‘வல்லமை’ திரைப்பட விமர்சனம்

பிரேம்ஜி அமரன், திவதர்ஷினி, தீபா சங்கர், வழக்கு எண் முத்துராமன், சி. ஆர் ரஜித் ,சூப்பர் குட் சுப்பிரமணி, போராளி திலீபன் நடித்துள்ளனர் கருப்பையா முருகன் இயக்கியுள்ளார். ஜி கே வி இசையமைத்துள்ளார்.பேட்டல்ஸ் சினிமா தயாரித்துள்ளது.

பிரேம்ஜி மனைவியை இழந்தவர்.தனது ஒரே பெண் தீபிகாவை அழைத்துக்கொண்டு கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னை வருகிறார். தெருத்தெருவாகப் போஸ்டர் ஒட்டும் வேலை கிடைக்கிறது.தான் உண்டு. தன் மகள் உண்டு என்று இருக்கிறார்.மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்ற கனவுடன் உள்ளார்.பள்ளி ஆண்டு விழாவிற்குச் சென்று வந்த மகள் ஒரு பிரச்சினையைச் சொல்கிறாள்.மருத்துவரைப் பார்க்கும் போது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது தெரிகிறது.அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து தந்தையும் மகளும் கொல்ல முடிவு செய்கிறார்கள் .சிக்கிக் கொள்ளாமல் எப்படி அதைச் செய்வது என்று திட்டமிடுகிறார்கள்.அதன் முடிவு என்ன என்பதுதான் வல்லமை படத்தின் கதை.

பண பலத்தாலும் அதிகார பலத்தாலும் செய்யப்படும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் குரலாகவும் கோபமாகவும் வெளிப்பட்டிருப்பதே ‘வல்லமை’.

ஒரு ஏழைக் குடும்பத்து தந்தையாக, நடித்திருக்கிறார் பிரேம்ஜி. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முயன்றதையே பாராட்டலாம்.அவரது வழக்கமான அங்க சேஷ்டைகளை தவிர்த்து உணர்வுப்பூர்வமாக நடிக்க முயன்றுள்ளார். நல்லதொரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி திவதர்ஷினி, தனக்கு நேர்ந்த அநீதிக்குப் பழிவாங்க முயற்சி செய்வது சற்று அதிர்ச்சி அளிக்கிறது. இருந்தாலும், தன் குழந்தை முகத்தோடு அதற்கான காரணத்தை சொல்லும் போது,படம் பார்ப்பவர்களின் அனுதாபத்தை அள்ளுகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக ’வழக்கு எண்’ முத்துராமன், போலீஸ் கான்ஸ்டபிளாக சூப்பர் குட் சுப்பிரமணி, தொழிலதிபராக சி.ஆர்.ரஜித், கார் ஓட்டுநராக சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக விது, பள்ளி  பணியாளராக திலீபன் என நடித்துள்ள அனைவரும் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வுகள்.

இசையமைப்பாளர் ஜி.கே.வி மற்றும் ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி இருவரும் கதைக்கு ஏற்ப கைகோர்த்து இயக்குநருடன் பயணித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சொல்ல வந்த வேகத்தில் படத்தை இயல்பாக தொகுத்துள்ளார் சி.கணேஷ் குமார்.

எளிமையான காட்சிகளாக இருந்தாலும் சில இறுக்கம் குறைந்த காட்சிகள் படத்தின் பட்ஜெட்டை சொல்கின்றன.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கும் கருப்பையா முருகன், பெண் பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் தற்போதைய காலக்கட்டத்தின் அவலத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்து அபாய மணி அடித்திருக்கிறார்.சற்றுக் கவனம் பிசகினாலே அபாய எல்லை தாண்டி விடும் கதை அமைப்பில், முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்து விடும் கதையினை மிகவும் கவனமாகக் கையாண்டு தான் எடுத்துக் கொண்ட கருத்தை வெளிப்படுத்தி பொறுப்புணர்ச்சி காட்டி உள்ளார் இயக்குநர்.

பாலியல் வன்கொடுமைகளை வெறும் செய்திகளாக மட்டுமே கடந்து போகும் இந்த சமூகத்திற்கு, பாதிக்கப்படும் குழந்தைகளின் உடல் ,மன வலிகள் வலிகளைப் பார்வையாளர்களிடம் கடத்தியுள்ளார் இயக்குநர்.

மொத்தத்தில், ‘வல்லமை’ பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்து கவனப்படுத்தும் ஓர் எளிய முயற்சி எனலாம்.