வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ தமிழிசைக் கொண்டாட்டம்!

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் ஏப்ரல் 18 முதல் முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், பகல் 2 மணி முதல் வைரமுத்து யூ டியூப் வலைத்தளத்திலும் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. நாட்படு தேறல் தொடரின் நான்காம் பாடலாக ‘தமிழ் ஈழக் காற்றே’ என்ற பாடல் நேற்று வெளியான. இசை : இசை அரசன், குரல் : சத்யபிரகாஷ், இயக்கம் : ஜீவா முகுந்தன்.

பாடல் வரிகள் :

தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழிவந்து வீசு – எங்கள்
மண்ணின் சுகம்கண்டு பேசு
*
உயிரைக் கொடுத்த அன்னை
கயிறாய்க் கிடப்பாளோ?
எலும்பைக் கொடுத்த தந்தை
நரம்பாய்க் கிடப்பாரோ?
நல்லூர் முருகன் கோயில்மணியில்
நல்லசேதி வருமோ?
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்
உயிரும் உடலும் நலமோ?
ஓடிய வீதிகள் சுகமா – எங்கள்
ஒருதலைக் காதலி சுகமா?
பாடிய பள்ளிகள் சுகமா? – உடன்
படித்த அணில்கள் சுகமா?
ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
*
முல்லைத் தீவின் கதறல்
மூச்சில் வலிக்கிறதே!
நந்திக் கடலின் ஓலம்
நரம்பை அறுக்கிறதே!
பிள்ளைக் கறிகள் சமைத்து முடித்த
தீயும் மிச்சம் உள்ளதோ?
எங்கள் ஊரை எரித்து மீந்த
சாம்பல் சாட்சி உள்ளதோ?
வன்னிக் காடுகள் சுகமா? – எங்கள்
வல்வெட்டித்துறையும் சுகமா?
காய்ந்த கண்ணீர் சுகமா? – இன்னும்
காயாத குருதியும் சுகமா?
ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
*

பாடல் இணைப்பு: