துருவன் மனோ, மீனாட்சி கோவிந்தராஜன், ஆர் கே சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப் , வினோதினி, ஆர்.கே. வரதராஜ் ,முருகானந்தம், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஸ்வந்த், பாத்திமா பாபு நடித்துள்ளனர்.
பித்தாக் புகழேந்தி இயக்கியுள்ளார். மாரிஸ் விஜய் இசையமைத்துள்ளார். எம் .ஏ. ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார் .என்பிஆர் பிலிம்ஸ் ஏ மதியழகன், வீரம்மாள் மற்றும் ஸ்கை லைன் சினிமாஸ் ஆர்.எம். ராஜேஷ் தயாரித்துள்ளனர்.
வட்டக்கானல் என்பது கொடைக்கானலில் உள்ள ஒரு அழகிய காட்டுப்பகுதியாகும் இந்த வனப்பகுதி எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலுக்கு பெயர் பெற்றது அது மட்டுமல்ல அங்கே ஒரு வகை மேஜிக் மஷ்ரூம் என்று அழைக்கப்படும் போதைக் காளான் விளைகிறது.
ஆர் கே சுரேஷ் அந்தப் போதைக் காளான் செடிகளைப் பயிரிட்டுக் கோடிக் கணக்கான ரூபாய் பணம் பார்க்கிறார் . அவர் அந்த பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.அவர் ஆதரவற்ற மூன்று சிறுவர்களை வளர்த்து தனது விசுவாசியாக வைத்திருக்கிறார்.அவர்கள் தான் துருவன் மனோ, கபாலி விஸ்வந்த்,விஜய் டிவி சரத் ஆகிய மூவர்.அவர்களும் அப்பா, அப்பா என்று அவர் சொன்னபடி கேட்கிறார்கள்.அவரது நிழல் வாழ்க்கைக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.
தனது கணவனைக் கொன்றுவிட்டுச் சொத்தை அபகரித்துச் சுருட்டிக் கொண்டதற்காக பல ஆண்டுகளாக ஆர்கே சுரேஷைப் பழிவாங்க சரியான நேரம் பார்த்துக் காத்து இருக்கிறார் வித்யா பிரதீப்.
மீனாட்சி கோவிந்தராஜன், தனது பரம்பரைச் சொத்துக்களை, அவரது மிகப்பெரிய ஸ்டேட் டில் வேலை பார்க்கும் ஏழைத் தொழிலாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.ஆனால் ஆர்கே சுரேஷ் அந்தச் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். இதற்கு தடையாக அவரது வளர்ப்பு மகன்களில் ஒருவரான துருவன் மனோ உள்ளே நுழைகிறார்.அவருக்கு ம் மீனாட்சிக்கும் காதல் உள்ளது. அதற்கு ஒரு காரணம் உள்ளது.
ஒரு கட்டத்தில் வளர்ப்பு மகன்களை ஆர் கே சுரேஷ் சந்தேகிக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜனின் ஏழைகளுக்கு சொத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற்றதா ? பழிவாங்கத் துடிக்கும் வித்யா ப்ரதீப்பின் திட்டம் பலித்ததா? ஆர்கே சுரேஷுக்கும் மகன்களுக்கும் இடையில் விழுந்த விரிசல் என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிப்பது தான் ‘வட்டக்கானல்’ படத்தின் மீதிக் கதை.
நாயகன் துருவன் மனோ சற்று எடை கூடி இருந்தாலும் அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துகிறார்.எடையைக் குறைத்தால் அவர் படங்களில் வலம் வரலாம்.
மீனாட்சி கோவிந்தராஜனின் தோற்றமும் நடிப்பும் பாராட்டும் வகையில் உள்ளது என கூறலாம்.ஆர்கே சுரேஷ் மிரட்டும் தோற்றத்தில் வந்து எதிர்மறைப் பாத்திரத்தில் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா ப்ரதீப், வினோதினி போன்ற நடிப்புக் கலைஞர்களும் தங்கள் நடிப்புப் பங்களிப்பை குறை சொல்ல முடியாத அளவிற்கு வழங்கி உள்ளனர்.
போதைக் காளான் சாகுபடி அதை ஒட்டிய தொழில் செய்யும் ஆர் கே சுரேஷ் என்கிற எதிர்மறைப் பாத்திரத்தை மையப்படுத்தி இந்தக் கதை உருவாகி இருக்கிறது .ஆனால் போதைக் காளான் பற்றிய விளைவுகளைப் படத்தில் சரியாகக் கூறியிருந்திருக்கலாம்.
படத்தில் திரும்பத் திரும்ப வரும் வசனங்கள் அலுப்பூட்டுகின்றன. படத்தலைப்பு, நடிகர்களை வைத்து மேலும் எதிர்பார்த்தோம். அது நிறைவேறவில்லை. அந்த வகையில் ஒரு ஏமாற்றமே.
இயக்குநர் விரும்பிய பாதையில் ஒளிப்பதிவும் இசையும் கைகோர்த்து நடந்து சென்றுள்ளன. ஒரு ரவுடியின் அட்டகாசம் ஆர்ப்பாட்டம் அவனது வீழ்ச்சி பற்றிய கதையாக இந்தப் படம் முடிகிறது.
சற்றே பழக்கமற்ற மலைப் பிரதேசப் பின்புலத்தை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.மலைப்பகுதியின் அழகையும் மேலும் அழகாகக் காட்டி இருந்திருக்கலாம்.
பின்புலக் காட்சிகளுக்காக ஒரு முறை இந்தப் படத்தை பார்க்கலாம்.


