இந்தியாவின் பெருமைகளில் ஒன்று இந்திய தபால் துறை.”சார் போஸ்ட் ”என்கிற குரல் இந்திய மக்களிடம் பிரபலம். இன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்தில் இந்தியா முழுக்க மக்களைப் பிணைத்தது அவர்களிடம் கடிதங்களைக் கொண்டு செல்லும் இந்த தபால்காரர்கள் தான். அப்படிப்பட்ட ஒரு தபால்காரர் பற்றிய கதைதான் ஹர்காரா.
ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், கௌதமி சவுத்ரி, பிச்சைக்காரன் மூர்த்தி,ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், பாலு போஸ் மற்றும் பல நடித்துள்ளனர்.இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ராம் அருண் காஸ்ட்ரோ. என்.ஏ . ராமு, சரவணன் பொன்ராஜ் தயாரித்துள்ளனர்
ஒளிப்பதிவு பிலிப் ஆர் சுந்தர், மற்றும் லோகேஷ் இளங்கோவன். இசை ராம்ஷங்கர் .கலை வி ஆர் கே ரமேஷ். திரையரங்குகளில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
‘தபால்காரன்’ என்ற பெயரில் நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் வந்துள்ளது.ரோஜர் மார்டின் தூகார்டு எழுதிய அந்நாவல் ஒரு தபால் காரனின் உலகைப் பதிவு செய்திருந்தது. நம் இந்தியத் தபால்காரனின் கதை தான் இந்த ‘ஹர்காரா’ .
படத்தின் கதை என்ன?
தேனி மாவட்டத்தில் கீழ் மலை என்ற மலைக் கிராமத்தில் ஒரு தபால் அலுவலகம். அதில் போஸ்ட் மேனாக புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் காளி வெங்கட்.
வேலையில் சேர்ந்த அவருக்கு ஏதோ ஒரு வேற்றுக் கிரகத்திற்கு வந்துவிட்டது போல ஓர் உணர்வு வருகிறது.
அந்த ஊரின் அமைவிடம், நாகரிக வளர்ச்சி எட்டிப் பார்க்காத அந்தச் சூழல், வெள்ளந்தி மக்களின் அப்பாவித்தனமான நடவடிக்கைகள், தபால் அலுவலகத்தை தங்களது உரிமை பெற்ற இடமாக வந்த புழங்கி பழகும் மக்கள் எனஅனைத்தையுமே பெரிய தொந்தரவாக நினைக்கும் காளி வெங்கட் என்று கதை தொடங்குகிறது.
வந்திருக்கும் தபால்களைக் கொண்டு சேர்க்க அக்கம் பக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு மலை ஏறிச் சிரமப்பட்டு மூச்சு வாங்கிச் செல்ல வேண்டிய சூழல்.
நாகரிகம் வளர்ச்சி அடையாத அந்தக் கிராமத்தை விட்டு விரைவில் வெளியே மாறுதலில் சென்று விட வேண்டும் என்று எரிச்சலில் இருக்கிறார் காளி.
அந்த ஊருக்கு தபால் நிலையம் தேவையா என்று கூட அவர் நினைக்கிறார்.
அத்தோடு மட்டுமல்லாமல் அந்தத் தபால் அலுவலகத்தை மூடுவதற்கும் மனு போடுகிறார்.
ஒருநாள் காளி ஒரு பெண்மணிக்குத் தபால் கொண்டு செல்லும் வழியில் ஒரு பேச்சுத்துணை ஆள் கிடைக்கிறார். போக வேண்டிய இடத்திற்கு வழி கேட்டவர்,வயதில் மூத்த அவரிடம் தனது சிரமத்தைச் சொல்லிப் புலம்புகிறார் . இதெல்லாம் ஒரு சிரமமா? என்று தொடங்கி வழித் துணை முதியவர் ஒரு முன் கதை சொல்கிறார். அது 150 ஆண்டுகளுக்கு முன்பான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக் கதை.
அப்போது மாதேஸ்வரன் என்ற தபால்காரர் இப்படித் தபால் கொண்டு போகும் பணியைச் செய்து வருகிறார்.அப்போது தபால் கொண்டு செல்பவரின் பெயர் ஹர்காரா. அதாவது தபால்காரர்.
அவர் வெள்ளையருக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். அப்போது அவருக்கு நாட்டின் மீது விசுவாசம் உள்ள சிலர் நம் நாட்டைப் பற்றியும் நம் நாட்டிற்கு வெள்ளையர்கள் செய்து வரும் துரோகங்கள் சுரண்டல்களை எல்லாம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
அதன் பிறகு மாதேஸ்வரனின் நடவடிக்கைகள் வெள்ளையர்களுக்கு எதிராக மாறுகின்றன.ஒரு கட்டத்தில் நம் நாட்டைப் பற்றிய ஒரு ரகசிய ஆவணம் அவரிடம் வந்து சேர்கிறது. அதை உரியவரிடம் கொண்டு சேர்க்காமல் ஒளித்து வைக்கிறார். அத்துடன் தலைமறைவாகி விடுகிறார்.ஆங்கிலேய அதிகார வர்க்கம் தப்பித்துப் போகும் அவரைத் தேடிப் பிடித்துவிடுகிறார்கள். அவருக்குக் கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது.
இப்படிச் சுதந்திரப் போராட்ட காலத்தில் நிகழும் கதையாக முன் கதை செல்கிறது.இந்தக் கதையைக் கேட்ட
காளி வெங்கட் என்ன முடிவெடுக்கிறார் அவரது மனநிலை என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
விடுதலைப் போராட்டத்தை நினைவூட்டும் கதையாகவும் வெள்ளையர் ஆட்சிக் காலத்து கதையாகவும் காட்சிகள் நகர்கின்றன.
முதலில் இப்படி ஒரு கதையை எடுத்துக் கொண்டு படமாக்க ஒப்புதல் கொடுத்த தயாரிப்பாளரை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஏனென்றால் வணிக அம்சங்கள் என்கிற செயற்கை மாசுகள் எதுவும் இல்லாமல் ஒரு வித்தியாசமான முயற்சியைப் படமாக்க அனுமதித்தது ஆச்சரியமாக இருக்கிறது. சபாஷ்.
படத்தின் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோவே மாதேஸ்வரனாக நடித்துள்ளார்.அவரது தோற்றமும் உடல் மொழியும் அதிகம் பேசாத அந்தப் பாத்திரத்தின் குணச்சித்திரமும் கச்சிதம்.அந்த மலை கிராமத்து போஸ்ட்மேனாக வரும் காளி வெங்கட் நடிப்பும் அப்படித்தான்.
படத்தில் வரும் கண்காணி, மலை வாழ் மக்கள், டீக்கடைக்காரர், பித்து பிடித்த இளைஞர், மாரியம்மா, வெள்ளைக்காரப் பாத்திரங்கள் எனக் கதை மாந்தர்கள் அனைவரும் தங்கள் நடிப்புக் கடமைகளைச் சரியாகச் செய்து படத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
படத்தில் நடிகர்கள் மட்டுமல்லாமல் லொகேஷன்கள் முக்கியமான இடம் வகிக்கின்றன.கதாபாத்திரத்திற்குரிய முக்கியத்துவம் பெறுகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையின்உச்சத்தையும் பாதாளத்தையும் அழகாகப் படம் பிடித்து ஒளிப்பதிவாளர் தன் இடத்தைக் கவனிக்க வைக்கிறார். அதே போல் பாடல்களும் பின்னணி இசையும் பொருத்தமாக வழங்கி இசையமைப்பாளர் கவனம் பெறுகிறார். அந்தக் காலத்தைக் கண் முன் நிறுத்தும் கலை இயக்கமும் பாராட்டுக்குரியது.
படம் பார்த்து முடித்ததும் நமது இந்திய அஞ்சல் துறை மீது நமக்கு ஒரு பெருமித உணர்வு ஏற்படுவதை உணரலாம்.இது ஒரு வித்தியாசமான முயற்சி. வணிக சினிமா பாதையில் இருந்து விலகி பூச்சுகளும் பாசாங்குகளும் அற்ற இந்த மாதிரி எடுக்கப்பட்ட இந்த முயற்சியைத் தீவிர சினிமா ஆதரவாளர்களும் வித்தியாசப்பட ரசிகர்களும் நிச்சயம் ஆதரித்து வரவேற்க வேண்டும்.நம்பிச் செல்லலாம் வித்தியாசமான திரை அனுபவம் காத்திருக்கிறது.