
வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களம் இப்போது சூடு பிடித்துள்ளது. பரபரப்பான இத்தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கியுள்ள ‘தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’ சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் ஆய்வுக் கூடத்தின் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்நாள் தலைவர் கலைப்புலி எஸ். தாணு பேசும் போது,
” நான் இன்று இங்கே தொழிலில் நிற்கக் காரணம் கலைப்புலி ஜி.சேகரன்தான். இங்கே அசகாய சக்தியாக அவர் வந்திருக்கிறார். அவர் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி.
அன்று 5, மீரான் சாஹிப் தெருவிலிருந்து தொடங்கிய எங்களின் நட்பு பழமையானது. ஆழமானது. அப்போதெல்லாம்அவர் எவ்வளவோ கதைகள் கூறுவார் ‘பொல்லாத ஊரு’ என்றொரு கதை. இன்று எடுத்தாலும் ஓடும். விஷால் இதில் நடிக்கலாம் ஒரு வெற்றிப் படமாவது கிடைக்கும் .
விஷாலை வைத்து படமெடுத்த 12 தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்து விடட்டார்கள். 12 படங்கள் தோல்வி யடைந்துள்ளன.
உதாரணத்துக்கு ‘சமர்’ படம் எடுத்த தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடுவின் அனுபவத்தைக் கேளுங்கள் (தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு ஊடகங்கள் முன் பேசவிட்டார். ரமேஷ் நாயுடு பேசும் போது- ” நான் ‘சமர்’ படத்தின் தயாரிப்பளர் பேசுகிறேன். அன்று ‘சமர்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பாண்டிச் சேரியில் படமாகிக் கொண்டிருந்தது . நூற்றுக் கணக்கான துணை நடிகர்கள் இருக்கிறார்கள் .கனல் கண்ணன்தான் ஸ்டண்ட் மாஸ்டர்.
நான் மதிய உணவு இடைவேளையின் போது என் மனைவி, மகன் என்று குடும்பத்துடன்அங்கே போனேன். ஆனால் தயாரிப்பாளர் இங்கு வந்தால், இருக்கமாட்டேன் நடிக்க மாட்டேன் என்று விஷால் அங்கிருந்து கிளம்பி வெளியேறி விட்டார். அதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இத்தனைக்கும் அவருக்கு நான் சம்பளம் முழுதும் கொடுத்து விட்டேன். கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளரின் நிலைமையைப் பாருங்கள்.
நான் படப்பிடிப்புக்கு வரக்கூடாதாம். அந்த ஒரு படத்தோடு தெலுங்கு சினிமாவுக்குப் போய் விட்டேன். எனக்கு நேர்ந்த அவமானம் வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது.” என்றார் குமுறலுடன்)
பிறகு தாணு தொடர்ந்து பேசும் போது,
”பார்த்தீர்களா ஒரு தயாரிப்பாளரின் நிலைமையை?
விஷால் இது என்ன கேலிக் கூத்து? அப்படி எதற்கு உனக்கு இந்த பதவி வெறி..? ஏன் இந்த நாற்காலி வெறி..?
தேர்தலில் இன்னொரு அணியில் நிற்கும் கேயார் 1. 30 கோடி சங்கப் பணத்தை வைத்துக் கொண்டு செலவு செய்தவர். அந்தப் பணத்தைத் தராமல் இருந்தவர். போராடித்தான் வாங்கினோம். இது அவர் கூட இருக்கும் எஸ்.ஏ.சிக்கும் தெரியும்.
விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்துக்கு 4 கோடி என்பது முதல் பிரதி பட்ஜெட்டாம். படம் 21 கோடி ரூபாய் வியாபாரமாம். 17 கோடி லாபமாம். இதை வைத்து யாருக்கு உதவப் போகிறாய் விஷால் ?
தயாரிப்பாளர் என்றால் உனக்குக் கிள்ளுக்கீரையா?
தயாரிப்பாளர்களை நாடக நடிகர்கள் என்று நினைத்தாயா? நாசர் நல்லவர். அவர் புனித ஸ்தலம் போன்றவர் .குறை சொல்ல இடமில்லாதவர்.
உன்னுடன் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்.
விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. போட்டோ ஆதாரத்துடன் 1 ஆம் தேதி வெளியிடுவேன். ராதாகிருஷ்ணன் தயாரிப்பாளர்களின் நலம் காப்பவர். சிறுபடத் தயாரிப்பாளர்ளுக்காகப் போராடுபவர் .அவர் அணி வெற்றி பெறும். அதற்காக நாங்கள் துணை நிற்போம்.” என்றார்.
முன்னதாக இன்னொரு அணியாகப் போட்டியிட்ட கலைப்புலி ஜி சேகரன் மற்றும் ஆதரவாளர்கள் திடீர் திருப்பமாகப் போட்டியிலிருந்து விலகி முன்னேற்ற அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.. இது இந்த அணிக்குத் திருப்புமுனையான பலத்தைச் சேர்த்துள்ளது . இந்த அணியின் இணைப்பு விழாவாக இச்சந்திப்பு நடைபெற்றது எனலாம்.
நிகழ்ச்சியில் இத்தேர்தலில்போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.