’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்பட விமர்சனம்

நானி, ஸ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், கோமளி பிரசாத், ரவீந்திர விஜய், பிரதிக் பாபர் நடித்துள்ளனர். சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இசை மிக்கி ஜெ மேயர்.தயாரிப்பு வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்.

நானி ஒரு காவல் துறை அதிகாரி.கொலை வழக்கு விசாரணையில் இறங்குகிறார். நாட்டின் பல்வேறு இடங்களில் ஒரே விதத்தில் நடக்கும் கொலைகள் பற்றி அதன் ஒத்த தன்மையை பற்றி ஆராய்கிறார். விசாரிக்க புறப்பட்டுக் களத்தில் இறங்குகிறார்.இதற்காக மும்முரமாகத் தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.அதன் பின்னணியில்  மர்மமும் திகிலும் நிறைந்த கொடூரமான  உலகம் ஒன்று இருப்பது தெரிகிறது. அந்த உலகம் எங்கிருக்கிறது? அங்கே என்ன நடக்கிறது?அதை இயக்குவது யார்? கொடூரமாக கொலை செய்யும் அவர்களது வன்முறைக்கான பின்னணி என்ன? போன்றவற்றைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் நானியின் பரபர பயணம் தான் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’.

சாக்லேட் பாயாக மென்மையான பாத்திரங்களில் நடித்து வந்த நானி, இதில் காவல்துறை ஆய்வாளராக கம்பீரமாக வருகிறார்.காக்கி சாட்டை போடாமலேயே நடித்திருக்கிறார். அந்தப் பாத்திரத்தில்  கம்பீரமாகவும், ஆவேசமாகவும் காவல்துறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தோன்றுகிறார்.நேர்த்தியாகப் பாத்திரத்தில்  பொருந்தி ரசிகர்களை ஈர்க்கிறார்.சண்டைக்காட்சிகளில் வன்முறை தூக்கலாகத் தெரிந்தாலும் தனது முறுக்கான நடிப்பு மாறுபட்ட உடல் மொழி மூலம் பார்வையாளர்களைக் கவனிக்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டியின் அளவான நடிப்பு படத்தில் எடுபட்டுள்ளது.அவரது திரைத்தோற்றம் படத்திற்குப் பலம்.

சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற துணைப் பாத்திரங்களில் வருபவர்கள் குறை சொல்ல இயலாத அளவிற்குப் பொருத்தமான தேர்வாக அமைந்து படத்தில் பயணம் செய்கிறார்கள்.சர்ப்ரைஸ் வரவாக படத்தின் இறுதியில் சில காட்சிகளில் தோன்றும் நடிகர் கார்த்தி அடுத்த பாகத்திற்கான முன்னுரையை எழுதிவிட்டுச் செல்கிறார்.

ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் படத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் படத்தில் மேலோங்கித் தெரிந்தாலும் திரைப்பட உருவாக்கத்தில் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்கள்.

இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தைக் கூட்டி படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

நானி ஏற்றுள்ள அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்துவதில் பின்னணி இசை முக்கிய பங்காற்றியிருக்கிறது.

சண்டைக்காட்சிகள் அதிகமாக, நீளமாக இருந்தாலும் காட்சிக் கோணங்களில் வித்தியாசப்படுத்தி ரசிக்க வைக்கிறார்கள்.
சற்றும் தெய்வமில்லாமல் நேர்த்தியாகத்  தொகுத்து இருக்கிறார் படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ்.விசாகப்பட்டினம், காஷ்மீர், பீஹார், ராஜஸ்தான் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் என பல மாநிலங்களுக்குக் கதை பயணப்பட்டாலும், சற்றும் தொய்வில்லாமல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தடதடக்கிறது படம்.

எழுதி இயக்கியிருக்கும் சைலேஷ் கொலானு , கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ரகத்தில்  மாஸ் ஆக்‌ஷன் படமாகக் கொடுத்திருக்கிறார். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே படம் பார்ப்பவர்களை உள்ளிழுத்துக் கொண்டு கடைசி வரை அதைப் பராமரித்துள்ளார்.சில காட்சிகளில்
பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைத்திருப்பது அவரது திரைக்கதை நுட்பத்திற்குச் சென்று .

மொத்தத்தில், ‘ஹிட் – த தேர்ட் கேஸ்’ நிச்சயம் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை தரும் பாதையில் அமைந்துள்ளது.