வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி என்கிற பெயரில் உருவாகியுள்ள இணையத் தொடரின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
வதந்தி என்பது தீயை விட வேகமாகப் பரவக்கூடியது. இன்றைய ஊடகங்கள் ஒரு சிறு துரும்பையும் தூணாகப் பெரிதாக்கி பரபரப்பு தேடிக் கொள்கின்றன.
ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் வலி பற்றியோ தாக்கம் பற்றியோ சிந்திப்பதில்லை. அப்படி ஒரு வதந்தியால் பாதிக்கப்படுவதைப் பிரதான கருத்தாக்கி ஓர் இணைய தொடரை எடுத்திருக்கிறார்கள்.
இறந்திருப்பது அழகான இளம் பெண் என்றால் மீடியாக்கள் பார்வையே வேறு .பக்கம் பக்கமாக படங்களை வெளியிட்டு பரபரப்பு தேடுவார்கள்.அப்படி ஒரு இளம் பெண்ணின் மரணமும் ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளும் இறந்ததாக கருதப்படும் இறக்காத பெண்ணுக்கு எப்படிப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை இதில் சொல்லி உள்ளார்கள்.
வதந்திகளின் தாக்கத்தை மையமாக வைத்து ‘வதந்தி’ இணையத் தொடரை இயக்கி உள்ளார் ஆன்ட்ரு லூயிஸ். வால் வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது .
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ள இந்தத் தொடரை இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரித்து உருவாக்கி உள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடக்கும் ஒரு நாளில் நடிகை மர்மமான முறையில் கொலையாகிறார் என்று செய்தி பரவுகிறது. இது உண்மையா? வதந்தியா? இறந்த உடல் கண்டெடுக்கப் படுகிறது .
இந்த செய்தி ஊடகங்களில் வேகமாகப் பரவுகிறது.திடீரென இறந்த நடிகை தோன்றி நான் இறக்கவில்லை உயிருடன்தான் இருக்கிறேன் என்கிறார்.
நடிகை கொலை செய்யப்படவில்லை என்றால் கொலையான பெண் யார்? கொலை செய்யப்பட்டது யார் என போலீஸ் விசாரணையைத் தொடங்குகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள அழகான இளம் பெண் வெலோனி தான் படுகொலை செய்யப்பட்ட பெண் .இதைக் கண்டு பிடிக்கிறது காவல் துறை. துறையின் விசாரணையில் திருப்தி அடையாத மதுரை உயர் நீதிமன்றம் விரைவாக வழக்கை முடிக்கச் சொல்கிறது.
இதனால் எஸ்.ஜே. சூர்யாவை நியமிக்கிறது காவல் துறை. அவர்,இறந்த பெண் திருமணம் செய்து கொள்ள இருந்த இளைஞனை விசாரிக்கிறார். அந்த இளைஞனும் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறான்.
கொலை நடந்ததாகச் சந்தேகப்படும் பகுதியில் உள்ள சில தடயங்களையும்,மனிதர்களையும் சந்தேகிக்கிறார் சூர்யா.அதன்பின் ஏற்படும் பரபரப்பான திருப்பங்கள் தான் தொடரின் கதை மையம் கொள்ளும் பகுதி.
இத்தொடர் சிறந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கிறது.
கதை நடக்கும் கன்னியாகுமரி பின்புலம் ஒரு நல்லதொரு தோற்ற மாற்றத்தை அளிக்கிறது.கதை சொல்லும் வகையில் பாத்திரங்கள், சித்தரிப்புகள், காட்சிப்படுத்தல் என இத் தொடர் திரைப்படத்திற்கு நிகரான அனுபவத்தைத் தருகிறது.
குமரி மாவட்ட கிறிஸ்தவ மக்களின் பின் புலத்தில் இந்த கதை நிகழ்கிறது.பெயர்களும் பேச்சு வழக்கும் ஒரு புதிய அனுபவத்தை தருகிறது.
இணையத்தொடர் என்றாலே சுதந்திரமாக எடுக்கப்படும் மிகக் கொடூரமான காட்சிகளும் ஆபாச வசனங்களும் தேவைதானா என்று உருவாக்குபவர்கள் சிந்திக்க வேண்டும்.
கதாநாயகி வெலோனியாக நடித்திருக்கும் சஞ்சனா அழகு, நடிப்பு, குழந்தைத் தனம் என முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
காவல்துறை அதிகாரியாக வரும் எஸ் ஜே சூர்யா விறைப்பை மறந்து பொறுப்புள்ள நபராக வருகிறார்.நல்ல நல்ல நடிப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்தி பளிச்சிடுகிறார்.
நாசர் எழுத்தாளராக அசலாகப் பொருந்துகிறார். லைலாவிற்கு இது மறுபிரவேசம் எனலாம்.அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் துணிச்சலானது. நல்ல குணச்சித்திரம் கொண்டது.
ஆங்கிலோ இந்தியப் பெண் வேடம். ,கணவரை இழந்து தனியாக வாழும் தாயின் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வெலோனி வழக்கை விசாரிக்க வரும் இன்னொரு காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் விவேக்பிரசன்னா மிக இயல்பாக நடித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட்டின் நடிப்பு சிறப்பு. கணவரிடம் கோபித்துக் கொண்டு அப்பா வீட்டுக்குச் செல்லும் காட்சிகள் பளிச்.
வெலோனியைத் திருமணம் செய்யப்போகும் இளைஞராக நடித்திருக்கும் குமரன் தங்கராஜன், இக்கால இளைஞர்களின் சாயல் காட்டி இருக்கிறார்.
ஹரீஷ்பெராடி, அவினாஷ், அஸ்வின்குமார், ஆதித்யா, வைபவ் முருகேசன், அஸ்வின்ராம், அருவி பாலாஜி, திலீப்சுப்பராயன்,குலபுலி லீலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் சரவணன், கதைக் காட்சிகளை அனுபவமாக மாற்றியிருக்கிறார்.
சைமன் கே கிங் இசை தொடரின் தன்மையை உயர்த்தியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ்,பல இடங்களில் முத்திரை காட்டியுள்ளார்.வதந்தி -உண்மையை உரக்கச் சொல்கிறது.வதந்தியின் தாக்கத்தைக் கூறி எச்சரிக்கிறது.