சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன்,ஃபஹத் ஃபாசில்,ராணா டகுபதி,மஞ்சு வாரியர்,கிஷோர்,ரித்திகா சிங்,துஷாரா விஜயன்,ஜி எம் சுந்தர்,அபிராமி,ரோகிணி,ராவ் ரமேஷ்,ரமேஷ் திலக்,ரக்ஷன் நடித்துள்ளனர்.எழுத்து மற்றும் இயக்கம் : டி.ஜே. ஞானவேல்,இசை – : அனிருத் ரவிச்சந்தர்,ஒளிப்பதிவு இயக்குநர் : SR கதிர் ISC,சண்டைப் பயிற்சி இயக்குநர் : அன்பறிவ்,படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்.திரைக்கதை : பா. கிருத்திகா,கலை இயக்குநர் : சக்தீ வெங்கட்ராஜ் M.தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் : சுபாஸ்கரன்.
சமுதாய கருத்துள்ள படங்களை இயக்கும் இயக்குநர் வணிக மதிப்பில் உச்சத்தில் உள்ள ஒரு நடிகரை வைத்து இயக்கும் போது அவர் முன் இரண்டு சவால்கள் இருக்கும்.
உச்ச நட்சத்திர ரஜினியின் வணிக மதிப்பு கெட்டுவிடக்கூடாது.கருத்து என்று சொல்லிப் பிரச்சாரமாகி விடக்கூடாது.இந்த இரண்டுக்கு இரண்டையும் கலந்து, கவனத்தில் கொண்டு படம் இயக்குவது ஒரு இரட்டைக் குதிரை சவாரி போன்றது.ஆனால் அப்படிப்பட்ட சவாலை எதிர்கொண்டு இயக்குநர் டிஜே ஞானவேல் இந்த வேட்டையன் படத்தை இயக்கி உள்ளார்.அதில் வெற்றி பெற்றுள்ளாரா இல்லையா என்பதை பார்ப்போம்?
ரஜினியின் வேட்டையன் படத்தின் கதை என்ன?
கன்னியாகுமரி மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரி ரஜினி துணிச்சலாக என்கவுண்டர் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்.என்கவுண்டர் என்பது அவசரத்தில் எடுக்கப்படும் முடிவு. அதில் அப்பாவிகள் பாதிக்கப்படுவது உண்டு என்ற தலைப்பில் நின்று வாதிடும் மனித உரிமைக்காரர் அமிதாப் பச்சன், என்கவுண்டர் எதிராக நின்று செயல்படுவார்.
இந்த நிலையில், பெண் ஒருவர் கற்பழித்துக் கொடூர கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஒருவன் கைது செய்யப்படுகிறான்.அந்த இளைஞன் போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து விடுகிறான்.அவனைப் பிடித்து என்கவுண்டர் செய்வதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வருகிறார் ரஜினி.உண்மை நிலவரம் தெரியாமல் முன் முடிவோடு அந்த இளைஞனை என்கவுண்டர் செய்து விடுகிறார்.
அந்த என்கவுண்டரில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக புகார் செய்யப்படுகிறது. அமிதாப் பச்சன் தலைமையிலான விசாரணைக் குழு, அதன் பின்னணியை விசாரிக்கிறது.
அப்போது தான் பல உண்மைகள் தெரிய வருகின்றன.ரஜினிக்கு, தான் செய்தது என் கவுண்டர் அல்ல ஒரு கொலை என்று தெரிகிறது .அதுவரை தான் நம்பிக் கொண்டிருந்த என்கவுண்டர் மூலம் குற்றவாளிகளைத் தண்டிப்பது சரியான பாதை அல்ல, என்பதை உணர்கிறார் ரஜினி.அதன் பிறகு உண்மையின் பாதையில் பயணம் செய்யும் ரஜினி எடுக்கும் அதிரடித் தேடுதல் வேட்டையையும் அதன் விளைவுகளையும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வது தான் ‘வேட்டையன்’.
‘ஜெய்பீம்’ படம் மூலம், லாக் அப் மரணங்கள் பற்றிப் பேச வைத்த இயக்குநர் டி.ஜே.ஞானவேல், இதில், காவல்துறையால் நடத்தப்படும் பல என்கவுண்டர்கள் சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் எதிரானவை என்று கூறியுள்ளார்.இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்துக்கொண்டு உச்ச நட்சத்திரத்தை வைத்து வணிக ரீதியிலான விறுவிறுப்பான நேர்த்தியான படமாக உருவாக்கி உள்ளார்.
ரஜினி இப்படத்தில் அதியன் என்ற கதாபாத்திரத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முதல் பாதியில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து வேட்டையனாக அதிரடி காட்டுகிறார். மறுபாதியில் போலீஸ் வேட்டையனாக இருப்பதை விட மக்களின் பாதுகாவலனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து புதிய பாதையில் பயணித்து அவர் மேற்கொள்ளும் புலன் விசாரணைகள் பரபர, விறுவிறு ரகம்.அவரது பாத்திரத்தின் சித்தரிப்பு மிகைப் படுத்தல் இல்லாத ரகம். அதில் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்துள்ளார். “குறி வச்சா இரை விழணும்” என்ற பஞ்ச் வசனம் மூலம் திரையரங்கையே அதிர வைக்கிறார். தனது ரசிகர்களுடன் பிற திரை ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறார்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், தனது தோற்றத்தாலும் உடல் மொழியாலும் பளீர் வசனங்களினாலும் அப்பாத்திரத்திற்கு உயிரூட்டி உள்ளார்.
எல்லாவற்றையும் மீறி கவனம் பெறும் வகையில் பேட்டரி என்கிற பாத்திரத்தில் பகத் பாசில் வருகிறார்.முன்னாள் குற்றவாளியான அவர் போலீசுக்கு அனுசரணையாக இருந்து கொண்டு இன்பார்மராக மாறி உதவுகிறவர். அந்த வகையில் ரஜினிக்கு உதவுகிறார்.“மூளை இல்லனா போலீஸ் ஆகலாம், திருடனாக முடியாது” என்று போலீஸையே கலாய்ப்பவர் .
கல்வி வியாபாரியாக டீசண்ட் கார்ப்பரேட் வில்லனாக நடித்திருக்கும் ராணா டகுபதி .பேசவே வேண்டாம் அவரது தோற்றமே அந்தப் பாத்திரத்தை உணர்த்தி விடுகிறது.
ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் குறை இல்லாமல் நிறைவாகச் செய்துள்ளனர். அதன் மூலம் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கிஷோர், ஜி.எம்.சுந்தர், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், அபிராமி, ரோகிணி, ரக்ஷன் என்று படத்தில் வரும் மற்ற துணைப் பாத்திரங்களும் தேவைக்கேற்ப அளவோடு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அனிருத் இசையில் “மனசுலாயோ…” பாடல் மனதில் ஒட்டிக்கொள்ளும்.”வேட்டையன் தீம்” பாடல் மற்றும் ”ஹண்டர் வந்தார்” பாடல் ரஜினி ரசிகர்களுக்கான தீனி.பின்னணி இசை அனிருத்தின் பாதையில் இருந்து வித்தியாசப்பட்டு ஒலித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் தனது கேமரா மூலம் ரஜினிகாந்தை மாஸ் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் அமர்க்களமாக காண்பித்திருக்கிறார்.படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் திரைக்கதையை வேகமாகப் பயணிக்க வைக்கிறார்.
படத்தில் எளிமையான அதே வேளை கூர்மையான வசனங்கள் உள்ளன.துப்பாக்கியை விட மனசாட்சி முக்கியம்,தற்காப்பை விட மக்கள் பாதுகாப்பு முக்கியம்,சுடும் போது துப்பாக்கியின் ட்ரிக்கரை தொடக்கூடாது, இதயத்தை தொட வேண்டும் போன்றவை சாம்பிள்.
இயக்குநர் டி.ஜி.ஞானவேல் இதுவரை சொல்லப்படாத, சொல்ல வேண்டிய சமூக பிரச்சினையை ரஜினிகாந்த் என்ற மாஸ் நடிகருக்கு ஏற்ற வகையில் சொல்லியிருக்கிறார்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பான கிரைம் திரில்லர் அனுபவம்.அதில் எந்தக் குறையும் இல்லாமல் நிறைகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் உண்மையான குற்றவாளி யார்? என்று தெரிந்த பிறகு திரைக்கதை சற்று தடம்மாறிச்செல்வது போல் தோன்ற வைக்கிறது.
கல்வியை வியாபாரமாக்கும் திட்டம் மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள், பொருளாதார ரீதியிலான குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் போன்றவற்றைக் காட்சிகளாக்கி இன்னொரு அனுபவத்துக்கு நம்மை தயார் படுத்துகிறது.எனவேதான் ஒரே படத்தில் இரண்டு கதை போல் தோன்றுகிறது. ஆக, இறுதியில் ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
மொத்தத்தில், ‘வேட்டையன்’ ரஜினி ரசிகர்களைத் தாண்டி அனைவருக்குமான படமாக மாறியுள்ளது.