சிலருக்கு தெரிந்த முகம் என்றாலும், பலருக்கு புதுமுகமாகவே அறிமுகமாகும் ஸ்வேதா சேகர், அழகும் அறிவும் ஒருங்கே பெற்ற ஒருவர்.
நம்ம சென்னை மாநகரில் பரவலான பாராட்டை இன்னும் பெறவில்லையென்றாலும், நிச்சயம் நல்ல இடத்தை பிடிப்பேன் என்ற தன்னம்பிக்கையோடு இருக்கிறார். மற்ற குழந்தைகள் மூன்று வயதில் நடக்கவும், பேசவும் கற்றுக் கொண்டிருந்த நாட்களில் தன் மேடை நடிப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்களை கவர தொடங்கியவர் ஸ்வேதா.
அதே நேரத்தில் பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற துவங்கினார். படிப்பும் எளிதாக இருக்கவில்லை. அவரது பெற்றோர் அவர் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். எதிலும் இரண்டாம் பட்சமே இல்லை என்பது தான் அவரது கொள்கை. பேச்சரங்கம், கணித மற்றும் அறிவியல் போட்டிகளுக்கு செல்வதோடு நில்லாமல் நடிப்பு, பாடல் மற்றும் நடனப் போட்டிகளிலும் கலந்து கொண்டார். டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் போன்ற விளையாட்டுகளிலும் அவர் சிறந்து விளங்கினார். நான் இந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் என் பெற்றோர், அவர்கள் தான் எனக்கு கடவுள் என்கிறார் ஸ்வேதா.

கிரிநந்த் இசையில் மதன் கார்க்கி பாடல் வருகளில் உருவாகியுள்ள ‘திரி’ இசை ஆல்பத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் ஸ்வேதா. மேகாலயா மற்றும் அஸ்ஸாம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களுக்கு விஷூவ ல் ட்ரீட்டாகவும் இருக்கும் என்கிறார். தடய அறிவியல் படிப்பை முடிக்க அமெரிக்கவிற்கும், இந்தியாவிற்கும் பறந்து கொண்டிருக்கும் ஸ்வேதா, கிடைக்கிற கொஞ்ச கேப்பில் தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். தற்போதைக்கு தென்னிந்திய திரையுலகில் நடிக்க விரும்புகிறார் ஸ்வேதா. தென்னிந்திய திரையுலகில் கால் பதித்து ஒரு நல்ல இடத்தை பிடிப்பார் என்று நம்புவோம், வாழ்த்துவோம்.