‘வடம்’ திரைப்பட விமர்சனம்

விமல், நட்டி நடராஜ்,சனஷ்காஸ்ரீ, முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், இந்துமதி, பால சரவணன், மதுசூதனன், தீபா சங்கர் நடித்துள்ளனர். கேந்திரன் வி எழுதி இயக்கியிருக்கிறார்.பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  டி. இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள், வசனம் ஞானக்கரவேல். சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் : பி சசிகுமார். மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ராஜசேகர் தயாரித்துள்ளார்.

வடநாடு மஞ்சுவிரட்டு திருவிழா பின்னணியில் உருவாகி இருக்கும் கதை இது.கௌரவத்திற்குரிய ஊர்ப் பெரிய மனிதராக இருப்பவர் நரேன் .உயிர்களிடத்தில் அன்பு காட்டுபவர்.சிறிதும் கருணை இல்லாமல் அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளைத் தனது கோசாலையில் வைத்துப் பராமரித்து வருபவர்.அவரது மகன் விமலும் தந்தையைப் போலவே மாடுகள் மீது பாசம் கொண்டவர்.அப்படி வேகமாக ஓட முடியாததால் கைவிடப்பட்ட கன்றுக் குட்டியைத் தனது வீட்டில் வளர்த்து பயிற்சி அளித்து பெரிய போட்டிக்காளையாக உருவாக்குகிறார்.
விமலும் யாருக்கும் அடங்காமல் அடிதடி செய்யும் வாலிபனாக வலம் வருகிறார்.அவர் வளர்க்கும் பாண்டி முனி காளையும் வீரத்துக்கு புகழ் பெற்று விளங்குகிறது.ஊர் வம்புக்கு பெயர் பெற்ற விமல் ஒரு வழக்கில் இருந்து பிணையில் வெளியே வரும்போது அவரைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள்.அவருக்கு அருகிலேயே துரோகிகள் நின்று அவரைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.இப்படி வம்பு வழக்கு துரோகம் அச்சுறுத்தல் பகைமை என்று வளரும் விமலுக்குள் ஒரு காதல் மலர்கிறது. காதலி சனஷ்கா ஸ்ரீ மூலம் புதிய மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கின்றன. ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை.தான் ரசித்த மயிலே தன் கண்ணைக் கொத்த வருவது கண்டு அதிர்ச்சி அடைகிறார்.அப்படி ஒரு அதிர்ச்சி தருகிறார் அவரது காதலி சனஷ்கா ஸ்ரீ. அது என்ன ? அதை எப்படி அவர் எதிர்கொள்கிறார்? சூழ்ந்து வரும் பகையை அவர் எப்படி வெல்கிறார் என்பது தான் 136.34 நிமிடங்கள் கொண்ட ‘வடம்’ படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்துக்கான திரைக்கதை, பார்ப்பவர்களுக்கு ஒரு திரையரங்கு அனுபவத்திற்கான அம்சங்களோடு எழுதப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு, மாடு பிடி பற்றி நிறைய படங்களில் காட்சிகள் வந்திருந்தாலும்,இப்படத்தில் மாடுபிடிப் போட்டிக்கு ,  காளைகளை உருவாக்குவதற்கு எப்படிப் பயிற்சி அளிக்கிறார்கள் என்பதற்கான காட்சிகள் உள்ளன.கதாநாயகனே அப்படிப் பயிற்சி தரும் காட்சியில் நடித்துள்ளார்.வடமாடு மஞ்சுவிரட்டு பற்றி இந்தப் படத்தில் தான் விரிவாகக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். மஞ்சுவிரட்டு, காளை போட்டி மட்டுமல்லாமல் அது சார்ந்த மண் ,அந்த மண்ணின் மைந்தர்கள், அவர்களின் மொழி ,போக்குகள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் ,அவர்களுக்குள் சூழும் பகைமை உணர்ச்சிகள் பற்றியும் காட்சிகள் உள்ளன.அந்தக் குடும்பங்களுக்குள் நிகழ்வு வீரமான, ஈரமான சம்பவங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கேந்திரன்.வி.

நடிகர் விமல் இதில் வெற்றிவேல் என்கிற பாத்திரத்தை ஏற்றுள்ளார். கதாநாயகர்கள் காளையை அடக்குபவர்களாகவே வருவார்கள். ஆனால் இதில் விமல் ,போட்டிக்காளையை உருவாக்குபவராகவும் அதில் பெருமை கொள்பவராகவும் நடித்துள்ளார்.பெரிய மீசையும் முரட்டுத்தனமும் என்று கிராமத்து வாலிபனாக வலம் வந்து தனக்கான நடிப்புத் தருணங்களைப் பயன்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

படத்தின் நாயகியாக வரும் சனஷ்கா ஸ்ரீ, பார்த்ததும் அளவான அழகு, குடும்பப்பாங்கான தோற்றம் என்று வருகிறார்.அவர் தனது இன்னொரு பக்கத்தைக் காட்டும்போது அதிர்ச்சி தருகிறது. அவரது பாத்திரத்தை இன்னும் விஸ்தாரப்படுத்தி இருக்கலாம்.

காளைகள், மஞ்சுவிரட்டுப் போட்டி என்பதை விளையாட்டாகக் கருதாமல் தனது சொந்த சுய பெருமையாகவும் கௌரவமாகவும் கருதி அதற்காக எந்த எல்லையும் செல்பவராக வருகிறார் நட்டி நடராஜ்.போட்டியில் தான் வளர்க்கும் மாட்டின் தோல்வியைக்கூட ஏற்றுக் கொள்ளாத மனம் கொண்டவராக  வந்து வில்லத்தனம் செய்கிறார்.

இதுவரை சுமாரான நகைச்சுவைக் காட்சிகளில்,சில படங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்த முனீஷ்காந்த் இதில் முழுமையான குணச்சித்திர முகம் காட்டியுள்ளார்.அவர் அவமானத்தில் குறுகி மறுகி உருகும் காட்சியில் கலங்க வைக்கிறார்.

விமலின் தந்தையாக வரும் நரேன், பெரிய மீசை வைத்த பெரிய மனிதராக ,நல்ல மனிதராக மாடுகள் நேசராக நடித்துள்ளார்.இந்தப் படத்தில் கதாநாயகன் விமலின் அம்மாவாக வரும் இந்துமதி, அத்தையாக வரும் தீபா சங்கர், உறவினராக நடித்திருக்கும் பால சரவணன்,சரவணசக்தி,எதிர்த் தரப்பில் எதிர்மறை பாத்திரத்தில் வரும் மதுசூதனன் ராவ் என மற்ற துணைக் தாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிப்புக் கலைஞர்களும் அந்த மண்ணின் மைந்தர்களாகவே வருகிறார்கள்.படத்தின் கதை மாந்தர்களைத் தாண்டி படத்தில் வரும் பிரம்மாண்டமான காளை மாடு பார்ப்பவர் மனதில் நிறைகிறது.

கிராமத்து மனிதர்கள் என்றால் வெள்ளந்தியானவர்கள் அல்ல. அவர்களுக்குள்ளும் குரூரமும் பகைமை உணர்ச்சியும் கொழுந்து விட்டு எரியும் என்பதற்கான காட்சிகளும் படத்தில் உண்டு.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார், மஞ்சுவிரட்டுப் போட்டிக் களத்தைக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பு.படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களையும் அதற்கான ஒளிமைப்பில் படப்பதிவு செய்து பதிய வைக்கிறார்.

டி.இமான் இசையமைத்துள்ளார்.பாடல்கள் அனைத்திலும் வணிக மணம் கமழ்கின்றன.பாடல்கள் திரும்பக் கேட்கும் ரகங்கள்.

ஞானக்கரவேல் எழுதிய ஆசை களவாணியே என்னை சொக்க வச்சே , பாண்டி முனி வரான் திமிலைத் தூக்கி வரான் , பாண்டிமுனி வரான் திமிரக்காட்டி வரான் , பாதகத்தி உன்னைக் காதலிச்சு கழுத்தறுத்தேன் எனப் பல பாடல்களும் கவனிக்க வைக்கின்றன. அவரே வசனமும் எழுதியிருக்கிறார். ஒரு வணிகப் படத்திற்கு ஏற்ற மாதிரியான வசனங்களை எழுதி உள்ளார்.

எழுதி இயக்கியிருக்கும் கேந்திரன்.வி, தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியைப் பின்னணி ஆக்கி கதை உருவாக்கி,அதற்குள் வணிக அம்சங்களை கலந்து சலிப்பூட்டாத வகையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.அனைத்து அம்சங்களையும் கொண்ட திரையரங்கு அனுபவமாகப் படத்தை மாற்றி உள்ளார்.

மொத்தத்தில், ‘வடம்’ விமலின் வெற்றிப்பட வரிசையில் அமையும் வகையில் உள்ளது.