தமிழ்த் திரையுலகம் டிஜிட்டல் மயமாக மாறுவதற்கு முழுமையாக அடித்தளம் அமைத்துத் தந்த முதல் கமர்ஷியல் டிஜிட்டல் வெற்றிப்படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி இயக்கிய ஆதிராம், தமிழ், கன்னடம் மொழிகளில் இயக்கி வரும் மிரட்டலான த்ரில்லர் படம்தான் ‘அதர்வணம்’.
படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “ ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், அவர்களை மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிறது, அந்த சூழ்நிலையில் இருந்து தப்பினார்களா, இல்லையா என்பதை நெஞ்சம் படபடக்க சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் அளவுக்கு பரபரப்பாக படமாக்கி இருக்கிறேன். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதை இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம்.நாயகனும், நாயகியும் பல காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடித்திருக்கிறார்கள்” என்றார் ஆதிராம்.
இந்த படத்தை ஆர். மனோஜ்குமார் யாதவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பிரியாரமேஷ் வழங்க, எஸ்.ரமேஷ் ‘ரணதந்த்ரா‘ என்ற பெயரில் கன்னடத்தில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த டாக்டர் ராஜ்குமாரின் மருமகன் விஜயராகவேந்திரா இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற இவர் நடிக்கும் 37-வது படம் இது. இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர்.
தமிழில் அர்ஜுன் ஜோடியாக வல்லக்கோட்டை, கனகவேல் காக்க, முரண், வாராயோ வெண்ணிலாவே, படங்களில் நடித்திருக்கும் ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிக்கும் 28வது படம் இது. ஹரிப்ரியா
நடிப்பிலும், கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார் இவர்களுடன் விஷால் ஹெக்டே, ஐஸ்வர்யா, சத்யஜித், மது, ரங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழில் சிம்பு நடித்த சரவணா, சரத்குமாரின் வைத்தீஸ்வரன், உள்ளிட்ட ஏராளமான தென்னிந்திய மொழிப்படங்களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி நாயகியாகவும் கலக்கி வரும் மேக்னா நாயுடு ஒரு கெத்துப்பாடலுக்கு செமத்தியாக குத்தாட்டம் போட்டுள்ளார். சிறுத்தை படத்தின் ‘ அழகாப் பொறந்துபுட்ட ஆறடி சந்தனக்கட்ட….‘ பாடலுக்குப் பிறகு மேக்னாவின் அதிரடி ஆட்டம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.
‘சிலந்தி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தெலுங்கில் 3 படங்களுக்கு இசையமைத்திருக்கும் எம். கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மழை, லீ , உன்னைச் சரணடைந்தேன், ராமன் தேடிய சீதை, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளி ஓவியம் தீட்டிய ராஜேஷ்.கே நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்களை நா,முத்துக்குமார், சினேகன் , ஏக்நாத், நெல்லைபாரதி ஆகியோர் எழுதியிருக்கின்றனர். ‘லக்கா லக்கா லடுக்கி’ என்ற குத்துப்பாடலை ஆதிராம் எழுதியிருக்கிறார்.
அதர்வணம் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்குவதுடன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் இந்தப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார், ஆதிராம். சென்னை, பெங்களூர், மைசூர், ஷிமோகா, கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.