உலக அளவில் குழந்தைகளுக்கான திரைப்பட உலகத்துக்கென இடம் இருக்கவே செய்கிறது. ஆனால் மக்கள்தொகையில் கணிசமான அளவில் இருக்கும் குழந்தைகளைப் படைப்பாளிகள் கண்டுகொள்வதில்லை.குழந்தைகளுக்காக ஹாலிவுட் அளவுக்கு பிராந்திய மொழிகளில் படங்கள் உருவாவதில்லை.
அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்கான படமாக அதேவேளை பெரியவர்களும் ரசிக்கும்படியாக உருவாகியுள்ள படம்தான்
‘ஓ மை டாக்’.
குழந்தைகள் உலகம் என்பது வேறானது .அந்த உலகத்துக்குள் நம்மை அழைத்துக் கொண்டு சென்று கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரோவ் சண்முகம்.
குழந்தைகளே பிரதானமாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அருண்விஜய் முக்கியமான நடிகராகப் பங்கேற்றுள்ளார். இப்படத்தில் விஜயகுமார் ,அவரது மகன் அருண் விஜய், அவரது மகன் அர்னவ் என்று மூன்று தலைமுறையும் நடித்துள்ளது சிறப்பு.
சரி கதை என்ன? ஊட்டியில் ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தில் அருண் விஜய், மனைவி மகிமா நம்பியார், தந்தை விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் வாழ்கிறார்.
அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் மிகவும் சுட்டியாகவும் குறும்புகள் செய்பவராகவும் இருக்கிறார். இன்னொரு புறம் டாக் ஷோவில் பல வெற்றிகளைப் பெற்றிருக்கும் வினய், கண் தெரியாமல் இருக்கும் நாய்க்குட்டியைத் தன் ஆட்கள் மூலம் கொல்லச் சொல்லிவிடுகிறார்.அந்த நாய்க்குட்டியோ எதிர்பாராத விதமாக அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அதற்குக் கண் ஆபரேஷன் செய்து வளர்க்க ஆரம்பிக்கிறார் அர்னவ். ஒரு கட்டத்தில் டாக் ஷோ நடக்க இருக்கிறது. இந்த ஷோவில் அர்னவ்வின் நாய் பல சுற்றுகளில் முன்னேறுவதால் அந்த நாயைப் போட்டியில் பங்கேற்க விடாமல் வினய் தடுக்க முயல்கிறார்.
இறுதியில் அர்னவ்வின் நாய் டாக் ஷோவில் வெற்றி பெற்றதா?, வில்லன் வினய்யின் முயற்சி வெற்றிபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய், தந்தை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். பெரிய அளவில் படத்தை ஆக்கிரமிக்கா விட்டாலும் வரும் இடங்களில் நடிப்பில் பளிச்சிடுகிறார். அர்னவ் விஜய்க்கு முதல் படம் என்பதால் பல இடங்களில் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் அனுபவமில்லாத தடுமாற்றம் தென்படுகிறது. மகிமா நம்பியார் தனக்குக் கொடுத்த சிறு வேலையை முடிந்தளவு சிறப்பாகச் செய்திருக்கிறார். தாத்தாவாக அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜயகுமார்.
ஸ்டைலான வில்லனாக வரும் வினய்யின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை. அர்னவ்வின் நண்பர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் அனைவரும் துறுதுறுவென மனதில் பதிகிறார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் கவர்கிறார்கள்.
கண் தெரியாத நாய் போட்டிகளில் கலந்து கொண்டு எப்படி வெற்றி பெறுகிறது என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சரோவ் சண்முகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். குறிப்பாகச் சிறுவர்களிடமும் நாயிடமும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்திற்குப் பெரிய பலம். அதேபோல் கோபிநாத்தின் ஒளிப்பதிவும் ஊட்டியின் பின்னணியோடு காட்சிகளுக்கு வண்ணமயமாக அமைந்துள்ளது. இயல்பான கதை ஒன்றை எடுத்துக்கொண்டு செயற்கையான திருப்பங்கள் ஆர்ப்பாட்டங்கள் அலங்காரங்கள் பிரம்மாண்டங்கள் இல்லாமல் மனதைத் தொடும் வகையில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் சரோவ் சண்முகம்.அவ்வகையில் அவரைப்பாராட்டலாம்.
இப்படத்தை 2D புரொடக்ஷன்ஸ் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரித்துள்ளனர் . குழந்தைகளின் படிப்பிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சிவகுமார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழந்தைகள் படத்தைத் தயாரித்து இருப்பது மிகவும் பொருத்தமானது.
மனிதர்களைக் கட்டி மேய்ப்பதே மிகவும் சிரமமானது.படத்தில் ஏராளமான நாய்களை நடிக்க வைத்திருப்பது அசாதாரணமானது. படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது ’ஓ மைகாட் இந்த ஓ மை டாக் போல இப்படி ஒரு கதை யாருக்கும் இதுவரை தோன்றவில்லையே ?’ என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் தோன்றும்.
மொத்தத்தில் இந்தப் படம் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல பெரியவர்களுக்கானதும் கூட. ரசிக்கலாம்.