ஒரு சாமானியனின் சீற்றம் சொல்லும் கதையே வீரமே வாகை சூடும்.
அப்பா, அம்மா, தங்கை என்று அளவான குடும்பத்தோடு சாதாரண மனிதராக வலம் வரும் விஷால், காவல்துறையில் பணியாற்றும் தனது தந்தையைப் போலவே, எஸ்.ஐ – க்கான தேர்வெழுதிவிட்டுப் காவல்துறை வேலையில் சேருவதற்கான முயற்சியில் இருக்கிறார். இதற்கிடையே அவரது தங்கை கொலை செய்யப்பட, கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவர்களை எப்படிக் கண்டுபிடிக்கிறார்?மேலும் பல சமூக விரோதிகளை எப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்? என்பதே ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் கதை.
வில்லன்களின் அறிமுகத்துடன் இருள் கவ்விய அந்த ஆரம்பக்காட்சியே பரபரப்பு ஏற்றுகிறது.குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தும் ’பெரிய இடத்துப் பசங்க’ளை பத்திரமாக தப்பவைத்துவிட்டு வேறு ஒருவனை ஆஜர்படுத்துவது, ’எதுக்காக அடிக்கிறீங்க?’ என்ற கேள்விக்கு விஷாலின் அப்பாவும் போலீஸுமான மாரிமுத்து “எதுக்குன்னு தெரியல. மேலதிகாரி அடிக்கச்சொன்னார். அடிக்கிறேன்” என்று அப்பாவியாகப் பதிலளிப்பது போன்ற காட்சிகள் காவல்நிலையங்களின் அதிகார துஷ்பிரயோகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படம்பிடித்து காண்பிக்க ஆரம்பிக்கிறது.
வழக்கமான தனது ஆக்ஷன் படங்களுக்கே உரிய துடிப்புடன் சண்டைக்காட்சிகளில் பட்டையை கிளப்பும் விஷால், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை நடிப்பில் கச்சிதமாக காட்டியிருக்கிறார்.
காதல் காட்சிகளில் அடக்கி வாசித்தாலும், மக்களுக்கு பாடம் எடுக்கிறேன் என்ற பெயரில் மேடை பேச்சை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் நாயகியாக நடித்திருக்கும் டிம்பிள் ஹயாதியிடம் நாயகிக்கான தோற்றம் சற்று குறைவாக இருந்தாலும், நடிப்பில் அதை ஈடுகட்டி விடுகிறார். விஷாலின் தந்தையாக நடித்திருக்கும் மாரிமுத்து இயல்பாக நடித்திருக்கிறார்.அண்மைக்காலமாக தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.விஷாலின் அம்மாவாக நடித்திருக்கும் துளசி அளவான நடிப்பில் கவர்கிறார். தங்கையாக நடித்திருக்கும் ரவீனா பொருத்தமான தேர்வாக இருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள், முக்கிய வில்லனாக நடித்திருக்கும் பாபுராஜ் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் சில சிரிக்க வைக்கிறது. பல எரிச்சல் ரகம். சில காட்சிகளில் வரும் தீப்தி, காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் கவிதாபாரதி, குமரவேல் என அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
”ஒரு குற்றம் எங்கிருந்து உருவாகுது தெரியுமா ? தன்னைக் காப்பாத்த ஒருத்தன் இருக்கான்னு நினைக்கும்போதுதான்’, ’வன்முறையை சகிச்சுக்கோன்னு சொல்ற அஹிம்சைவாதம்தான் இருக்கிறதுலே மிகப்பெரிய வன்முறை’, ‘எலிய துரத்துற பாம்பு ஆபத்தானதா? பாம்பு துரத்துற எலி ஆபத்தானதா?’, ’கொசு, ஆட்டுக்குட்டி, நாய், நரின்னு எல்லாத்தையும் இவனுங்க கொன்னுடலாம். ஆனா, சிங்கத்தை இவனுங்களால கொல்ல முடியாது’ இப்படி படம் முழுக்க அதிரடி சண்டைக்காட்சிகளையே ஓவர் டேக் செய்கின்றன அதிரடி வசனங்களும்.
தலைப்புக்கேற்றது போல படத்தில் வெற்றி வாகை சூடுகிறவர் ஸ்டண்ட் மாஸ்டர்தான்.இயல்பாக காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் கவின்ராஜின் பணி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
சாதாரண ஆக்ஷன் கதையை திரைக்கதை மூலம் வித்தியாசப்படுத்தி காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் து.ப.சரவணன். அதற்காக சில கிளைக்கதைகளை ஒன்று சேர்த்து எதிர்ப்பார்ப்புடன் கதையை நகர்த்திச் சென்றவர், காட்சி அமைப்புகளில் சற்று கவனம் செலுத்தி, படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் ஆக்ஷன் பட ரசிகர்களை படம் திருப்திப்படுத்தியிருக்கும்.