‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்பட விமர்சனம்

ரியோராஜ், கோபிகா ரமேஷ்,அருணாச்சலேஸ்வரன், பெளசி , நடித்துள்ளனர். ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ளார். YSR பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்து இருப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

நாயகன் ரியோ ராஜ் எப்போதும் வாழ்க்கையின் மீது நம்பிக்கை இல்லாமல் உறவுகள் மனிதர்கள் மீது பற்றற்று கசப்பு மனநிலையில் இருக்கிறார். அதற்கு அவர் வாழ்க்கையில் சின்ன வயதில் நடந்த சில சம்பவங்கள் காரணம்.ஆனால், அவரது காதலி கோபிகா ரமேஷ் இதற்கு எதிர் மனநிலையில் இருப்பவர் .திருமணம் குழந்தை குடும்பம் என்று அன்பான சூழல் வட்டத்திற்குள் இருக்க விரும்புகிறார். இந்த கருத்து வேறுபாடே அவர்களை பிரிக்கிறது.
பிரிவுக்குப் பிறகுதான் கோபி ரமேஷ் கர்ப்பமடைந்திருப்பதை ரியோ அறிகிறார். கருவை கலைத்துவிடச் சொல்கிறார். ஆனால் குழந்தையைப் பெற்று கொண்டு ரியோ ராஜுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறார் கோபிகா  ரமேஷ். இந்த, தனது உள்மன ஆசையை மறைத்துக் கொண்டு ரியோ ராஜின் முடிவுக்கு சம்மதம் சொல்கிறார்.இப்படி சிக்கல் விழுந்த கதையில் காதலின் கரு கலைக்கப்பட்டதா? வேறு எதுவும் மன மாற்றங்கள் நடந்ததா ? என்பதை காதல்,நகைச்சுவை என கலந்து சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ஸ்வீட் ஹார்ட்’.

பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற ரியோ ராஜ் எப்படியாவது ஒரு காதல் மன்னனாக சாக்லேட் பாயாக திரைப்படங்களில் பதிய ஆசைப்படுகிறார்.ஆனால் அதற்கான திரைப்படங்கள் தான் அமையவில்லை. காதலியுடன் நெருங்கி பழகும் போதும் முரண்பட்டு பிரியும் போதும் குறை இல்லாத நடிப்பைத் தான் வெளிப்படுத்தியுள்ளார்.ஆனால் அவர்களுக்குள் பொருத்தம் இல்லாதது போல் தெரிகிறது.

நாயகியாக நடித்திருக்கிறார் கோபிகா ரமேஷ்.தனக்கென வாழாது பிறரை சார்ந்து வாழும் பெண்களின் பிரதிநிதியாக அந்த வேடத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.அருணாச்சலேஸ்வரன், பெளசி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அவரவர் வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சில பாடல்கள் மனதை வருடும் ரகம். மற்றவர்களுக்கு எல்லாம் பின்னணி இசையில் பின்னி எடுப்பவர் இதில்   பின்னணி இசையைச் சுமாராகவே தந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம், நாயகன், நாயகி முகங்களைப் பெரிதாகப் பதிய வைத்துள்ளார். நான்லீனர் முறைக் கதையை கையில் எடுத்து ரசிகர்கள் குழப்பமடையாத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தமிழரசன்.

எழுதி இயக்கியிருக்கும் ஸ்வினீத் எஸ்.சுகுமார், காதல் மூலம் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை பேச விரும்பி இருக்கிறார். நாயகன், நாயகி இடையிலான காதல் அந்த ரொமான்ஸ் நெருக்கம் தான் படத்தின் முக்கியமாக அமைந்திருக்க வேண்டிய ஓர் அம்சம் என்றாலும், அது படத்தில் எடுபடாமல் போயுள்ளது. இதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

காதலன், காதலி இடையிலான பிரிவையும், அதன் வலியையும் சொல்ல வேண்டிய கதையில் கருக்கலைப்பு என்கிற சிந்தனை, மடைமாற்றம் செய்து பார்க்கும் ரசிகர்களை மனவிலக்கம் கொள்ளச் செய்கிறது.

சில இடங்களில் சில காட்சிகள் நகைச்சுவையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது படத்தில் காதலைச் சொல்லப்படும் விதத்தில் ஆழம் காட்டி இருந்தால் மேலும் மனதைக் கவர்ந்திருக்கும்.