மோகன்,அனுமோல், ஸ்வாதி, அனிதா நாயர்,கௌஷிக் ராம், சந்தோஷ் பிரபாகரன், சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கியிருக்கிறார்.
ஒரு காலத்தில் வெள்ளி விழாப் படங்களுக்குப் பெயர் பெற்ற மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் நாயகனாக நடித்து வந்துள்ள படம் .
மகளின் மர்ம மரணத்திற்குக் காரணமானவர்களைத் தேடும் பாசக்காரத் தந்தையின் கதை இது.
ஊட்டியில் மோகன், மனைவி அனுமோல்,மகள் சுவாதி ஆகியோருடன் வசித்து வருகிறார். அவருடைய மகள் ஒரு கல்லூரி மாணவி. கோவையில் படித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று ஒரு நாள் தந்தைக்கு போன் செய்து விட்டு மகள் தற்கொலை செய்து கொண்டு விடுகிறார். மகளுடைய இறப்பிற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. இதைக் கண்டுபிடிக்க மோகன் தன்னுடைய பெயரை இஸ்லாமியப் பெயராக மாற்றிக் கொள்கிறார். பின் தன்னுடைய மகள் இறப்புக்கு காரணமானவர்களைத் தேடுகிறார்.
இறுதியில் அவர் தன் மகளைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்தாரா? தனக்கு இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொண்டது ஏன்? இதற்கெல்லாம் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கால மாற்றத்தை உணர்ந்து கொண்ட மோகன் சற்று முதிர்ந்த பாத்திரத்தில் அதாவது, ராம் என்ற பாத்திரத்தில் ஜாலியான அப்பாவாக வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகனைத் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு ஆச்சரிய உற்சாகம் தரும்.ஏற்கெனவே உருவம் படத்தில் நடித்தவர் இதில் தன் உருவத்தைக் கூட மாற்ற வில்லை .பெயரை மட்டுமே மாற்றிக் கொள்கிறார்.எந்த ஒரு அங்க அடையாளத்தையும் மாற்றவில்லை. அதனால் பார்த்தாலே எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். இப்படிப் படம் முழுக்க நிறைய தர்க்கரீதியான கேள்விகள் எழுகின்றன.
சுற்றி வளைத்துக் கதை சொல்லி காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
ஆண்டுகள் பல கடந்தாலும் தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கிறார் மோகன். இப்படத்தில் இயல்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.பாசக்கார தந்தையின் உணர்வுகளை நடிப்பில் காட்டியுள்ளார்.மோகனின் மனைவியாக அனுமோல் வருகிறார்.மகளை இழந்து தவிக்கும் தாயின் தவிப்பைக் காட்டி உருக வைக்கிறார் .வில்லனாக சுரேஷ் மேனன் நடித்திருக்கிறார்.
மோகனுக்கு உதவி செய்பவராக வரும் அனிதா நாயர் நடிப்பைவிட ஆக்சன் காட்சிகளில் கவர்கிறார். கௌசிக் ராம் , சந்தோஷ் பிரபாகரன் இருவருக்கும் நடிக்க நல்ல வாய்ப்புகள்.
யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், மைம் கோபி ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த வேலையை முடிந்தளவு செய்திருக்கிறார்கள்.அவர்கள் படத்திற்குப் பெரிதாக உதவவில்லை.பிரசாந்த் அரவிந் இசை கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளது.
அப்பா மகள் பாசக்கதை போலி மருந்து ,கலப்படம் என்று வேறு திசையில் பயணம் செய்கிறது .இயக்குநர் சமுதாயத்திற்கு ஒரு கருத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால், அதைக் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
கிளைமாக்ஸில் வருகிற அந்த ட்விஸ்ட் படத்திற்குள் ஓர் ஆச்சரியம்.மொத்தத்தில் மோகனின் ‘ஹரா’ படம் உருவாக இருக்கும் விதம் மிதம்.