‘வீர தீர சூரன்’ திரைப்பட விமர்சனம்

விக்ரம், எஸ் .ஜே . சூர்யா,துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சர மூடு,மாருதி பிரகாஷ்ராஜ்,ரமேஷ் இந்திரா, பாலாஜி எஸ் யு, ஸ்ரீஜாரவி, மாலா பார்வதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

S .U .அருண்குமார் எழுதி இயக்கி உள்ளார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பிரசன்னா ஜிகே படத் தொகுப்பு செய்துள்ளார். கலை சி.எஸ். பாலச்சந்தர்,சண்டைப் பயிற்சி – பீனிக்ஸ் பிரபு.ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு, மும்தாஸ் எம் தயாரித்துள்ளனர்.வெளியீடு, 5 ஸ்டார் செந்தில்.

சியான் விக்ரமின் 62வது படம் , அண்மையில் வெளியாகி பரவலாகப் பேசப்பட்டு வெற்றி பெற்ற’ சித்தா’ படத்தை இயக்கிய இயக்குநர் அருண்குமார் இயக்கிய படம், ஹெச் ஆர் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பு என்று பல வகையிலும் இந்த ‘வீர தீர சூரன்’ படத்திற்கு படம் வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பு அலை அடிக்கத் தொடங்கியிருந்தது.

வசதியும் கவுரவமும் செல்வாக்கும் கொண்ட ஆனால் ஏதோ குற்ற செயல்கள் செய்து பணமீட்டும் ஒருவர் என்று யோசிக்க கூடிய அந்தப் பெரியவர் வீட்டில் அவரது மகளின் கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன.அப்போது அங்கே வருகிற ஒரு பெண் தன் கணவனைக் காணவில்லை என்றும் அதற்கு அவர்கள் தான் காரணம் என்றும் கண்ணீர் விட்டுச் சாபம் விடுகிறாள்.காவல் நிலையம் சென்று முறையிடுகிறாள். இதைக் கவனித்த எஸ் பி யான எஸ் ஜே சூர்யா,இந்தப் புகாரை வைத்து ஏற்கெனவே உள்ள பழைய பகையை எண்ணி பெரியவரையும் அவர் மகனையும் பழிவாங்கத் துடிக்கிறார்.அவர்களை என்கவுண்டர் செய்யத் திட்டமிட திட்டமிடுகிறார்.இதை அறிந்து கொண்ட பெரியவரும் அவர் மகனும் எஸ்பியை தீர்த்தக்கட்ட காளி என்கிற விக்ரமின் உதவியை நாடுகிறார்கள்.ஒரு காலத்தில் அடிதடி வேலைகளில் புகழ்பெற்ற விக்ரம் அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு மளிகைக் கடை நடத்தி துஷாரா விஜயனுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். அவரிடம் கெஞ்சி இந்த குற்றச் செயலை செய்யச் சம்மதிக்க வைத்து விடுகிறார் பெரியவர். இதை துஷாரா எதிர்க்கிறார். இருந்தாலும் விக்ரமும் களத்தில் இறங்கி எஸ்பி வரும் வழியில் பாம் வைத்து அவரைத் தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்கிறார். காலச் சூழ் நிலை மாறுவதால் ஒவ்வொருவரின் திட்டங்களும் பிசகுகின்றன.திசை மாற்றங்கள் ஏற்படுகின்றன.சந்தர்ப்ப சூறாவளியில்,ஒரு கட்டத்தில் எஸ் ஜே சூர்யா, விக்ரம், பெரியவர் என்று ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட வல்லூறாக சுழன்று சுழன்று வட்டமடிக்கிறார்கள். கதையில் யாரையும் யாரும் கொல்வார்கள் என்று பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. முடிவு என்ன என்பதுதான் ‘வீரதீர சூரன்’ படத்தின் கதை.

இந்தப் படத்தில் காளி என்கிற கதாபாத்திரத்தில் விக்ரமும் கலைவாணியாக துஷாரா விஜயனும் எஸ் பி அருணகிரியாக எஸ் ஜே சூர்யாவும் ,பெரியவராக மாருதி பிரகாஷ் ராஜும் அவரது மகன் கண்ணனாக சுராஜ் வெஞ்சர மூடும் வெங்கட் ஆக பாலாஜியும் என பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.தமிழ்த் திரை உலகில் காளி கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்றது. ஏற்று நடித்த ஒவ்வொரு நடிகரும் அதனால் புகழ்பெற்றுள்ளனர்,
அப்படித்தான் ‘முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினி ஏற்ற காளி போல் இதில் விக்ரம் ஏற்று உள்ள காளி கதாபாத்திரம் உள்ளது.
பிடிவாதம், முரட்டுத்தனம், சூரத்தனம் என்று அந்தப் பாத்திரத்தில் அந்தக் காளியாகவே அசப்பில் பொருந்துகிறார். புஜபலம்,ஹேர் ஸ்டைல், முக பாவனைகள் என்று அச்சு அசலான காளியாக மாறி நடித்துள்ளார். தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு சாதாரணனாகத் தோன்றுவதிலும் துஷாரா விஜயனுடன் ரொமான்ஸ் செய்வதிலும் சண்டைக்காட்சிகளில் துவம்சம் செய்வதிலும் அவர் பாத்திர நியாயம் செய்துள்ளார்.

பக்கத்து வீட்டு பெண்ணைப் போல சுமாரான நிறம் தோற்றம் என்றிருந்தாலும் துஷாரா விஜயன் ,இந்தப் படத்தில் இந்த பாத்திரத்திற்கு பொருந்துகிறார்.பல்வேறு பாவனைகள் காட்ட வாய்ப்புள்ள நடிப்புத் தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டு பளிச்சிடுகிறார்.

படத்தில் எஸ் பி அருணகிரியாக வருகிறார் எஸ்.ஜே.சூர்யா .அவர் தனது கேலி கிண்டல் நக்கல் கலந்த வில்லத்தனத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.வீர தீர சூரனை பெரிதாகக் காட்டுவதற்காக அவரது பாத்திரத்தை இறுதியில் பலவீனப்படுத்தியுள்ளது ஒரு நெருடல்.
பெரியவராக நடித்திருக்கும் மாருதி பிரகாஷ்ராஜும் சரி அவரது மகன் கண்ணனாக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சர மூடும் சரி நடிப்பில் இயல்பு காட்டியுள்ளார்கள்.
ஒரு பரபரப்பான ஆக்சன் படமாக முதல் பாதி வரை மீட்டர் பிசகாமல் அளவான மீட்டரில் செல்கிறது படம்.இரண்டாம் பாதியில் படம் முடியும் தருவாயில் சில சமரசங்களுக்கு உள்ளாகி உள்ளார் இயக்குநர் .அதனால் அதிவேகத்தில் தடம் புரண்டு இயல்பு கோட்டைக் தாண்டி விடுகிறார்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிகை ஒளி இல்லாமலும் இயல்பை விட்டு விலகாமலும் அமைந்து உள்ளது.பெரும்பாலும் வெளிப்புறங்களில் காட்சிகள் வருவதால் அவரது உழைப்பை உணர முடிகிறது.

ஜிவி பிரகாஷின் பின்னணியும் சரி பாடல்களும் சரி படத்திற்குப் பெரும்பலமாக உள்ளன.சினிமா இலக்கணங்களை சூத்திரங்களை மீறி சண்டைக் காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைத்துள்ள விதம் பாராட்டுக்குரியது.படத்தின் பரபரப்பை, வேகத்தை கியர் மாற்றாமல் டாப் கியரிலேயே பயணிக்க வைக்கிறது பிரசன்னாவின் எடிட்டிங்.
மொத்தத்தில் இந்த வீரதீர சூரன் வழக்கமான ஆக்சன் பட நாயகர்களுக்கு கொடுக்கும் செயற்கை பூச்சுகள் இல்லாமல் இயல்பான ஒரு பாத்திரத்தை சித்தரிக்கும் படமாக அமைந்துள்ளது.சில இடங்களில் எழும் கேள்விகளை மறந்து பார்வையாளர்களைப் படத்தின் ஓட்டத்தோடு விரைய வைக்கிறது திரைக்கதை. ‘வீரதீர சூரன்’பாகம் 2 என்ற பெயரில் தான் படம் வந்துள்ளது.இது இரண்டாவது பாகம் என்பதால் இதன் முதல் பாகத்தின் கதை வேறு மாதிரியாக இருக்கும் .நமக்கு ஆங்காங்கே எழும் கேள்விகளுக்கு முதல் பாகம் வந்தால் பதில் கிடைக்கும்.

எங்கும் தொய்வில்லாமல் செல்லும் திரைக்கதையாலும் காட்சி அமைப்பாலும் இந்த ‘வீரதீர சூரன்’பாகம் 2  படம் ஆக்சன் ரசிகர்களை அள்ளிக் கொள்ளும்.