ஸ்டுடியோ க்ரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், “FINALLY “ YouTube உடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது !
ஸ்டுடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா , தரமான கதைகள் மற்றும் வித்தியாசமான உள்ளடக்கம் கொண்ட கமர்ஷியல் படங்களை தயாரித்து, தொடர் வெற்றிகளை தந்ததன் மூலம், தமிழ் சினிமாவின் மதிப்பையே உயர்த்தியுள்ளார். சரியான உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட முழுமையான குழுவுடன் அதைச் செயல்படுத்துவதிலும், சரியான வெளியீட்டு உத்திகளை கடைப்பிடித்து, படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உள்ள அவரது தனிச்சிறப்பு, அவரை திரைப்படத் துறையில் ஒரு அபிமான அடையாளமாக மாற்றியுள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான “மகாமுனி & டெடி” திரைப்படங்கள் இந்நிறுவனத் தயாரிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை குவித்து சாதனை படைத்துள்ளன. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஆவலை தூண்டும் பல வித்தியாசமான படைப்புகள் தற்போது தயாரிப்பு நிலையின் பல கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஒரு இனிய செய்தியாக இத்தயாரிப்பு நிறுவனம் “FINALLY “ YouTube சேனலுடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் கால்பதிக்கிறது.
இது குறித்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா கூறும்போது…,
Studio Green எப்போதும் புதிய கதைகளை முயற்சிப்பதிலும், திறமையான புது இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றவுமே விரும்புகிறது. இதுபோன்ற உண்மையான மற்றும் கடின உழைப்பாளிகளுடன் பணிபுரியும் அதிர்ஷ்டம் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. டிஜிட்டல் தளம் உலகம் முழுதும், மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருவதால், இந்த டிஜிட்டல் உலகத்திற்குள் நாங்களும் ஒரு பயணத்தைத் தொடங்க விரும்பினோம். இந்த நோக்கத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களை தனித்துவமான, பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை மிளிரும் கதைகளுடன் மகிழ்வித்து வரும், FINALLY போன்ற சூப்பர் லீக் சேனலுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
பாரத், Founder-Director of Finally Pictures Pvt. Ltd கூறியதாவது..,
இது மாதிரியான நிகழ்வு தமிழகத்தில் இதுவே முதல்முறை என்பதால் ‘FINALLY’ குழுவில் உள்ள எங்கள் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம் ஆகும். ஒரு தயாரிப்பு நிறுவனம் YouTube சேனலுடன் இணைகிறது. Studio Green Films நிறுவனம் மற்றும் Finally Pictures Pvt. Ltd எதிர்காலத்தில் இனி டிஜிட்டல் சம்பந்தமான அனைத்து விசயங்களிலும் கூட்டாக செயல்படும். Studio Green நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சிறந்த கதைகளை வழங்குவதற்கான இந்த புதிய முயற்சிக்கு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதே சமயம் இதை மிகப்பெரும் பொறுப்பாகவும் நான் மதிக்கிறேன். பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கென தனி YouTube சேனல்களை வைத்திருக்கின்றன, ஆனால் ஞானவேல்ராஜா சார் இந்த முறையிலிருந்து வெளியே வந்து, எங்களுடைய சேனல்கள் மூலம், இன்னும் சுவாரஸ்யமான உள்ளடக்கங்களைக் கொண்டு வர, எங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார். ஆரம்பத்தில், நாங்கள் YouTube உள்ளடக்கங்களில் கவனம் செலுத்தவுள்ளோம், அதைத் தொடர்ந்து OTT மற்றும் திரைப்பட தளங்களுக்கான உள்ளடக்கங்களை உருவாக்கவுள்ளோம். பல்வேறு தளங்களுக்கான மிகச்சிறந்த கதைகளுக்கான ஆரம்பகட்ட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். மேலும் Studio Green அவர்களின் பக்கத்திலிருந்து அனைத்து விசயங்களிலும் முழு ஆதரவை தருவதாக எங்களுக்கு உறுதியளித்துள்ளனர். விரைவில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் மிகச்சிறந்த கதைகளை வெளியிடுவோம்.
தயாரிப்பு நிறுவனத்தின் படைப்புகளை பொருத்த வரையில் Studio Green Films நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா தயாரித்து, பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படம் 2021 டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது.