‘வேம்பு’ திரைப்பட விமர்சனம்

ஷீலா ராஜ்குமார், ஹரி கிருஷ்ணன், மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். வி ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு ஏ. குமரன், இசை மணிகண்டன் முரளி, எடிட்டிங் வெங்கட் ரமணன்,கலை கோபி கருணாநிதி. மஞ்சள் சினிமாஸ் தயாரித்துள்ளது. இப்படம் மே 23ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த வேம்பு வீட்டுக்குள் நிலவும் ஏழ்மையையும் வறுமையையும் சுமந்து கொண்டு பள்ளி செல்கிறாள். அவளுக்கு சிலம்பத்தில் ஆர்வம் .சிலம்பம் கற்றுக் கொள்கிறாள். அதில் தேசிய அளவில் போட்டியில் கலந்து கொண்டு அரசு வேலைக்குச் செல்வது என்பது அவளது கனவு, லட்சியம்.
இது வேண்டாத வேலை என்று உறவினர்கள் சில கூறினாலும் தந்தை ஆதரவாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகிறது. ஸ்டுடியோக்கடை வைத்திருக்கும் தன் அத்தை மகன் வெற்றியைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என, ஒரு பக்கம் மகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் கல்யாணத்தின் மூலம் தனது கனவுகள் உடைந்து விடுமோ என்று கலங்குகிறாள்.
திருமணம் ஆகிவிட்டால் வீடு, குழந்தை என்று பிழைப்பு அதிலேயே போய்விடும் என்று தோழிகள் பயமுறுத்துகிறார்கள்.வீட்டை விட்டு வெளியே ஓடிவிடலாம் என்று நினைக்கிறாள். தந்தையின் முகத்தை நினைத்து அந்த முடிவை மாற்றிக் கொள்கிறாள்.இக்குழப்பத்தின் நடுவே திருமணமும் ஆகிறது ஆனாலும் திருமணத்திற்குப்பின் தனது லட்சியம் தகர்ந்து விடுமோ என்று அவளுக்குள் ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது. ஆனால் இதனைப் புரிந்து கொண்ட கணவன் வெற்றி ”திருமணத்திற்குப் பின்பு நீ எப்போதும் போலவே இரு..உன் லட்சியத்தைக் கைவிடாதே ,நான் உனக்குத் துணையாக இருக்கிறேன் ” என்கிறான். அவளது மனநிலை மகிழ்ச்சியாக மாறுகிறது.

கணவன் மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே கோயிலுக்கு  செல்கிறார்கள்.இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பும் போது கற்கள் நிறைந்த சாலையில் வண்டி இடறிக் கீழே விழ இருவரும் நிலை தடுமாறி விழுகிறார்கள் இதில் கணவன் வெற்றிக்குப் பின் தலையில் பலத்த அடிபட்டு அவன் கண் பார்வை பறிபோய் விடுகிறது. இந்த நிலையில் வேம்பு சற்றே கலங்குகிறாள், என்றாலும் மீண்டும் சுதாரித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கணவனுக்குச் சிகிச்சை அளிக்கவும் தனது இலட்சியத்தை அடையவும் முயற்சி செய்கிறாள். அவள் தடைகளை வென்று தனது லட்சியத்தை அடைந்தாளா இல்லையா என்பதுதான் 121.39 நிமிடங்கள் கொண்ட இந்த வேம்பு படத்தின் மீதிக் கதை.

இந்த திரைப்படத்தின் பெயர் வேம்பு என்கிற போதே அந்த வேம்பு என்கிற பெண்ணைச் சுற்றித்தான் இந்தப்படக் கதை சுழலப்போகிறது என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.
வேம்புவாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார் .நடிகை ஷீலா சாதாரண கமர்சியல் நடிகை அல்ல. சற்றே அடர்த்தி உள்ள பாத்திரங்களில் தான் தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
அவர் அந்த வேம்பு பாத்திரத்திற்கு அச்சு அசலாகப் பொருந்துகிறார்.துடுக்குப் பேச்சு, துறுதுறுப்பு, சிலம்பத்தில் ஆர்வம், குடும்பத்தில் பாசம் என்று அந்த பாத்திரத்திற்கு மகிமை செய்துள்ளார்.
முறைப் பையனுடன் பழகும் போதும் காதலை வெளிப்படுத்தும் போதும் திருமணத்திற்கு பிறகு மகிழும்போதும் முழுமை பெறுகிறது  என்றால் பிரச்சனைகளை வென்று சமாளிக்கும் போது எழுந்து நிற்கிறது.மொத்தத்தில் அந்த வேம்பு வாகவே வாழ்ந்துள்ளார் ஷீலா.அவரது ஒவ்வொரு அசைவிலும் தெரிவது வேம்பு வேம்பு மட்டும்தான்.

ஹரி கிருஷ்ணன் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் வெற்றி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இறப்பு வீட்டில் போட்டோ எடுக்கிற கலாட்டாவிலிருந்து தொடங்குகிறது அவரது பாத்திரத்தின் பயணம்.வேம்புவை விரும்புவது அவளது லட்சத்திற்கு துணை நிற்பது என அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார் .கண் பார்வை பறிபோனபிறகு வெறித்த பார்வையுடன் அவர் தடுமாறும் இடங்கள் இயல்பான நடிப்பின் வெளிப்பாடுகள்.நல்லது செய்யும் எம்எல்ஏவாக மாரிமுத்து வருகிறார்.

வேம்பு -வெற்றி தவிர துணைப்பாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் பெயர் தெரியாமல் இருந்தால் கூட மனதில் தங்குகிறார்கள்.வேம்புவின் அப்பா, அம்மா, பாட்டி ,வெற்றியின் அம்மா, செங்கல் சூளை நடத்தும் முதலாளி, வெற்றியின்  உதவியாளனாக டைகர் பாத்திரத்தில் வரும் சிறுவன்,ஆடு திருடும் திருடன் என படத்தில் வரும் அனைவரும் அந்தப் பகுதி மண்ணின் மைந்தர்களாகவே தோன்றுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் குமரனின் கை வண்ணத்தில் படத்தின் ஒளிப்பதிவு கதை சொல்லும் அந்த வறுமைச் சூழலை கண்முன் காட்டுகிறது. வறுமையும் வெம்மையும் சேர்ந்த பின்புலமாக இருந்தாலும் பாடல் காட்சிகளில் அது கவிதையாக இழைந்திருக்கிறது .
மணிகண்டன் முரளியின் இசையில் படத்தின் பாடல்களில் மண்ணின் ஈரமும் மனிதர்களின் நேசமும் வெளிப்பட்டுள்ளன.
குறிப்பாக ‘ஜனக்கு ஜிக்கா’ பாடலில் மறந்து போன கிராமத்து விளையாட்டுகள் அனைத்தும் காட்டப்பட்டுள்ளது என்றால் ‘மஞ்சனத்தி’ பாடலில் பாத்திரங்களில் இழையோடும் சோகம் வெளிப்படுகிறது.

ஆங்காங்கே வசனங்களில் ஊடாக வந்து விழும் கிராமத்துச் சொலவடைகள் எல்லாருக்கும் புரியாவிட்டாலும் எதார்த்தம் காட்டுகின்றன.

இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.
நாயகன் நாயகிக்கு விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

பெண்ணுக்குக் கல்வி முக்கியம் ஒரு தற்காப்புக் கலையும் அவசியம் என்பதை இந்தக் கதையின் ஊடாக அந்த வேம்பு கதாபாத்திரத்தின் மூலமாக உலகிற்குக் கூறியுள்ளார் இயக்குநர் ஜஸ்டின் பிரபு.படத்தின் உருவாக்கத்தில் சில காட்சிகளில் தெரியும் நாடகத்தனம் சிறு பலவீனம் எனலாம்.

படம் முடிந்ததும் சிலம்பத்தில் சாதனை படைத்த பெண்கள் காட்டப்படுகிறார்கள்.

இறுதியில் பெண்கள் முன்னேற்றம் ,கல்வி, வேலை வாய்ப்பு பற்றிப் பெரியார் பேசுவதுடன் படம் முடிகிறது.

மொத்தத்தில் இந்த வேம்பு பெண்களுக்குக் கரும்பாக இனிப்பாள்.