அது மர்மங்கள் நிறைந்த அமானுஷ்யம் தொனிக்கும் ஒரு தனிமைக் கிராமம். அங்கே சிறுவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். அந்த ஊருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக செல்லும் நாயகன் கிச்சா சுதீப், அந்த கிராமத்தில் நிலவும் மர்மங்களை எப்படி அவிழ்க்கிறார், அங்கு ஏன் கொலைகள் நடக்கின்றன அதன் பின்னணி என்ன? என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார், என்பதே படத்தின் கதை.
கேஜிஎப் படத்திற்கு பிறகு கன்னட சினிமாவின் மீது அனைவரின் பார்வையும் படுகிறது. அந்த வகையில், ‘விக்ராந்த் ரோணா’ படத்திற்கும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இதுவும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
நாயகன் கிச்சா சுதீப், தனது வழக்கமான அதிரடி நடிப்பால் அசத்தியிருக்கிறார். காக்கி சீருடை போடாமலேயே போலீஸாக வரும் சுதீப்பின் தோற்றம் படத்திற்கு மிகப்பெரிய பலம். கொலைக்கான காரணம் குறித்து துப்பறியும் சுதீப், சில இடங்களில் கொடுக்கும் சஸ்பென்ஸ் சர்பிரைஸாக உள்ளது.
படத்தில் இடம்பெறும் அப்பா, மகள் சென்டிமென்ட் காட்சிகள் நெகிழ வைக்கும்.
இரண்டாம் நாயகனாக வரும் நிரூப் பண்டாரி படம் முழுவதும் வருகிறார். படம் முழுவதும் இளமைத் துள்ளல் நடிப்பால் கவனம் பெறுபவர் க்ளைமாக்ஸ் காட்சியில் கொடுக்கும் அதிர்ச்சி வேறு ரகம்.நீதா அசோக் கண்ணழகியாக இருக்கிறார்.ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனது நடனம் மூலம்படம் பார்க்கும் அனைவரையும் புத்துணர்ச்சியூட்டிவிடுகிறார்.
இயக்குநர் பிரியா நடிகையாக அறிமுகமாகி கவனம் பெறுகிறார். அவரது கணவராக நடித்திருக்கும் மதுசூதன ராவ் எப்போதும் போல் கொடுத்த பாத்திரத்திற்கு நேர்மை செய்திருக்கிறார்.

கன்னடப் படம் என்றாலும் படத்தில் இடம்பெறும் வசனங்கள் டப்பிங் படம் என்ற உணர்வு ஏற்படாத வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்ப் படுத்தியவர்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்.
அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
பின்னணி இசை கதைக்குப் பலம்.
ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட் வித்தியாசமான முறையில் இருட்டின் பின்னணியில் ஏராளமான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்.
படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம் மற்றும் லொக்கேஷன் ஹாலிவுட் படத்தை பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் அனுப் பண்டாரி, சாதாரண ஒரு கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து அதை வித்தியாசமான முறையில் படமாக்கியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் பல ட்விஸ்ட்டுகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.
படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3டி தொழில்நுட்பம் மிக நேர்த்தியாக உள்ளது.
திரைக்கதை மெதுவாக நகர்வதும் இரண்டாம் பகுதியில் வரும் லவ் ட்ராக்கும் படத்திற்குப் பின்னடைவுகள்.

சில திருப்புமுனை காட்சிகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார்.
சாதாரண காட்சிகளைக் கூட 3டி தொழில்நுட்பத்தில் அசாதாரண மாகக் காட்டி எதிர்பார்ப்புகளை ஈடு செய்து விடுகிறார்கள்.
மொத்தத்தில், தொழில்நுட்ப முத்திரை கொண்ட ‘விக்ராந்த் ரோணா’-வை ஒரு முறை பார்க்கலாம்.