வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, விடிவி கணேஷ், சிங்கப்பூர் தீபன், சிங்கம்புலி நடித்துள்ளனர்.
பிக்பாக்கெட் திருடனாக வருகிறார் வைபவ். சிறு சிறு திருட்டுகள் செய்கிறார். மார்க்கெட்டிங்கில் வேலைபார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் போனில் நட்பு .பிறகு அதுவே காதலாகிறது. வேலை இல்லை என்பதால் இரக்கப்பட்டு தன் கம்பெனியில் வேலை தேடிக் கொடுக்கிறார் ஐஸ்வர்யா. போன இடத்தில் உடற்பயிற்சி கருவியையும் பைக்கையும் லவட்டிக் கொண்டு ஓடுகிறார் வைபவ். பிறகு பிடிபடுகிறார். சாலையில் ஒரு விபத்து நடக்கிறது. கீழே விழுந்து கிடந்த மொபைல் போனை திருடிக்கொண்டு ஓடுகிறார் வைபவ்.
ஆனால் வீட்டுக்குப்போன பிறகு தனியாக வீட்டிலிருக்கும் அவரை மொபைல் போன் மூலம் பேய் மிரட்டுகிறது. இதைப் போய் ஐஸ்வர்யா அண்ணன் விடிவி கணேஷிடம் சொல்ல . அவர் தன் தம்பியுடன் அங்கே வருகிறார். அதன்பின் பேய் அவர்களைப் பாடாய்ப் படுத்துவதை கலகலப் பாக சொல்லியிருக்கிறார்கள். பேய்க்கு என்ன தேவை அது நிறைவேறியதா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.
மொபைல் போனில் பேய் வருகிறதா நம்ப முடியாத கற்பனையாக இருக்கிறதே என்றாலும் கலகலப்பாக பயமுறுத்தி இருக்கிறார் புதுமுக இயக்குநர் பாஸ்கர்.
முதல்பாதி ஐஸ்வர்யா, வைபவ் காதல், வைபவின் திருட்டு கலாட்டாக்கள் ,விடிவி கணேஷின் சாவுக்குத்து பயிற்சிகள் என்று கலகலப்புக்குப் பஞ்சமில்லை. போன் பேய் வந்தவுடன் சிரிப்புடன் லேசான பயமும் வருகிறது. வைபவ் சென்னை மொழி பேசி நம்மைத் திருடுகிறார்.ஐஸும் குறை வைக்கவில்லை. விடிவி கணேஷின் காமெடியில் காம நெடி அதிகம். குறிப்பாக அவரது சாவுக்குத்து பயிற்சியை விரிவாக காட்டியுள்ளது ரசிக்கலாம்.பேயாக வரும் ஓவியா ஜாலியாக பயமுறுத்துகிறார்.அவரது முன்னாள் காதலனாக கருணாகரன் வருகிறார். பேயோட்டுபவராக வந்து சிங்கம்புலி கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
சிரிக்க வைக்கிறேன் என்று மலிவான முகஞ்சுழிக்க வைக்கும் காட்சிகளையும் வசனங்களையும் அள்ளித் தூவுகிறார்கள். இதை தவிர்த்திருந்தால் ஆரோக்கியமான ஹாரர் காமெடியாக இ ருந்திருக்கும்.