ஹரிஷ் ஓரி அர்த்தநாரி, அபிராமி போஸ், உதிரி விஜயகுமார், ரெஜின், மெலடி டார்கஸ், சரண்யா நடித்துள்ளனர்.சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு. – ராம்தேவ், இசை – பரத் ஆசிகவன், தயாரிப்பு -ஹரிஷ் ஓரி அர்த்தநாரி .
இந்த ‘வெள்ளகுதிர’ திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி கதை என்ன?
நாயகன் கதிர்,தன் மனைவி, சுமார் பத்து வயது மகன் என மூன்று பேரும் அந்த மலைக் கிராமம் வருகிறார்கள்.வாழ்க்கையில் அடிபட்டு ஏமாற்றங்களுடனும் கசப்புகளுடனும் மலையேறி அந்த மலைக் கிராமத்துக்கு வந்து சேர்கிறார்கள் .அவர்களிடம் தங்களை யாரும் தேடி வந்து விடுவார்களோ என்ற ஒரு பயம் உள்ளது.
ஆனால் கதிரின் பூர்வீகக் கிராமம் போய் பார்த்தால் யாரும் தெரிந்தவர்கள் இல்லை. தேடிப் பார்த்தால் போன தலைமுறையினருக்கு மட்டுமே தெரிகிறது.
எப்படியாவது அந்த ஊரில் தஞ்சம் அடைந்து பிழைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அவனது மனைவி கயல் படித்தவள்.
அங்குள்ள அப்பாவி மக்களை அந்த ஊர் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஏமாற்றி நிலத்தை அபகரித்து இருப்பதும் அந்த ஊரினை முன்னேற விடாமல் இருப்பதும் தெரிகிறது. அவள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறாள்.
விஷேசங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படும், அங்கு மட்டுமே கிடைக்கும் ஒருவித சாராயம் போன்ற போதைப் பொருளைக் காய்ச்சி அந்த ஊர் பெரியவரின் மகனுடன் சேர்ந்து கொண்டு வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான்
கதிர். அதைக் கீழே உள்ள மலையடிவார ஊருக்குச் சென்று கதிர் வியாபாரம் செய்கிறான் .மனைவி கயலின் மீதுள்ள கோபத்தால் பஞ்சாயத்து தலைவர் கதிரைத் தாக்குகிறார்.கதிர் தன் பூர்வ இடத்தை அடையாளம் கண்டுகொள்கிறான்.அவன் இறக்கும் தருவாயில் தன் ஊருக்கு ஒரு உதவியைச் செய்து அமரத்துவம் அடைகிறான்.அவனது பூர்வீக சொத்து என்ன? வெள்ள குதிர என்றால் என்ன?எல்லாமும் பேசும் படம் தான் வெள்ளகுதிர.
படம் தொடங்கியதுமே மலைக் கிராமத்துக்கு ஏறிச் செல்லும் பாதையும் வந்த மேடு பள்ளங்களும் மரங்கள் அடர்ந்த பாதையில் என ஒரு காட்சி அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தினைத் தயாரித்திருக்கும் ஓரி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக கயல் பாத்திரத்தில் அபிராமி போஸ் வருகிறார்.முன்னாள் பஞ்சாயத்து தலைவராக உதிரி விஜயகுமார் வில்லத்தனம் காட்டுகிறார். மற்ற அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே நம் மனதில் பதிகின்றனர்.
சினிமாத்தனம் இல்லாத ஒரு யதார்த்த வாழ்வியல் படைப்பாக இந்த வெள்ள குதிர அமைந்து இருக்கிறது.
.கொல்லிமலை ஏற்காடு தொடர்ச்சியில் உள்ள மலைப்பகுதியில் படமாகி உள்ளது. ஒளிப்பதிவாளர் ராம் தேவ்,செயற்கை ஒளியின்றி காட்சிகளைத் தரமாகப் படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், தனது எளிமையான பின்னணி இசை மூலம் வியக்க வைக்கிறார்.
குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள், ஒரே ஒரு லொக்கேஷன் என படம் நகர்ந்தாலும், கதாபாத்திரங்கள் மனநிலை, அவர்களது நடிப்பு ஆகியவற்றின் மூலமாக படத்தை ரசிக்கக் கூடிய விதத்தில் எடுத்துள்ளார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் சரண்ராஜ் செந்தில்குமார், சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலைக் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் பேசியுள்ளார்.ஆனால் ஒரு திரைப்படத்திற்கான முழுமையான அடர்த்தி குறைவாக இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் ‘வெள்ளகுதிர’குறைந்த பட்ஜெட்டில் ஒரு கவன ஈர்ப்பு முயற்சி.


