சமுத்திரக்கனி , மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், அனுசயா பரத்வாஜ் ,தன்ராஜ், ராகுல் ராமகிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளனர். சிவபிரசாத் யானாலா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு -விவேக் கலேபு, இசை -கரண் அர்ஜுன், வசனம் – வி.பிரபாகர். தயாரிப்பு -கிரண் கொரபதி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் .
விமானம் படத்தின் கதை எதைப் பற்றியது பார்ப்போமா?
ஒரு கால் இயங்க முடியாத மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனி. தனியார் கட்டணக்கழிப்பறை வைத்து பிழைப்பு நடத்துகிறார்.
அவரது ஒரே மகன் ராஜுவை, சிறுவயதிலேயே அம்மாவை இழந்ததால் செல்லமாக வளர்க்கிறார்.
ராஜுவுக்கு விமானம் என்றால் மிகவும் இஷ்டம். விமானத்தில் பறப்பது அவனுக்குக் கனவாக இருக்கிறது.
ஏர்போர்ட் அருகே போய் விமானம் பறப்பதை வேடிக்கை பார்ப்பது அவனுக்குப் பிடித்த பொழுது போக்கு. அவன் கனவெல்லாம் விமானம்தான்.
இந்நிலையில் அவனுக்கு உடல் ரீதியாக ஒரு பிரச்சினை வருகிறது.அவனது ஆயுள் காலம் தீர்மானிக்கப்படுகிறது.
அவனது ஆயுள் தீர்வதற்குள் தன் செல்ல மகனை விமானத்தில் பறக்க வைப்பதற்காக ஏழைத் தந்தை சமுத்திரகனி போராடுகிறார்.அவனது கனவு நிறைவேறியதா? முடிவு என்ன? என்பதுதான் விமானம் படத்தின் கதை.
ஓர் எளிமையான ஒருவரிக் கதையை எடுத்துக்கொண்டு ஒரு முழு நீளத் திரைப்படமாக உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிரசாத் யானாலா.அந்த முடிவுக்கும் அதற்கான திரைக்கதை அமைத்து முழுப் படமாக எடுத்ததற்கும், அந்தத் துணிவுக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள்.
விமானம் பற்றிச் சிறுவர்களின் கனவும் அவர்களது கற்பனையும் பற்றிய காட்சிகளைக் கொண்டு முதல் பாதி முடிகிறது. விமானம் பற்றிய அவர்களது நம்பிக்கைகளும் கற்பனைகளும் கனவுகளும் சிறுவர்கள் கோணத்தில் சொல்லப்படுகின்றன. அவை படம் பார்ப்பவர்களுக்குக் கலகலப்பூட்டும் சுவாரசியத் தோரணங்கள்.அவற்றைப் பார்க்கும்போது பார்வையாளர்கள் தங்களது வயதை மறந்து உள் நுழைந்து விடுவார்கள்.
விமானப் பயணம் சார்ந்த கதை என்றால் படத்திற்கு ஒரு போதாமை வரும் என்று நினைத்து இன்னொரு கதை பயணிக்கிறது. அந்த ஊரில் வசிக்கும் விலைமாது சார்ந்த கிளுகிளுப்பும் நகைச்சுவையும் கொண்ட கிளைக்கதை இன்னொரு பக்கம் விரிகிறது.அந்தப் பகுதி நகைச்சுவை நோக்கில் அமைக்கப்பட்டாலும் சிறுவனைப் பிரதானப்படுத்தும் கதையில் அது தேவையா என்ற கேள்வி எழுகிறது.அந்தக் காட்சிகளில் ஆபாசம் எல்லை தாண்டி விடாமல் இருந்தது சிறு ஆறுதல்.விமானப் பயணம் சார்ந்த கதையுடன் அதையும் நினைத்து அதற்கும் ஒரு கிளைமாக்ஸ் வைத்து நிறைவு செய்கிறார் இயக்குநர்.
உலகெங்கும் குழந்தைகளுக்கான படங்களுக்குத் தனி வணிக மதிப்பு உள்ளது .அதற்கான கதைகளைத் தேர்வு செய்து எடுக்க வேண்டும் .ஹாலிவுட்டில் அப்படித்தான் செய்கிறார்கள்.நம்மவர்கள் அப்படி முயற்சிப்பதில்லை. அதனால்தான் சிறுவர் சம்பந்தப்பட்ட படங்களில் கூட காதல் காட்சிகளையும் பெரியோர்களுக்கான காட்சிகளையும் சேர்த்துக் குழந்தைகளுக்கான படங்களை நிறம் மாற்றி விடுகிறார்கள். குழந்தைகள், அவர்கள் சம்பந்தப்பட்ட உலகம், விமானம், பயணம் என்பதை விரிவாக்கி திரைக்கதையை விரித்திருக்கலாம். அந்தக் காமெடி ட்ராக்கைத் தவிர்த்திருந்தால் விமானம் முழு நீள சிறுவர்கள் படமாக மாறி இருக்கும்.
இரண்டாவது பாதிக்குப் பின் சிறுவன் ராஜு விமானத்தில் பறப்பானா? அவனது அனுபவம் எப்படி இருக்கும்? என்பதைப் பார்க்க நமக்குள் ஆர்வம் பற்றிக்கொள்கிறது. அத்துடன் படத்தில் திடீர் திருப்பங்களும் சோகங்களும் நம்மைக் கவிந்து கொள்கின்றன.
படத்தில் வீரையா பாத்திரத்தில் ஒரு ஏழைத் தந்தையாக சமுத்திரக்கனி நடித்துள்ளார் அவர் அதிகம் பேசாமல் தன்னைத் தலை தூக்க விடாமல் அடக்கி வாசித்துள்ளது சிறப்பு.தன் மகனை விமானத்தில் பறக்க வைக்க அவர் படும் பாடு ஒரு பாசத்தந்தையின் போராட்டம்.
ஆசமுத்திரக்கனிக்கு ஆரம்பத்தில் சூம்பிப் போன காலைக் காண்பித்து ,கடைசி வரை அதைப் பராமரிக்காதது ஒரு சிறு உறுத்தல்.
ராஜுவாக நடித்திருக்கும் துறுதுறு சிறுவன் துருவன் நம் மனதில் இடம் பிடிக்கிறான்.அவன் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பது ஒரு அழகு.விலைமாது பாத்திரத்தில் வரும் கிளுகிளு நடிகையும் மனதில் பதிந்து விடுகிறார். படத்தில் வரும் கதை மாந்தர்கள் ஆட்டோ டிரைவர், அவரது மனைவி , அவர்களது மகன் ஐன்ஸ்டீன், செருப்பு தைப்பவர் என நடித்துள்ளவர்கள் அவரவர் பாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.மீரா ஜாஸ்மின் விமானப் பணிப்பெண்ணாகச் சில காட்சிகளில் வந்தாலும் பளிச்சென பதிகிறார்.
கதைக்குத் தேவையான நிகழ்விடங்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து படத்தில் நெருடல் இல்லாமல் காட்சிகளை அமைத்துள்ளார்கள்.கதையை மீறிச் செல்லாத ஒளிப்பதிவும் இசையும் கச்சிதம் .இது இரு மொழிப்பட முயற்சியாக இருந்தாலும் முடிந்த வரை தெலுங்கு வாடையைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.அதற்கு வசனகர்த்தா வி.பிரபாகரின் வசனங்கள் உதவியுள்ளன. இயல்பான வசனங்களால் அவர் தன் இருப்பைப் பதிக்கிறார்.
அப்பா பாசக்கதைகள் இது வரை சரியாகச்சொல்லப்படாத குறையை இப்படம் ஓரளவு ஈடு செய்து ’தங்கமீன்கள்’ வரிசையில் இடம் பிடிக்கிறது.இப்படத்தில் இடம்பெறும் அப்பா மகன் பற்றிய பாடல் அப்பா பாசத்தை விளக்கும் பாடல்களில் உச்ச வரிசையில் இடம் பெறும்.
மொத்தத்தில் ‘விமானம்’ திரைப்படம் சிறுவர்கள் உலகத்தில் பயணம் செய்த அனுபவம்.