இன்று நம் நாட்டில் உளவுத் துறை வளர்ந்திருக்கிற அளவுக்கு உழவுத் துறை வளரவில்லை. கணினி பற்றி ஆர்வம் காட்டும் அளவுக்கு புதிய தலைமுறையினர் கழனி பற்றிக் கண்டு கொள்வதில்லை.
எதிர்காலத் தலைமுறையினர் விவசாயம் பற்றி விழிப்புணர்வு பெற வேண்டும் என்கிற நோக்கில் விவசாயம் காக்க சென்னையில் ஒரு மராத்தான் ஓட்டம் நடக்கவிருக்கிறது. 7.01.2018 அதாவது வருகிற ஜனவரி 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த மாபெரும் மராத்தான் ஓட்டம் , நடைபெறவுள்ளது.
பெசன்ட் நகர் கடற்கரையில் காலை 5 மணிக்குத் தொடங்கும் இந்த ஓட்டம், 5 கி.மீ. மற்றும் 10. கி.மீ. என இரு பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
‘பரிவு சமூக நல அறக்கட்டளை’ இதற்கான முன்னெடுப்பைச் செய்திருக்கிறது .
இது பற்றி இந்த மராத்தான் ஓட்டம் நிகழ்வை முன்னின்று ஒருங்கிணைப்பு செய்து நடத்தும் பரிவு சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் எஸ். சக்திவேல் கூறும்போது ,
” கடந்த 20O9-ல் பரிவு சமூக நல அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன் சார்பில் 2012-ல் ‘பரிவு ‘ என்கிற மாத இதழ் தொடங்கினோம். அது வளர்ந்து 2014-ல் மாதமிருமுறை இதழாக மாறி வெளியாகிக் கொண்டிருக்கிறது.
‘பரிவு ‘ பல இளைஞர்களை ஊக்கப்படுத்திடும் வகையில் அவர்களின் படைப்புகளை வெளியிட்டது.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை செலுத்தி அவர்கள் பற்றிய செய்திகள் ,படைப்புகள் , அவர்கள் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகள் என்று தன் சேவையை விரிவுபடுத்தி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று நகரமயமாக்கல் , உலகமயமாக்கல் என்கிற பெயரில் விவசாயம் அழிந்து வருகிறது.
விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.
விவசாய நிலத்தை விற்று பொறியியல் படித்து வெளிநாடுகளுக்கு அடிமை வேலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புகிற அறியாமை தொடர்கிறது .
விவசாயம் முக்கியமான தொழில் என்கிற விழிப்புணர்வோ பொறுப்புணர்வோ இன்று இல்லாத நிலை .இதற்குக் காரணம், விவசாயம் லாபமற்ற தொழில் என்கிற கருத்து இருப்பதுதான்.
நாம் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்வதே இப்படி ஓர் எண்ணம் உருவாகக் காரணம் எனலாம்.
விவசாயத்துடன் தொழில் நுட்பம் சேரும் போது விவசாயம் வளரும்.
இம்முறையில் இஸ்ரேல் நாடு சாதனை புரிந்து வருகிறது.
உழவியலோடு அறிவியல் சேர்ந்தால் பல புரட்சிகரமான மாற்றங்கள் நிகழும். எதிர்கால இளைய தலைமுறையினரிடம்
இப்படிப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தான் இந்த விவசாயம் காப்போம் என்கிற மராத்தான் நடைபெறுகிறது. நின்று போன விவசாய ஆர்வம் எழுந்து வளம் பெற ஓடுவோம் ” என்கிறார்.
இந்த ஓட்டத்தில் 18 வயதானவர்கள் எவரும் பங்கேற்கலாம். வெல்பவர்களுக்குப் பரிசுக்கோப்பை உண்டு.பங்கு பெறுபவர்களுக்கு டி ஷர்ட், கையேடு, பங்கேற்புச் சான்றிதழ் அனைத்தும் வழங்கப் படும்.
இந்தப் பெருமை மிகு மராத்தானில் நீங்களும் பங்கேற்க நுழைவுக்கட்டணம் ரூ.300 செலுத்த வேண்டும். இந்த நிதி , பரிவு அறக்கட்டளையின் பல்வேறு சமூக நலப் பணிகளுக்கு உதவும்.
மேலதிக விவரங்களுக்கு தொலை பேசி எண்கள் :96551 22255, 99629 55555