வசனம் என்பது எழுத்தாளரின் மொழியல்ல ; பாத்திரங்களின் மொழி : பிருந்தா சாரதி

தமிழ்ச்சினிமாவில் வசனங்களில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் பிருந்தாசாரதி. இவர் வசனகர்த்தா மட்டுமல்ல கவிஞர்,இயக்குநர், பத்திரிகையாளர்,எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் .இப்போது ‘சண்டக்கோழி –      2 ‘படத்துக்கு  வசனம் எழுதி வருகிறார்.
அண்மையில் அவரைச் சந்தித்தோம்.

உங்கள் முன் கதையைக் கொஞ்சம் கூறுங்கள்..?

எனக்குச் சொந்த ஊர் கும்பகோணம். பதின் பருவத்திலேயே கவிதை மீது தீராத காதல் ஏற்பட்டு விட்டது. அதுவே வளர்ந்து கல்லூரிக்காலங்களில் கவியரங்கங்களில் ஈடுபாடு ,பங்கேற்பு என விரிந்தது.. அந்த சமயத்தில்தான் இயக்குநர் லிங்குசாமியின் அறிமுகம் கிடைத்தது. நட்பானோம்.சினிமா கனவு பற்றிய ஆர்வமும், கனவும் எங்கள் இருவருக்கும் ஒரே அலை வரிசையில் இருந்தன.  சென்னை வந்தோம். 1992ல் சென்னைக்கு முதலில் வந்த நான், சின்மயா நகரில் இருந்தேன். 

பிறகு அவர் வந்தார். அவர் செங்குன்றத்தில் இருந்தார். சினிமா தொடர்பான இடம் கோடம்பாக்கமாக இருந்ததால், அவர் அங்கிருந்து வருவது சிரமமாக இருந்தது. ஏன் என் அறையிலேயே தங்கிக் கொள்ளலாமே ?என்று அழைத்தேன். அதன் பிறகு ஒரே அறைவாசிகளானோம். எங்களுடன்தான் இயக்குநர்கள் மணிபாரதி, வசந்தபாலன் ஆகியோரும் தங்கியிருந்தார்கள். 

இருவரும் முதலில் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடினோம். 

சினிமாவில் இப்படி உதவி இயக்குநர் வாய்ப்பு தேடும் போது நமக்காக பெயர் தெரிய ஏதாவது படைப்பு இருக்க வேண்டும் என்று நான் எழுதிய கவிதைகளை ஒரு தொகுப்பாக ‘நடைவண்டி’ என வெளியிட்டிருந்தேன். அதைக் காட்டித்தான் நாசரிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு பெற்றேன். அவரிடம் ‘அவதாரம்’ ,’தேவதை’ படங்களில் பணிபுரிந்தேன். 

நண்பர் லிங்குசாமி ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு பெற்றார்.. அதற்கு முன்னதாக  அவர் பாக்யராஜிடம் சேர முயற்சி செய்தார்.அதன்பிறகு நண்பர் லிங்குசாமி இயக்குநராகி விட்டார். அந்தப் படம்தான் ‘ஆனந்தம்’.எனவே எங்களுக்குள் இருந்த புரிதலின்படி நான்  அவர் படத்தில் இணை இயக்குநர் ஆனேன்.அதற்கு வசனமும் எழுதினேன்.எனக்கு நாசரிடம் மட்டுமல்ல கவிஞர் வைரமுத்துவிடம் கூட உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் கூட உண்டு..

வைரமுத்துவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியது எப்போது ..?

அது மிகவும் சுவையான அனுபவம் .கவிஞர் வைரமுத்து ‘கவிதை பாருங்கள்’ என்றொரு தொடர் ஜெ ஜெடிவிக்குச் செய்தார் அவர்தான் இயக்கினார்..வாரம் இரண்டு என 26 கவிதைகள் 13 வாரங்கள் வந்தன.
அதற்குக் கவிதை ஆர்வமுள்ள உதவி இயக்குநர் தேவை என்று பலரிடமும் கூறியிருக்கிறார். எடிட்டர் கணேஷ் குமாரும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜாவும் என் பெயரை ஒரே நேரத்தில்  பரிந்துரை செய்திருக்கிறார்கள்.  நாசர் அலுவலகத்தில் என்னைப்பற்றி விசாரித்து கவிஞர் அலுவலகத்திலிருந்து ஆள். வந்து என் அறையில் துண்டுச்சீட்டு ஒட்டி  வைத்துவிட்டுச் சென்றிருந்தார்கள்.போய்ப்பார்த்தேன்.

என்னைப் பார்த்ததும் உனக்குக் கவிதையில் ஆர்வமாய்யா என்று விசாரித்தார். பிறகு தன்னுடைய கவிதைப் புத்தகங்களை எல்லாவற்றையும் கொடுத்து அவற்றில் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி 30 கவிதைகளைத்  தேர்ந்தெடுத்துக் கொண்டு வருமாறு கூறினார். அப்படியே தேர்ந்தெடுத்துக் கொண்டு போனேன் .  அதைப் பார்த்தார். உடனே மேசையிலிருந்து ஒரு காகிதத்கற்றையை உருவினார் என்னிடம் காட்டினார் .படித்தேன். அதில் 36 கவிதைகளில் நான் தேர்ந்தெடுத்த 30ம் இருந்தது . அதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சி. இப்படி அவர் எனக்கு வைத்த சோதனையில் நல்ல புரிதலுடன் நான் வெற்றி பெற்றதும் என் மேல் அன்பைப் பொழிய ஆரம்பித்தார். அவரது ஊர் வடுகபட்டி , உசிலம்பட்டி ,ஊட்டி போன்ற பல ஊர்களில் மூன்று மாத காலத்தில்  30 நாட்கள்

படப்பி்டிப்பு நடந்தது.  கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்தார். பின்னணி இசை ஏ.ஆர்.ரகுமான்.

அதற்கான காட்சிப் பகுதிகளை உலகத் தரத்துக்கு எடுத்தார். அவர் எப்போதும் பெரிய அளவில் பிரமாண்டமாகச் சிந்திப்பவர். அவரது சினிமா பற்றிய அறிவு அபரிமிதமானது. அவருடன் பணியாற்றிய போது ஒரு தேர்ந்த இயக்குநருக்கான அனைத்து தகுதிகளும்  அவரிடம் இருப்பதைக் கண்டு வியந்தேன். 

சில காட்சிகளை சினிமாத் தரத்துக்கு எடுத்தார்.
சில காட்சிகளை எடுக்கப் போகும் முன்பு பாரதிராஜாவைச் சந்தித்து விவாதித்தார். இப்படி அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அது மட்டுமல்ல என்னைப் பிடித்து விட்டதால் இரு மடங்கு   சம்பளமும் கொடுத்து  இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.அது மறக்க முடியாதது. 

‘அவதாரம்’ முடிந்து ஏ.வெங்கடேஷிடம் ‘செல்வா , படத்தில் சேர்ந்து பணியாற்றினேன் . அதன் பிறகு கிடைத்த இடைவெளியில்தான் கவிஞருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது..

ஒரு காலத்தில் கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள் உயரிய இடத்தில் இருந்தார்கள். இன்று அப்படி இல்லையே?

யார் படம் இயக்கினாலும் படத்தில் வசனத்தின் பங்கைத் தவிர்க்க முடியாது .பாலசந்தர், பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்கள் பலரும் சிறந்த கதாசிரியர்களே.  அவர்கள் ஓர்  இயக்குநராக  எவ்வளவு தான் காட்சிகள் எடுத்தாலும் வசனங்கள் பேச வேண்டியதைப் பேசியே ஆக வேண்டும். அதை அவர்களே வசனகர்த்தாவாக எழுதினாலும் சரி, தனியாக வசனகர்த்தா எழுதினாலும் சரி பேச வேண்டியதைப் பேசியே ஆக வேண்டும்..கதாசிரியர்கள் மதிக்கப்பட்டு உயர்த்தப்படும் காலம் மாறி வருகிறது. .இப்போதும் ‘விசாரணை ‘, ‘குற்றம் 23’  போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன.இவை கதாசிரியர்கள் எழுதிய நாவல்கள்தான்.காலம் மாறும்.

வசனம் எழுதுபவர்கள் எதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.?

வசனம் எழுதுபவர்கள் சுற்றுப்புறத்தை உற்று நோக்க வேண்டும் ,மக்கள். மொழியைக் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்ல இலக்கிய வாசிப்பு மிகவும் முக்கியம். தினசரி வரும் எல்லா செய்திகளையும் அறியவேண்டும் 

கவிதை எழுதும் திறன், வசனம் எழுதும் போது உங்களுக்கு உதவுகிறதா?

கவிதையே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதுதானே? அழகாகச்  சொல்லி விளங்க வைத்தல் தானே? 
வசனமும் அப்படித்தான். சுருக்கென்று சொல்ல வேண்டும் ‘ நறுக்கென்று சொல்ல வேண்டும்  அழகாகவும் சொல்ல வேண்டும்  .அதில் ஒரு நேர்த்தி வேண்டும் அதனால் கவிதை மனமும் கவிதை எழுதும் திறனும் நிச்சயமாக வசனம் எழுதும் போதும் உதவும்.

எது நல்ல வசனம்? 

திரையில் கதை சொல்லும் இயக்குநரின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு பேச வேண்டியதை பேசுவதே நல்ல வசனம். அளவோடும் அழகோடும் நறுக்குத் தெறித்தாற்போல வசனம் இருக்க வேண்டும். கதை, காட்சி பாத்திரம் அதன் தன்மைக்கேற்றவாறு அமைய வேண்டும் ஒரு படத்தில் எத்தனையோ பாத்திரங்கள் வரும். 

அவற்றின் வயது ,அறிவு ,சூழல், தகுதி தன்மையறிந்து அதன் மொழியில் இருக்க வேண்டும். வசனம் என்பது எழுத்தாளரின் மொழியல்ல பாத்திரங்களின் மொழி எனலாம்.

எந்த நேரத்திலும் வசனம் கதையை விட்டு வெளியே துருத்திக்கொண்டு ,நீட்டிக் கொண்டுதெரியும்படி இருக்கக் கூடாது.

ஒரு படத்துக்கான வசனத்தை அந்தப்படத்தின் கதைதான் தீர்மானிக்கும். கதைதான் தனக்கான வசனத்தைக் கேட்கும்;தேடிக்கொள்ளும். எழுதி  கொடுப்பது மட்டுமே எங்கள் வேலை. மீண்டும் சொல்வேன் படத்தின் . கதையே தனக்கான வசனத்தைக் கேட்கும், தேடிக் கொள்ளும் இதுதான் இயல்பானது.

படத்தின் வசனம், கதையின் மையக் கருத்தை பார்ப்பவரை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.  ‘புதிய வார்ப்புகள்’, ‘அந்த 7 நாட்கள்’ இரண்டுமே  இயக்குநர் பாக்யராஜ் நாயகனாக நடித்த படங்கள்தான்.   ‘புதிய வார்ப்புகளி’ல் மனைவியை இன்னொருவருடன் கணவனே அனுப்பி வைத்து வசனம் பேசுவான். ‘அந்த 7நாட்கள்’ படத்தில் தாலிகட்டிய கணவனுடன்தான் மனைவி வாழ வேண்டும் என்று க்ளைமாக்ஸில் வசனம் பேசுவான். .இரண்டையும் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி வசனம் இருந்தது. அதுதான் வசனகர்த்தாவின் வெற்றி .

இயக்குநரான அனுபவம் எப்படி?

அது ‘ஆனந்தம்’ படத்தின் பாடல் ஒலிப்பதிவு நேரம் ஒலிப்பதிவுககூடத்துக்கு சௌத்ரி சார் வந்திருந்தார்.. எப்போதோ ஒரு முறை என் படம் எப்படி இருக்கும் என்று லிங்குசாமி கேட்டார். என் படத்தில் ‘வீடு எரியாது விளக்கு எரியும்’ என்றும் சிக்கனமான பட்ஜெட் போதும் என்றும் கூறினேன்.

இதை லிங்குசாமி அப்போது அங்கே வந்திருந்த சௌத்ரி சாரிடம் கூறினார் இவர் படத்தில். ‘வீடு எரியாதாம் விளக்குதான் எரியுமாம்’ என்று விளையாட்டாகக் கூறினார் .

சௌத்ரி சாருக்கு அந்த ஒரு வரி பிடித்துப் போய் அடுத்த படத்தை நீதான் ஜீவாவை வைத்துஏற்கெனவே  இயக்குகிறாய் என்றார்.  நான் இன்னமும் கதையை முழுதாக உருவாக்க வில்லை என்றேன். அப்போதுதான் என் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் கதையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

நான் ‘மழைக்காலம்’ என்று ஒரு கதை வைத்திருந்தேன். ஆனால் அது இரண்டு நாயகர்கள் கதை.  அதைப்பற்றிப்பேசிய போது அதை அப்புறம் பார்க்கலாம் முதலில் ஒரு ரீமேக் படம் செய்யலாம் என்று கூறினார்.  கேட்டதுமே ரீமேக் படமா என்று தயங்கினேன். கே.எஸ்.ரவிகுமார் கூட முதலில் ‘புரியாத புதிர்’  என்கிற ரீமேக் படம்தான் இயக்கினார் .இன்று ரஜினி, கமலை வைத்துக் இயக்கிக் கொண்டிருக்கிறார். தைரியமாகச் செய் என்று என்னை சமரசம் செய்தார் .அப்படி நான் இயக்கிய படம்தான். ‘தித்திக்குதே’..அது ஜீவாவின் இரண்டாவது படம்.  ‘மனசந்தானுவே’ தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் அது. .

உங்களுக்கும் இயக்குநர் லிங்குசாமிக்குமான நட்பு பற்றி..?

 எனக்கும் அவருக்கும் கும்பகோணத்திலிருந்து நட்பு உண்டு. 

சென்னையில் ஒரே அறைவாசிகளாக இருந்தோம். சினிமாவில் போராட்டகாலம் அது. அப்போது வருமானமில்லை நாங்கள் கடைகளில் கடன் வாங்குவோம். சமையல் செய்வோம். அப்போதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கும்பகோணத்திலிருந்து லிங்குசாமி வீட்டிலிருந்து ஒரு மூட்டை வரும் .அதில் அரிசி, பருப்பு, மிளகாய், புளி என மளிகைப் பொருள்கள் இருக்கும். அது மட்டுமல்ல லிங்கு கையிலும் பணத்தைக் கொடுத்து விட்டுப் போவார்கள். அதைக் கொண்டு இங்கிருக்கும் கடன்களை அடைப்பார். எங்கள் அனைவருக்கும் சாப்பாடு செலவுகளை அவரே பார்த்துக் கொள்வார். ஏழெட்டு ஆண்டுகள்  இப்படியே போனது.

அவர் தன் முதல்படம் எப்படி இருக்க வேண்டும் பெயர் எப்படி இருக்க வேண்டும்  டிசைன் எப்படி இருக்க வேண்டும் எழுதி வரைந்து வைத்திருந்தார் .அதில் இயக்கம் லிங்குசாமி, ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் ,வசனம் பாலகுமாரன் என்றெல்லாம் எழுதி வைத்திருந்தார்.  அதை ஒரு நாள் நான் பார்த்தேன் .அன்று வசனம்  பாலகுமாரன் என்று எழுதி வைத்திருந்தை   பிருந்தாசாரதி என்று மாற்றி எழுதினார் .நீதான் வசனம் என்றார் .அதன்படியே ‘ஆனந்தம்’ படத்துக்கு வசனம் எழுதினேன்.

 அதன் பிறகு. ‘பையா’, ‘வேட்டை’, ‘அஞ்சான்’ என எழுதினேன்.  முன்பெல்லாம் லிங்கு எதற்கெடுத்தாலும் பதற்றப்படுவார். கோபப் படுவார். தியானம் கற்றுக் கொண்டு  செய்யத் தொடங்கியதும் சாந்தமாகி விட்டார். அவர் தயாரிப்பாளரானது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம். அவ்வளவு சுமையுள்ள வேலை  அவரது இயல்புக்கு மாறானது. நிறைய கோபப் படுவார்.   ஆனாலும் அதில் வெற்றி பெற்றுள்ளார்.  இப்போதும் எங்களிடையே நல்ல புரிதல் உள்ளது. என்றும் மாறாத நட்பு எங்களுடையது.  எவ்வளவோ கடந்தாகிவிட்டது. இருவருமே பரஸ்பரம் நல்லது கெட்டதுகளில் இருக்கிறோம். அவர் எழுதிய லிங் கூ ஹைகூ கவிதைகள் கொண்ட நூல் எனக்கு மிகவும்  பிடிக்கும்.

லிங்குசாமி தவிர பிற இயக்குநர்களுக்கு வசனம் எழுத மாட்டீர்களா?

நான் தொடர்ந்து அவர் படங்களுக்கு எழுதி இருப்பதால் இந்தச் சந்தேகம் வந்து இருக்கிறது. இப்போது அவரது ‘சண்டக்கோழி 2’ மற்றும் அல்லு அர்ஜுனா நடிக்கவுள்ள இரண்டு மொழிப் படம் என அவருக்கு எழுத இருக்கிறேன்.

நான் வசனம் எழுதிய ‘ஆனந்தம்’ படம் எப்போது டிவியில் போட்டாலும்  பலரும் போன் செய்வார்கள். வசனத்தைப் பாராட்டு வார்கள். இப்படிப் பல இயக்குநர்களும் பாராட்டு வார்கள்.. ஆனால் யாரும் என்னை அவர்கள் படத்துக்கு அழைத்ததில்லை. நான் வெளிப் படங்களுக்கு எழுதுவதில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் புதிய புதிய இயக்குநர்களுக்கு எழுதத் தயாராகவே இருக்கிறேன். ஒரு படத்துக்கு வசனம் எழுத எனக்கு ஒரு மாதம் போதுமானது.

எனக்குள் தீவிரமான இயக்குநர் கனவு இருக்கிறது. இருந்தாலும் நான் வசனத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறாமல் ஓய மாட்டேன்.

அதுவரை பலதரப்பட்ட கதைகளுக்கு பலவகைப்பட்ட இயக்குநர்களுக்கு வசனம் எழுத மிக ஆவலாக இருக்கிறேன்.

கவிதை முயற்சி இன்னும் தொடர்கிறதே.? 

நான் முதலில் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு ‘நடை வண்டி’ அதுதான் என் முதல் குழந்தை .எனக்கு உதவி இயக்குநர் வாய்ப்பு பெற்றுக் கொடுத்ததும் அதுதான் .

பிறகு படங்களில் தொடர்ச்சியாக இயங்க ஆரம்பித்ததால் நூல் முயற்சியில் இறங்கவில்லை. ஆனாலும் அவ்வப்போது கவிதை எழுதுவதை மட்டும் நிறுத்தவில்லை. 

அப்படித் தோன்றியபோதெல்லாம் எழுதி வந்தேன். அதை முகநூலில் பதிவு செய்தேன். அதுவே ‘ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் ‘ , ‘ பறவையின் நிழல்,’  என்று இரு தொகுப்புகளாயின. 2016-ல் அவை வெளியிடப் பட்டன. முதல்நூலை லிங்குசாமி வெளியிட நாசர் பெற்றுக் கொண்டார். இன்னொரு நூலை லிங்குசாமியே வெளியிட எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இதற்கான விழா கவிக்கோ மற்றத்தில் நடைபெற்றது. அடுத்த நூல் ‘எண்ணும் எழுத்தும்.’ எண்கள் அடிப்படையிலான கவிதைகள் கொண்டது. இத்தொகுப்பு பலவிதமான எண்கள் பற்றியவை. அதில் வருபவை  பலவும்  எண்கள் பற்றியவையே. ஒன்றில் தொடங்கி பூஜ்யம் ,பின்னம். முடிவிலி வரை  பாடுபொருளானவை.. இந்நூலை 2017 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரபஞ்சன் வெளியிட எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.இரண்டுமே வாசகப்பரப்பில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அண்மையில் என் கவிதை நூலான ‘மீன்கள் உறங்கும் குளம்’  சண்டக்கோழி – 2 படப்பிடிப்பு இடைவேளையில் வெளியிடப்பட்டது. நடிகர் விஷால் நூலை வெளியிட இயக்குநர் என். லிங்குசாமி பெற்றுக்கொண்டார். இந்நூலை தமிழ் ஹைகூ நூற்றாண்டு வெளியீடாக டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் கவிஞர்கள் பிறைசூடன், அறிவுமதி, பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்
 

எனக்குக் கவிதைகள் எழுதுவது அன்றாடச் செயலாகி விட்டது. சினிமாவில் ஓய்வு கிடைக்கும் போது இதன் எண்ணிக்கை அதிகரிக்கும். . சினிமா என்பது  பலர் சார்ந்த வேலை.
கவிதை என்பது  முழுக்க  முழுக்க என் சுயமான படைப்பு என்கிற திருப்தி தருகிறது.  எனவே கவிதைகள் எழுதுகிறேன்.