அண்மைக்காலமாக மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உருவாகியுள்ள படம்தான் ‘விசித்திரன்’.
மலையாளத்தில் ‘ஜோசப் ‘ என்ற படத்தை இயக்கிய பத்மகுமார், அதே கதையை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் படமாக இயக்கி இருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் நாயகன் ஆர்.கே. சுரேஷ். வேலையை விட்டாலும் அவருடைய புத்திசாலித்தனத்தை காவல்துறை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.எந்தக் கொலை குற்றம் நடந்தாலும் பெரிய அதிகாரிகள் கூட கண்டுபிடிக்க முடியாத கொலைக் குற்றங்களைத் தனது துப்பறியும் திறனால் கொலையாளியை எளிதில் கண்டுபிடித்து விடுவார். அப்படிப்பட்டவர் மதுபோதைக்கு அடிமையாக இருக்கிறார்.
இந்நிலையில் அவரை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி பூர்ணா, சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இது விபத்தல்ல கொலை என்று ஆர்கே சுரேஷுக்கு என்று தெரியவருகிறது. மனைவி மரணத்திற்கான பின்னணியை ஆர்கே சுரேஷ் தேட ஆரம்பிக்கிறார்.
இறுதியில் மனைவி பூர்ணாவை கொலை செய்தது யார் என்பதை ஆர்.கே. சுரேஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா? பூர்ணாவை கொலை செய்ததற்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார்.ஒவ்வொரு தோற்றத்துக்கும் உடல் எடையைக் குறைத்தும், கூட்டியும் காட்டியிருக்கும் உழைப்பு அபாரம். மிக இயல்பாகவும் நடித்திருக்கிறார்.
சின்னச் சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.அதிலும், வயதான கெட்டப்பில் அவர் வெளிப்படுத்திய உடல் மொழி சபாஷ்.
நாயகியாக நடித்திருக்கும் பூர்ணா, பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அதிகம் வசனம் இல்லை என்றாலும் பல இடங்களில் முக பாவனைகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் மது ஷாலினி ஏற்றிருப்பது சிறு வேலையாக இருந்தாலும் நிறைவு செய்திருக்கிறார்.
மற்ற பாத்திரங்களில் நடித்திருக்கும் பகவதி பக்ஸ், இளவரசு, மாரிமுத்து என அனைவரும் நல்ல தேர்வுகள் .
மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை மையமாக வைத்து இயக்குநர் பத்மகுமார் எழுதியிருக்கும் கதையும், அதை அவர் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக்கியுள்ள விதமும் சிறப்பு.
இயக்குநர் உடலுறுப்புத் திருட்டை வைத்து நல்ல உணர்ச்சிகரமான திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கி மருத்துவ மாஃபியா கதையை மிக நேர்த்தியாக வழங்கியிருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.. மலையாளத்தில் இந்த சினிமாவை நீங்கள் பார்த்திருந்தாலும் விசித்திரன் அதே திருப்தியை நிறைவை மீண்டும் நமக்கு தமிழில் தருகிறான்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ற பங்களிப்பு.“கண்ணே கண்ணே பாடல்…” திரும்பத் திரும்பக் கேட்க வைக்கும் ரகம்.வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்குப் பலம்.
மொத்தத்தில் ‘விசித்திரன்’ கவர்வான்.