பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சி கிராமத்தில் வாழும் வர்மன் மீது செய்யாத எட்டுக் கொலைகளைச் செய்ததாக பழி விழுகிறது.
சாட்சிகள் சாதகமாக இருக்க இன்னும் ஒரு வாரத்தில் தூக்கலிடப்பட இருக்கிறான். தூக்குக்கு முதல் நாள் அவனது இறுதி ஆசை என்ன என்று கேட்கும்போது தனது தாய் தனக்காக பாட வேண்டும். அவளது பாட்டை கேட்பதுதான் தனது இறுதி ஆசை என்கிறான்.
இதற்காக அவனது தாயை அழைத்து வர ஏற்பாடு செய்கிறார் ஜெயில் அதிகாரி.. தாய் வந்தாளா..? தூக்குத் தண்டனை நிறைவேறியதா என்பதுதான் கதைப்போக்கு.
அவன் எப்படி ஒரு தாயால் மீட்கப்படுகிறான் என்பதே எதிர்பார்ப்பு மையம் கொள்ளுமிடம்.
ஒரு பத்திரிகை வர்மன் பற்றிய சிறப்புச் செய்தியை வெளியிட முடிவு செய்து, தனது செய்தியாளரை வர்மனை பற்றி அறிந்து கொள்ள திருவளக்குறிச்சிக்கு அனுப்புகிறது.அங்கே வர்மனின் கதையைத் தெரிந்து கொள்கிறார் பத்திரிகையாளர். இப்படி பிளாஷ்பேக்கில் நடக்கும் கதை விரிகிறது.
பிறப்பிலேயே கண் பார்வையில்லாத விதவைத் தாயின் மகன் வர்மன். தனது அம்மாவுடன் அந்தக் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தவன்.. அந்த ஊர்த் தலைவர் பகையைத்தேடிக்கொள்கிறான்.
இதனால் பயந்து போன அவனது அம்மா அவனை காட்டுக்குள் அனுப்பி வைக்க அங்கே ஒரு சாமியாருடன் தனக்கான ஒரு உலகமாக எண்ணி வாழ்கிறான் வர்மன்.
அதே ஊரில் வசிக்கும் இளம் பெண்ணின் காதலுக்கும் ஆளாகிறான் .வர்மன் மீது செய்யாத கொலைகளைச் செய்ததாக பழி விழுகிறது. ஊரே கூடிப்பொய் சொல்கிறது. இந்நிலையில் முடிவை நோக்கிச் செல்கிறது கதை.
படத்தில் முதல்பாதியில் வையாபுரி, அண்ட் கோ செய்யும் காமெடி சரியான எரிச்சல் காட்சிகள்.
தூக்கு தண்டனை கைதி என்கிற பரபரப்பான மையத்தை வைத்துக் கொண்டு அதுபற்றி காட்சிகள் சிந்திக்காமல் காமெடி என்கிற பெயரில் டைம் பாஸ் செய்துள்ளது போர்.
தாய்ப்பாசம், தூக்கு, வீண் பழி என்கிற நல்ல முடிச்சுக்கான வாயுப்புகளை வைத்து உணர்ச்சிமயமான கதையாக கொடுத்திருக்கலாம் செலவுக்குப் பயந்து மலிவாக்கி சிதைத்து விட்டார்கள். கொலைகளுக்கும் காரணமான தீவிரவாதிகள் என்று காட்டப்படும் அந்த நால்வர் பற்றிய எந்தப் பின்னணியும் கூறப்பட வில்லையே ஏன்?
பட்ஜெட் படம் என்பதால் நடித்த எல்லாருமே பஞ்சத்தில் அடிப்பட்டவர்கள் போலவே இருக்கிறார்கள் பாவம். ஒரே ஆறுதல் நாயகி சமீரா மட்டும் கழுக் மொழுக்கென இருக்கிறார். ஒளி மயமான எதிர்காலம் அவருக்கு இருக்கிறது. தேர்ந்தெடுத்து நடித்தால் சுப்ரமணியபுரம் சுவாதி போல வருவார்.
வெளிப்புறப் படப்பிடிப்பில் காட்சிகளைச் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்கள்.
ஒரு சின்ன கிராமத்துக் கதை. அதனை தங்களால் முடிந்த அளவுக்கு எளிமையாகத் தயாரித்து வழங்கியிருக்கிறார்கள் இந்த படக் குழுவினர்.விலை மலிவான ஜனதா சாப்பாடு போட்டுள்ளார்கள்.