யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி, இயக்கித் தயாரித்திருக்கும் படம் ஷாட் பூட் த்ரீ
சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, பிரணிதி, பூவையார், கைலாஷ் , வேதாந்த் வசந்தா, அருணாச்சல வைத்தியநாதன், சாய் தீனா, ஒரு ‘கோல்டன் ரெட்ரீவர்’ நாய் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
திரைக்கதை-ஆனந்த் நாகவ் மற்றும் அருணாச்சலம் வைத்தியநாதன், ஒளிப்பதிவு- சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசை-ராஜேஷ் வைத்தியா.
குழந்தைகள் உலகில் நம்மை அறிமுகப்படுத்தி உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற கருத்தை சொல்கிற படம் இது.
வெங்கட் பிரபு சினேகா தம்பதிகள் ஐடி துறையில் பணியாற்றுகிறார்கள்.பணத்தைத் துரத்தி ஓடும் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் தங்கள் ஒரே மகன் கைலாஷைக் கவனிக்க முடியவில்லை. அவன் தனிமையை உணர்கிறான் .அன்பின் ஏக்கம் அவனிடம் பெருகி வருகிறது.அவன் ஒரு நாய் வளர்க்க ஆசைப்படுகிறான் .வீட்டில் அதற்கு எதிர்ப்பு வருகிறது. அவனது பிறந்த நாளுக்கு அவனது பள்ளி நண்பன் ஒரு நாய்க்குட்டியைப் பரிசாக கொடுக்கிறான்.பெற்றோருக்கு, குறிப்பாக தன் அம்மாவுக்குப் பயந்து அந்த நாய்க்குட்டி மறைத்து வளர்க்கிறான்:
ஒரு கட்டத்தில் குடும்பம் அதை ஏற்பு செய்கிறது. இப்படி மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்தபோது ஒரு நாள் அந்த வளர்ந்த நாய்க்குட்டி காணாமல் போய் விடுகிறது. கைலாஷும் அவனது நண்பர்களும் அதைத் தேடி அலைகிறார்கள். உயர் ஜாதி நாயான அதைத் திருடி, காசு பார்க்கவும் ஒரு கூட்டம் அலைகிறது. தெருநாய் தொல்லைகளைத் தடுப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் தெரு நாய்களைப் பிடித்து செல்கின்றனர். அதில் கைலாஷின் நாயும் சிக்கிக் கொள்கிறது. அதையெல்லாம் கொன்று விட அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.முடிவு என்ன என்பதுதான் கதை.
அம்மா சியாமளாவாக சினேகா, தந்தை சுவாமிநாதனாக வெங்கட் பிரபு, தல குமாராக யோகி பாபு, பூவையார் ரமணனாக, பல்லவியாக ப்ரணிதி, கைலாஷ்ஆக கைலாஷ் ஹீட், பல்லுவாக வேதாந்த் வசந்தா, மருத்துவர் சேகராக அருணாசலம் வைத்தியநாதா, பைரவாவாக சாய் தீனா ஆகியோர் தங்களது பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார்கள். யாரிடமும் குறை சொல்ல எதுவும் இல்லை.
குறிப்பாக நான்கு குழந்தை நட்சத்திரங்களின் இயல்பான நடிப்பு படம் பார்ப்பவர்களைக் கவரும். .கதை மையம் கொள்ளும் மேக்ஸ் என்கிற அந்த நாயும் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.சிறுவர்களின் மன இயல்புகள் காட்டப்பட்டுள்ளன. அவர்கள் செய்யும் குறும்புகள் ரசிக்க வைப்பவை.
ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன் இயக்குநரின் பார்வையில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வீணை இசை மேதை ராஜேஷ் வைத்தியாஇப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
அன்புக்கு ஏங்கும் மனிதர்களைக் காட்டி, குழந்தைகளிடம் அன்பு காட்ட வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லி பிற உயிர்களிடத்திலும் அன்பு வேண்டும் என்று சொல்கிற கதையை குழந்தைகள் மட்டுமல்ல குடும்பத்தினரையும் கவரும் படியாக எடுத்துள்ளார் இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன்.முழு நீள சைவப் படமாக உள்ளதால் குடும்பத்தினருடன் அமர்ந்து படம் பார்க்கலாம்.
ஷாட் பூட் த்ரீ குழந்தைகளுடன் காண வேண்டிய பொழுதுபோக்குப் படம் எனலாம்.