ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா ,ஹரிப்ரியா , சங்கர் நாக் விஜயன், பிரியதர்ஷன், ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி, பேபி ஜாய்ஸ் நடித்துள்ளனர். ஜெயவேல் முருகன் இயக்கியுள்ளார். போபோ சசி . யாக்கை பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
பஞ்சபூதங்களில் ஒன்றான நீர் பற்றி ஆதியிலே வார்த்தை இருந்தது என்கிற தொன்மத்தின் கதை போல வாய்ஸ் ஓவர் கொடுத்துப் படம் தொடங்குகிறது.
ராதாரவியின் ஐயாவு வாட்டர் கேன் கம்பெனி, சரண்ராஜின் ஜான் வாட்டர் கேன் கம்பெனி என சென்னை, ராயபுரம் பகுதியில் இரண்டு பேர் வியாபாரம் செய்கிறார்கள்.அவர்கள் இருவருக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி இருந்தாலும் தலையீடுகள் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.நிறுவனத்தின் உரிமையாளர்கள் மோதல் இல்லாமல் தொழில் செய்து வந்தாலும், அவர்களிடம் வேலை செய்யும் இளைஞர்களிடம் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
இவர்களுக்குள் நிலவும் தொழில் போட்டியை முன்வைத்து ஒரு போலீஸ்காரர் நுழைந்து குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார். அதன் மூலம் இருவரிடம் பெரும் பகையாக உருவெடுக்கிறது. அதன் விளைவு என்ன என்பதைச் சொல்வதே ‘வருணன்’.
தண்ணீர் கேன் நிறுவனம் நடத்துபவர்களாக நடித்திருக்கும் ராதாரவி மற்றும் சரண்ராஜ் அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.குறிப்பாக ராதாரவி மதுரைக்காரர், பொறுமைசாலியாக இருக்கிறார் .அதுவே ஒரு வித்தியாசம் .சரண்ராஜ் திக்குவாய்க்காரராக நடித்து பதிகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா இருவரும் ஏற்ற பாத்திரத்திற்கு ஏற்ப கச்சித நடிப்பு. இன்னொரு ஜோடியான பிரியதர்ஷன் – ஹரிப்ரியா இருவரும் கூட குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் கவனம் ஈர்க்கிறார்.ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என அனைவரும் படத்தின் கதையோட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.
மதுரைக்காரர்கள் திருநெல்வேலி காரர்கள் பெருமையைப் பேசும் வசனங்கள் வருகின்றன.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், கடினமாக சுற்றி பாடுபட்டுக் காட்சிகளை எடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியைப் படமாக்கிய விதம் வியக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்பஅமைந்துள்ளன.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயவேல் முருகன், உலகளாவிய பிரச்சினையான தண்ணீர் பிரச்சினையைப் படம் பேசும் என்று எதிர்பார்ப்புகளை எழுப்பிவிட்டு கடைசியில் பார்த்தால் தண்ணீர் கேன் முதலாளிகளுக்குள் சண்டை, இடையே இளைஞர்கள் மோதல், காதல் என்று அந்த நோக்கத்தை சுருங்கச் செய்துவிட்டார்.பல காட்சிகள் பல படங்களில் பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன.
மொத்தத்தில், ‘வருணன்’ அடைமழை என்று நினைத்தால் செடி மழையாகி உள்ளது.