‘வித் லவ்’ (With Love)திரைப்பட விமர்சனம்

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், கலைமாமணி சரவணன், ஹரிஷ் குமார், காவியா அனில் , சச்சின் நாச்சியப்பன், சாச்சனா ,ஆர் ஜே ஆனந்தி, டிம்பிள் கண்ணா, சித்தார்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். மதன் இயக்கியுள்ளார் . ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு – சுரேஷ்குமார், கலை இயக்கம் – ராஜ்கமல் .ஜியோன் பிலிம்ஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டைன்மென்ட் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் – மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்துள்ளனர்.

நேற்று என்பது இன்று கடந்த காலம் .இன்று என்பது நாளை கடந்த காலமாகிவிடும். இப்படிக் கடந்த கால நினைவேக்கத்தில் கதாபாத்திர உணர்வுகளைச் சொல்லும் படைப்புகளுக்குத் தனி மதிப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனும் அந்த உணர்வைக் கடக்காமல் வந்திருக்க முடியாது.நமது அடிமன ஆழத்தில் உறைந்து கிடக்கும் அந்த உணர்வுகளை மீட்டிப் பார்ப்பது என்றுமே சிலிர்ப்பூட்டும் சுகமான அனுபவமாக இருக்கும்.காயத்தின் வடுவாக இருந்தாலும் கூட பிற்காலத்தில் அதைத் தடவி பார்க்கும்போது தோன்றும் மன எழுச்சி அலாதியானது .இப்படி ஒரு நாஸ்டால்ஜியா உணர்வை எடுத்துக்கொண்டு 141.25 நிமிடங்களில் காதல் கதையாக உருவாகி இருக்கும் படம் தான் ‘வித் லவ்’.

எஸ்டிஏ மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் மலர்ந்த காதல் கதைகளைச் சில காலம் கழித்து மீட்டெடுக்க நினைக்கும் போது பழைய காதலின் திசையை  புதிய வாழ்வின் திருப்பங்கள் வேறு விதமாக அழைத்துச் செல்லுகின்றன. முடிவு என்ன என்பதைச் சொல்வதே வித் லவ் படத்தின் கதை.

திருமணம் தள்ளிக் கொண்டே செல்கிற சத்யா, தன் அக்காவின் வற்புறுத்தலால் ஒரு பெண்ணைப் பார்க்க வருகிறார். ஒரு பொது இடத்தில் இருவரும் சந்திப்பதாக ஏற்பாடு.அங்கே மோனிஷா வருகிறார். அவர்கள் சந்திப்பிலிருந்து தான் கதை தொடங்குகிறது.அவர்கள் ஒருவரை ஒருவர் அறியும் முயற்சியில் கடந்த காலத்துக்குள் நுழைகிறார்கள்.ஒருவருக்கொருவர் இதுதான் நடந்தது என்று தங்கள் காதல் கதையைச் சொல்கிறார்கள். இருவருக்கும் தனித்தனியான காதல் கதை இருக்கிறது.ஒருவருக்கொருவர் பகிரும் போது தான் தெரிகிறது இருவருமே ‘நேரம் கூடி வந்த வேளை நெஞ்சை மூடி வைத்த கோழைகளாக’ காலத்தைத் தவற விட்டு இருப்பது தெரிகிறது.

‘நாம் 15 நாள் அவகாசம் எடுத்துக் கொள்வோம். கை நழுவிப் போன அந்த பழைய காதல் கைகூடினால் மகிழ்ச்சி. அப்படி இல்லை என்றால் பிடித்திருந்தால் நாம் இணைவது பற்றி யோசிப்போம் ’என்கிற நிபந்தனையுடன் தேடலைத் தொடங்குகிறார்கள்.வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த ஒரே ஒரு தருணத்தை நோக்கிச் செல்கிறார்கள்.அதற்குப் பிறகான நாட்களில் காலத்திற்கும் மனித உணர்வுகளுக்குமான கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்குகிறது.போகப் போக தருணங்களின் நிறமாற்றங்கள் பல்வேறு உணர்வுகளை வெளிக்கொண்டு வந்து கதையைச் சுவாரஸ்யமாக்குகிறது.இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவைத் தேடிய பயணம் தான் மீதிக்கதை.

’டூரிஸ்ட் பேமிலி ’என்கிற தன் முதல் படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குநராக விளங்கிக் கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த் இதில் சத்தியசீலன் என்கிற சத்யாவாக நடித்துள்ளார்.ஒரு திரைக்கதாநாயகனுக்குள்ள தோற்றம் இல்லாவிட்டாலும் கதையின் நாயகனாகிப் போகப் போக மனதில் பதிகிறார்.பள்ளிக்காலத் தோற்றம், வாலிபனாக மாற்றம் என்று இரு வேறு தோற்றங்களில் அபிஷன் மிகச் சரியாகப் பொருந்துகிறார்.இயல்பான முகம், மிகை தோன்றா நடிப்பு என்று அவர் ஸ்கோர் செய்துள்ளார். அந்தப் பாத்திரத்திற்கான காதல், ஆசை, ஏக்கம், வருத்தம்,புறக்கணிப்பு, வலி, அவமானம் ,தாழ்வுணர்ச்சி, கோபம்,பொறாமை என வெளிப்பட வாய்ப்புள்ள சகல விதமான நடிப்புத் தருணங்களையும் பயன்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.ஒரு புதுமுக நடிகர் செய்யாத வேலைகளை இதில் அவர் செய்திருக்கிறார். சபாஷ்.

அதேபோல் மோனிஷாவாக வரும் அனஸ்வரா ராஜனும் அந்தப் பாத்திரத்தில் சற்றுச் சிந்திக்கத் தெரிந்த பெண்ணாக வந்து அலட்டிக் கொள்ளாமலே மதிப்பெண் பெறுகிறார். அவரது வசன உச்சரிப்பு தான் சற்று இடறுகிறது.
அதேபோல் படத்தில் சச்சின் நாச்சியப்பன் ஏற்றுள்ள பாலாஜி பாத்திரமும் நன்றாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.அவரும் படம் பார்ப்பவர்கள் கவனத்தில் இருப்பார்.அனிஷாவாக வரும் காவியா அனில் மாணவப் பருவம் முதல் திருமணம் ஆகிக் குழந்தை பெற்றது வரை தோற்றம் காட்டியுள்ளார். அவரும் அலட்டிக் கொள்ளாமல் அந்த இஸ்லாமிய பெண் பாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னர் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் அந்த முதிர்வு நிலையைத் தனது நடிப்பில் அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.அதேபோல் குறைந்த காட்சிகளில் ஜாஃபர் பாத்திரத்தில் வரும் சித்தார்த்தையும் மறக்க முடியாது.ஏன் தினேஷாக வரும் ஹரிஷ் குமாரை மட்டும் மறக்க முடியுமா என்ன?சத்யாவின் அக்காவாக வரும் ஆர்.ஜே.ஆனந்தி அந்த முதிர்ச்சியான பாத்திரத்தில் இயல்பான நடிப்பைக் காட்டியுள்ளார்.

இவர்கள் மட்டுமல்ல நாயகன் சத்யாவின் தந்தையாக வரும் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக வரும் சரவணன், நாயகியின் தோழிகள் டிம்பிள் கண்ணா ஆகியோரும் தங்களுக்குக் கொடுத்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்தி வெளிப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு காட்சிகளின் பின்புலங்களை விடவும் கதாபாத்திரங்களின் அக உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளது.

ஷான் ரோல்டனின் இசையில் வரும் மறந்து போச்சே மனசு மரத்துப்போச்சே, அடடா இவளா என் பக்கத்துல ?, ஐயோ காதலே பாடல்களும் படத்தில் இளமைத் துள்ளலாக ஒலிக்கின்றன.காதல் வலியையும் காட்டத் தவறவில்லை. அதுமட்டுமல்லபின்னணி இசையின் மூலமும் ஷான், தனது பலம் காட்டியுள்ளார்.

‘அவள் வருவாளா ?’ என்கிற பாடல் படத்தில் ஓர் இடத்தில் வருகிறது. அந்தப் பாடலின் அமைவிடம் வெகு பொருத்தம், அழகு.பாடல் கனகச்சிதமாகப் படத்தில் அமைந்து ரசிக்க வைக்கிறது .அதன் ஒவ்வொரு வரியும் இந்தப் படத்தின் சூழலுக்குச் செழுமை சேர்த்து இருக்கிறது.

மொத்தத்தில் எத்தனையோ காதல் கதைகள் இருந்தால் அதில் ஓர் இழை பிரித்து அழகாக ஜரிகை பின்னி நல்ல திரையாடையாக நெய்து பார்வையாளர்களுக்குப் போர்த்தி விடுகிறார் இயக்குநர் மதன்.காட்சிகளில் சில இடங்களில் சில சாயல்கள் தோன்றினாலும் குணச்சித்திர மோதல்களில் புதுச்சாயம் ஏற்றியுள்ளார்.

நாயகன் சத்யா அசட்டுத்தனமாக, தவறாக முடிவெடுக்கும் பாத்திரம் என்றால் நாயகியோ நிதானமாக எதையும் ஆழமாகப் பார்க்கும் குணச்சித்திரம்.இப்படிப்பட்ட இருவரிடையே நிலவும் உணர்வு முரண்களில் மோதல்களில் அந்தந்த நேரத்து நியாயத்தைப் பிரதிபலிக்கும் எதார்த்தம் வெளிப்பட்டுள்ளது.மனிதன் எந்திரம் கிடையாது. தருணங்களின் தாக்கங்களுக்குக் கட்டுப்பட்டவன். அப்படி தருணங்களினால் மாறும் மனதின் அசைவுகளை அழகாகக் காட்சிகள் ஆக்கி இருக்கிறார் இயக்குநர். இப்படிப் பாத்திர உணர்வுகளில் இயல்பான சித்திரத்தை வரைந்து உள்ளார்.அந்த வகையில் புதுமுக இயக்குநர் மதனைக் கைக் குலுக்கிப் பாராட்டலாம்.

காதலர்கள் எவ்வளவுதான் நம்பிக்கையுடன் இருந்தாலும் அவர்களிடத்தில் அகத்தில் உள்ளே இருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு அவர்களை எந்த அளவிற்கு இட்டுச் செல்லும் என்பதையும் காட்சிகள் வழியே காட்டியுள்ளார் இயக்குநர்.

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், அசட்டுத்தனமான நகைச்சுவை காட்சிகள் இல்லாமல்,குப்பை குப்பையாகச் சண்டை காட்சிகள் இல்லாமல் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நாயகன் புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் உள்ளது ஓர் உறுத்தல் என்றாலும் பிறகு அதற்கு ஒரு விடை கொடுத்து சமன் செய்துள்ளார் இயக்குநர்.

படத்தில் கதாபாத்திரங்கள் பேசுபவை செயற்கையாகவும் நீளமாகவும் இல்லாமல் இயல்பான வசனங்களாக இருக்கின்றன. அவற்றை அமைவிடப் பொருத்தம் கருதி ரசிக்க முடிகிறது.உதாரணத்திற்கு சத்யா மோனிஷாவிடம் பேசும் வசனம் ஒன்று :மோனிஷாவின் உணவு விருப்பத்தைக் கேட்கிறபோது,’என்னைப் பிடிக்கும்னு சொல்லுங்க, நான் செய்து தரத் தயாராக இருக்கேன்’ என்கிற வசனத்தில்,சற்று தயக்கத்துடன் ’என்னை பிடிக்கும் ’என்பதை ’என்ன பிடிக்கும்’ என்று சிறிய மாற்றத்திலேயே அதன் அர்த்தத்தை மாற வைத்து ரசிக்க வைக்கிறார்.இப்படி பல இடங்களில் சின்ன சின்ன வசனங்கள் உண்டு.

முதல் பாதிப்படம் மிதமான வேகத்துடன் சென்றாலும் இரண்டாம் பாதியில் அதை ஈடு கட்டும் வகையில் கதை வேகம் எடுக்கிறது .ஒரு முழு நிறைவான அனுபவத்தைத் தரும் வகையில் இரண்டாம் பாதி உணர்வுகளின் குவியலாக அமைந்து அடர்த்தியாக இருக்கிறது.

மொத்தத்தில் ’வித் லவ்’ அனைவருக்கும் பிடிக்கும் ஒரு காதல் கதை.