தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், வினய்ராய் , ராஜ்தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு தாசரதி சிவேந்திரன், எடிட்டிங் சாய் பாபு தலாரி, இசை அனுதீப் தேவ், கௌரஹரி, கிருஷ்ணா செளரப் .பிலிம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டுள்ளது.
சூப்பர் மேன் ஆக வேண்டும் என்றும் அதன் மூலம் தனது சுயநல காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறான் வில்லன் மைக்கேல்.அதற்கான அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் கூட்டாளியுடன் இறங்குகிறான். ஆனால் அவனுக்குத் தோல்வியே கிடைக்கிறது.இதற்கிடையில் அனுமான் அருள் பெற்ற சக்தி மிகுந்த ருத்ரக்கல் கிடைத்து சூப்பர் மேனுக்குரிய பவர் அனுமந்த் என்கிற வாலிபனுக்குக் கிடைக்கிறது.
அதன் மூலம் அது விளைவிக்கும் அற்புதமான செயல்பாடுகள் மூலம் பல நல்ல காரியங்களைச் செய்கிறான். ஊருக்கும் உதவ நினைக்கிறான். அப்படிப்பட்ட அனுமந்திடமிருந்து அந்த சக்திக் கல்லை அபகரித்து அதைப் பணமாக்கிப் பொருளீட்ட விரும்புகிறான் வில்லன் மைக்கேல். அதன் பிறகு நல்ல சக்திக்கும் தீய சக்திக்குமான போராட்டமாக மாறிவிடுகிறது கதை.இருவருக்குள்ளும் நடக்கும் முட்டல் மோதல் சவால்கள் இடையே அனுமந்தின் அக்கா அஞ்சம்மாவுடனான பாசம், பட்டணத்தில் இருந்து படித்து விட்டு வந்திருக்கும் மீனாட்சியுடன் காதல், அப்பாவியாக இருக்கும் பொது மக்களின் செயல்பாடுகள் என்று பலவற்றையும் கலந்து சிறுவர்கள் கொண்டாடும் ஒரு படமாக இந்த ‘ஹனுமான்’ உருவாகியுள்ளது.
படத்தில் தேஜா சஜ்ஜா அனுமந்து என்கிற பாத்திரத்தில் கதையின் பிரதான நாயகனாக வருகிறார். அமிர்தா ஐயர் மீனாட்சி பாத்திரத்தில் கதாநாயகியாக வருகிறார். வில்லனாக மைக்கேல் பாத்திரத்தில் வினய் வருகிறார்.அனுமந்தின் அக்கா அஞ்சம்மாவாக வரலட்சுமி சரத்குமார் வருகிறார்.கிராமத்துத் தலைவன் கஜபதியாக ராஜ் தீபக் ஷெட்டியும், மூத்த ரிஷியாக சமுத்திரகனியும் வருகிறார்கள்.
நாயகன் தேஜா துறுதுறுப்பான வாலிபனாக படத்தில் முதலில் தோன்றிய காட்சி முதல் பார்வையாளர்கள் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.அவரது ஒவ்வொரு அசைவும் இளமைத்துள்ளல்.
வினய் ஸ்டைலான வில்லனாக வந்து தனது வில்லத்தனத்தைக் காட்டுகிறார். பாசமுள்ள அக்காவாக வரும் வரலட்சுமி சரத்குமார் பாசமும் ஆவேசமும் காட்டி நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘ஹனுமான் ‘என்பதாலோ என்னவோ படத்தில் ஒரு குரங்கு வருகிறது .அதன் பெயர் நட்சத்திரங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனாலும் அது பிரதானமான ஒரு பாத்திரமாகப் பங்களித்துள்ளது.படத்தில் வரும் பாத்திரங்களுக்கிடையே குறிப்பாக நாயகன் செய்யும் ஒவ்வொரு செயலின் போதும் மரத்தில் அமர்ந்து கொண்டு பல காட்சிகளில் ‘பளிச் பளிச்’ கமெண்ட்ஸ் அடித்தும் கலகல ரியாக்ஷன்கள் கொடுத்தும் படத்தின் நகைச்சுவைப் பகுதியைக் குத்தகை எடுத்துக் கொள்கிறது. இந்த குரங்கின் முக பாவனைகள் சேட்டைகள் பெரியவர்களையும் சிரிக்க வைப்பவை.
படம் பலமொழித்தன்மையுடன் உருவாகி இருக்கிறது. எனவே படத்தில் வரும் தெலுங்கு கலாச்சாரத்தை நாம் புரிந்து கொண்டாலும் சற்று நேரத்தில் அதில் நாம் நுழைந்து ஒன்றி விடுகிறோம்.
இன்றைய தொழில்நுட்பம் எட்டிப் பார்க்காத கிராத்தில் நடப்பதாகக் கதை இருப்பதால் அது படத்திற்கு ஒரு புது நிறத்தைக் கொடுத்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்தின் பிரம்மாண்டத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.158.30 நிமிடங்கள் கொண்ட இந்தப் படத்தில் 45 வது நிமிடத்தில் இருந்து கிராபிக்ஸ் அற்புதங்கள் தொடங்கி விடுகின்றன.படத்தில் வரும் வானளாவிய அனுமான் சிலையிலிருந்து ஆச்சரியத்தைத் தொடங்குகிறார்கள்.அவ்வகையில் படத்தின் பிரம்மாண்டத்தை கிராபிக்ஸ் கலைஞர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
இரண்டாவது பாதியின் நீளத்தைச் சற்றே குறைத்திருந்தால் படத்தில் விறுவிறுப்பு கூடுதலாகப் பராமரிக்கப்பட்டு இருக்கும்.
அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தி உள்ளவன் மட்டும் சூப்பர் மேன் அல்ல. தனது சக்திக்கு உட்பட்டு பிறருக்கு உதவுபவனும் சூப்பர் மேன் தான் என்ற கருத்து படத்தில் சொல்லப்படுகிறது.
படத்தின் உச்சகட்ட காட்சிக்கு முன் புராணகாலப் பின்னணிகள் பற்றிப் பேசப்படுகிறது .அவை குழந்தைகளுக்குத் தேவையில்லை. அவர்கள் ரசிக்க படத்தில் அவர்களுக்கான அம்சங்கள் நிறையவே உள்ளன.குழந்தைகளுக்கு ஏற்ற கதையை தொழில்நுட்பம் கலந்து பொங்கலுக்கு குழந்தைகள், குடும்பம் என்று பார்க்கும் படியாக இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார்கள்.