‘வாழை’ திரைப்பட விமர்சனம்

பொன்வேல்,ராகுல்,ஜானகி, திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல், பத்மன், ஜே. சதீஷ்குமார் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் எழுதி இயக்கி உள்ளார் .சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.கலை இயக்கம் குமார் கங்கப்பன்.படத்தொகுப்பு சூர்யா பிரதமன் .

டிஸ்னி ஹாட் ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் ப்ரொடக்சன் இணைந்து தயாரித்துள்ளன.ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் மீது சாதி சார்ந்த படங்களை எடுக்கிறார் ,குறிப்பிட்ட சாதியை ஒரு முத்திரையாக பயன்படுத்திக் கொள்கிறார் என்கிற பேச்சு உண்டு .சிலர் இதை ஒரு புகாராகவே கூறுவார்கள். விமர்சன நோக்கில் பார்த்தால் ஒரு முழுமையான படைப்பாளி அந்தத் தடைகளை விட்டு வெளியே வர வேண்டும். அந்த வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும். வெகுஜனமக்களுக்கான படைப்புகளைக் கொடுப்பவரே முழுமையான படைப்பாளியாக இருக்க முடியும் .அப்படி ஒரு முயற்சியாக ‘வாழை’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.இந்த ஒரு படத்தின் மூலம் வெகுஜன இயக்குநராக அவர் விசாலமாகிவிட்டார்.

தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் காட்சிகளாக அமைத்து இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார்.குறிப்பாக அவரது அக்காவின் நினைவுகள் இதில் வருகின்றன.பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் மாதிரி நெல்லை மண் பின்னணியில் நடக்கும் கதை.அதாவது 1999 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

சிறுவன் சிவனைந்தன் விவசாயக்கூலியின் குடும்பத்தைச் சேர்ந்தவன்.சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன்.அம்மா, அக்கா இருவரும் பக்கத்து ஊருக்குச் சென்று வாழைத்தார்களை அறுத்து லாரியில் ஏற்றும் வேலை செய்கிறார்கள்.இந்த வேலையை விடுமுறை நாட்களில் சிவனைந்தனும், அவனது நண்பன் சேகரும் கூடச் செய்து வருகிறார்கள்.

அது ஒரு சனிக்கிழமை விடுமுறை நாள்.இளமை வயதின் குறுகுறுப்பில் அம்மாவை ஏமாற்றி விட்டு, பள்ளிக்கு நடன ஒத்திகைக்குப் போய் விடுகிறான் சிவனைந்தன். அந்த சனிக்கிழமை நாளில் நடக்கும் துயரமான அத்தியாயம்தான் வாழை.
இதில் அரசியலைப் பிரச்சார தொனியில் பேசாமல் பொதுவுடமை பற்றிப் பேசி உள்ளார் மாரி .

படத்தின் முதல் பாதி அந்த வயதில் சிறுவர்களிடம் நிலவும் ரஜினி, கமல் விவாதங்கள்,சிறு சிறு சண்டைகள், கோஷ்டிப் பூசல்கள் என்று கலகலப்பாகச் செல்கிறது.காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் அழகு.இடைவேளைக்கு பிறகான இரண்டாம் பாதியில் வாழ்க்கை எவ்வளவு கொடூரமான கத்தியை வைத்துக் கொண்டிருக்கிறது என்கிற ரீதியில் காட்சிகள் செல்கின்றன.வாழ்க்கையில் எதார்த்தம் அறையும் காட்சிகள் வருகின்றன.

பூவையும், கொடியையும் வரைந்து எனக்கு பிடித்த டீச்சர் பூங்கொடி என்று சொல்லும் காட்சி, ஒரு விபத்தை படமாக்கிய விதம் என பல இடங்களில் மாரி செல்வராஜ் சபாஷ் போட வைக்கிறார்.

தனது படங்களில் பிரதான நாயகர்களுக்கு மட்டுமல்லாமல் குணச்சித்திரங்களுக்கும் உரிய இடம் கொடுத்து இருப்பார் மாரி. இந்த
வாழையில் பூங்கொடி டீச்சராக நிகிலா, நண்பன் சேகராக ரகுவையும் அப்படிஅமைத்து வழங்கி உள்ளார்.
இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். மாஸ்டர் பொன் வேல் , அந்த சிவனைந்தன் பாத்திரத்தில் வாழ்ந்து பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, அக்காவாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமி, கலையரசன் அனைவருமே சரியான தேர்வு.இவர்கள் அனைவருமே தங்கள் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணன் தன் இசைப் பணியில் குறை வைக்கவில்லை.திருநெல்வேலி மண்ணுக்குள் நம்மை கொண்டு இறக்கி விட்டு காட்சிகளை நேரில் காணும் அனுபவங்களை தேனி ஈஸ்வரின் கேமரா வழங்கி உள்ளது.

ஆங்கிலப் படங்களில் இருந்து சூடு போட்டு எடுக்கப்படும் படங்கள் மத்தியில் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்தால் அது எப்படி ஒரு நிறைவளிக்குமோ அந்த நிறைவை இந்தப் படம் அளிக்கிறது.மாரி செல்வராஜ் என்கிற படைப்பாளியின்
ஒரு கலாபூர்வமான படைப்பாக உண்மையின் உயிரோட்டமும், இயல்பின் பச்சையவாசனையும் கொண்டதாக இந்த ‘வாழை’ படம் பார்ப்பவர்கள் மனதில் பதிகிறது.