விருதுகள் எல்லாம் குப்பைகள்: ராஜேஷ்குமார் அதிரடி பேச்சு!

வாசகர்களின் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்ற விருதுகள் எல்லாம் குப்பைகள் என்று  ராஜேஷ் குமார் அதிரடியாகப் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு :

தமிழில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வரும் ராஜேஷ் குமாரைப் பாராட்டி வாழ்த்த -வரும் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு சென்னை கவிக்கோ அரங்கத்தில் எழுத்தாளர் ராஜேஷ் குமாருக்கு பாராட்டு விழா…!

சக எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவிபாலா, இந்திரா செளந்தர்ராஜன், பாமா கோபாலன், வேதா கோபாலன் ஆகியோருடன் பத்திரிகை உலக ஜாம்பவான்களான ‘நக்கீரன்’ கோபால், மனுஷ்யபுத்திரன், ‘பாக்கெட் நாவல்’ அசோகன், பா.ராகவன் ஆகியோர் வருகை தருகிறார்கள்.

ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும், நானும் ராஜேஷ் குமாரின் வாசகனே என்று சொல்லி விழாவுக்கு வருகிறார் வெ.இறையன்பு.

வாசிக்கும் பழக்கத்தை தமிழர்கள் மனதில் விதைத்த; விதைக்கும் இத்தனை ஜாம்பவான்களையும் ஒரே நாளில்… ஒரே மேடையில் சந்திப்பது அபூர்வம்.

அந்த குறிஞ்சி மலர் ராஜேஷ் குமாரின் பாராட்டு விழாவில் பூக்கப் போகிறது.

ஆர்வமும் விருப்பமும் நேரமும் இருக்கும் அனைத்து வாசகர்களையும், எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்… என்று கே. என். சிவராமன் அமைப்பாளராக அழைப்பு விடுத்தார்.மீடியா பார்ட்னராக ஸ்ருதி டிவியை சேர்த்துக் கொண்டார்.

விழாவுக்கு வருகை தரும் ஒவ்வொருவருக்கும் ‘ராஜேஷ்குமார் சிறந்த சிறுகதைகள்’ நூல் பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பு வேறு.

அந்த நாளும் வந்தது. விழாவன்று கவிக்கோ அரங்கு நிரம்பி வழிந்தது. ஒரே ஒரு தனி மனிதருக்காகக்கூடிய கூட்டம்.

ராஜேஷ் குமாரின் தீவிர வாசகர்களும், பத்திரிகையாளர்களுமான கே.என். சிவராமன், யுவகிருஷ்ணா இணைந்து எடுத்த பாராட்டு விழா இது.

விழாவை ஏற்பாடு செய்தது ஏனென்ற அந்த ரகசியத்தை, சிவராமனே விழாவில் பகிர்ந்து கொண்டபோது  கண்கலங்காதவர்கள் இருக்க முடியாது.

-ஒரு வரியில் சொல்வதானால்… வாழ்க்கையில் சோர்ந்து போன நேரத்தில் தன்னம்பிக்கை ஏற்பட உதவி உயிர்த்தண்ணீர் ஊற்றியது ராஜேஷ்குமார் அண்ணாவின் ‘எவரெஸ்ட் தொட்டுவிடும் உயரம்தான்’ என்ற ஒற்றை நூல். அதன் பிறகும் சோர்ந்து போகும்போதெல்லாம் கைகொடுப்பது அதே நூல்தான். அதனாலேயே இன்றைக்கு இவர்களுக்கு மிக நிறைவான வாழ்க்கை அமைந்திருக்கிறது.
“உண்மையைச் சொல்லப்போனால் அவர் எங்களுக்கு உயிர் கொடுத்த தந்தைக்கு நிகரானவர்.. நாங்கள் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?” என்றார் சிவராமன் ,கண்களில் மின்னும் நன்றியுடன்.

 

கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவருமே மேம்போக்காகவோ அலட்சியமாகவோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அனைவரும் இதயத்தின் ஆழத்திலிருந்து தங்களின் நெகிழ்வை… மகிழ்வை வெளிப்படுத்தினார்கள்..வெ.இறையன்பு  மட்டும் தவிர்க்கவியலாத காரணத்தால் வர முடியவில்லை. 

‘ஒரு நல்ல எழுத்தாளராக மட்டுமின்றி ஒரு நல்ல மனிதராகவும் இருக்கிறார்’ என்று இவர் நல்ல மனிதர் என்பதற்கான சாட்சியாகப் பலர் பல சம்பவங்களைப் பகிர்ந்தது மகிழ்ச்சி.

ராஜேஷ்குமார் பேசும் போது, நெகிழ்ச்சியில் பேசமுடியாமல்   தடுமாறினார்.

 ” பேசியவர்களின் பேச்சைக் கேட்டபின் எதைச்சொல்ல ?எதை விட ? என்ன பேசுவது என்று எனக்கே தெரியவில்லை.

நானும் சிவராமனும் இதுவரை நேரில் பார்த்துக் கொண்டதில்லை. இன்றுதான் முதல் முறையாக சந்திக்கிறோம். என்னுடைய எழுத்துதான் தனக்கு உத்வேகம் தந்து வாழ்க்கையை வாழ வைத்தது என்று அவர் கூறியுள்ளார். விருதுகளே தேவையில்லை நேரில் பார்க்காத ஒருவரை ஆதர்ஷ நாயகராக எடுத்துக் கொண்டு வாழ்ந்து வரும் இவரைப் போன்ற வாசகர்கள்தான் எனக்கு விருது. மற்றவையெல்லாம் என்னைப் பொறுத்தவரை குப்பைதான். ஒரு வாசகர் போதும் எனக்கு இதுபோன்ற வாசகர்கள் போதும்.. தொடர்ந்து எழுத அது போதும். நான் எழுதிய கதைகள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரி இருக்கும். இத்தனை கதைகளையும் நானா எழுதினேன் என்று கூட எனக்கு மலைப்பு ஏற்படும். இந்த சாதனையைச் செய்ய வாசகர்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும்தான் காரணம். அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை ”என்றார் ராஜேஷ்குமார்.

 ராஜேஷ் குமாரின் வாசகர்களால் நடந்த இந்த விழாவில் ராஜேஷ்குமாருக்கும், அவரது மனைவி தனலட்சுமி ராஜேஷ் குமாருக்கும் மலர்க்கிரீடம் ,மாலைகள் அணிவித்து கெளரவம் செய்யப்பட்டது. 

ஈகோ.. பகை .. புகை.. எதுவுமே இல்லாத ஒரு விழா.. ! நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவர் வேதாகோபாலன்.

ராஜேஷ் குமார் தன் விழா ஏற்பாடு செய்த சிவராமன்+ யுவகிருஷ்ணாவை முதல் முதலாய்ச் சந்தித்ததே  இந்த விழாவில்தான்  என்பதே  நம்பமுடியாத ஆச்சர்ய உண்மை!