழுக்க அவரே ஆக்கிரமித்துள்ளார்.தவறுகளைத் தட்டிக் கேட்பதிலும் மனைவியிடம் ,காதலியிடம் உருகுவதிலும் என அவர் தனது நடிப்பைக் காட்டி இருக்கிறார்.மக்களிடம் செல்வாக்கு பெறவேண்டிய ஒரு கதாநாயகனுக்குரிய வீரம், அன்பு, பரிவு, பாசம், காதல் என்று வெளிப்படும் அனைத்துக் காட்சிகளையும் இந்த ஒரே படத்தில் வைத்துள்ளார்.
நாயகனின் மனைவியாக டிப்லேனாவும் காதலியாக அலினா ஷேக்கும் நடித்துள்ளனர்.இரண்டு கதாநாயகிகளையும்,வழக்கம் போல காட்சிப் பொருளாக இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்திரங்களில் பயன்படுத்தி உள்ளார்.
திருநம்பியாக வித்தியாச முகம் காட்டிக் கவனம் பெறுகிறார் வையாபுரி.பொன்னம்பலம், வாசு விக்ரம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது.படத்தில் வீரமணி, தோண்டி போன்ற பாத்திரங்களில் வரும் பெயர் தெரியாத நடிகர்களும் முகம் பதிகிறார்கள்.
அப்துல் கலாம் மறைவு,அவரது நினைவிடம், மெரினா கடற்கரை தலைவர்கள் துயிலிடங்கள் போன்றவற்றைப் படத்தில் இணைத்துக் காட்டியுள்ளார்கள்.அப்படிக் காட்டும் போது மெரினா கடற்கரையை திராவிட கடற்கரை என்று பெயர் மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்.
பட்ஜெட்டில் சிக்கனம் பாராமல் நல்ல ஒளியமைப்புடன் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரச்சார தொனியில் பாடல்கள் உள்ளன.பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்றி தனி ஒரு நபராக இப்படத்தைத் தனது தோளில் சுமந்து இருக்கிறார் குகன் சக்கரவர்த்தி.அவரது ஆர்வம் புரிகிறது, ஆனால் அந்தந்த துறையில் வல்லுனர்களைக் கொண்டு நகாசு வேலைகள் செய்து நேர்த்தியாக உருவாக்கி இருந்தால் இந்தப் படத்தைச் சீர்மைப் படுத்தி இருக்கலாம்.
அதிரடியாகத் தொடங்கி கிரைம் திரில்லாக மாறி குடும்பக் கதைக்குள் நுழைந்து தவழ்ந்து எந்த வகை என்று கூற முடியாமல் முடிகிறது.ஒரு திரைப்படத்திற்கான எல்லா அம்சங்களும் இருந்தும் ஒருவரே தனது தோளில் தூக்கி சுமந்திருப்பதால் பலவற்றில் கவனம் செலுத்த முடியாத போதாமை தெரிகிறது.
தோற்றத்தாலும் அவைக் கூச்சம் இல்லாத நடிப்பாலும் ஒரு நடிகராக குகன் சக்கரவர்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவர் நல்ல குணச்சித்திரப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம். ஓர் இயக்குநராக அவர் பல படிகள் ஏறி மேலே வர வேண்டும்.ஏனென்றால் சினிமா என்பதை அவ்வளவு சுலபமல்ல.ஆர்வம் இருக்கிறது புரிகிறது ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில், ‘வங்காள விரிகுடா’ ஒரு அசகாய நம்பிக்கை மனிதனின் படம்.


