வாழ்வு தொடங்கும் இடம் நீதானே ? வானம் முடியுமிடம் நீதானே? என்ற பாடல் வரிகள் தாய்ப் பாசத்தை வெளிப்படுத்தும். ஆனால் இந்த
‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ படமோ தன் பால் ஈர்ப்பைப் பற்றிப் பேசுகிறது. இப்படித் தன்பால் ஈர்ப்பாளர்களை மையமாக வைத்து ‘பயர்’ தொடங்கி பல படங்கள் வெளியாகியுள்ளன.பெரும்பாலும் அவை உடல் ரீதியான தொடர்புகளைப் பற்றி பேசி மலினமான வகையில் சேர்ந்தன. இந்நிலையில்,அதே வகைமையிலான படமாக தமிழில் ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ உருவாகியுள்ளது.
இப்படம் ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 28ஆம் தேதி முதல் வெளியாகிறது.
இந்தப்படத்தினை ‘சூல்’ படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கியிருக்கிறார். நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார்.
இயற்கைக்கு முரணான பாலியல் உறவு, தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறி, உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கைக்கு, எதிரான சட்டப் பிரிவு 377 ஐ, ரத்து செய்தது, பலருக்கும் நினைவிருக்கலாம். இதன்படி இந்தியாவில் தன் பால் ஈர்ப்பு, ஓரினச்சேர்க்கை என்பது தவறானது என்றோ சட்டமீறல் என்றோ கூற முடியாது என்கிற நிலை உள்ளது. அதை முன்வைத்து உருவாகியுள்ள படம்தான் இது.
இப்படத்தின் கதையை எடுத்துக் கொண்டால் கடலோர கிராமத்தில் வசித்து வரும் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர், நிரஞ்சனா நெய்தியார். இவருடைய கிராமத்து மக்களின் வாழ்க்கையினை ஆவணப்படுத்துவதற்காக ஸ்ருதி பெரியசாமி அவ்வூருக்கு வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் தங்க நேரிடுகிறது. அங்கே இவர்களிடையே காதல் உருவாகிறது. இது நிரஞ்சனா நெய்தியாரின் தந்தைக்குத் தெரிகிறது.
அவசரமாக தன் மகளுக்கு வேறு ஒரு பையனை திருமணம் செய்து வைக்க நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.
அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பது தான், ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ படத்தின் கதை.
இயக்குநர் ஜெயராஜ் பழனி, காதலுக்கு எப்படி ஜாதி, மதம், இனம்,மொழி, நாடு என்கிற பேதமில்லையோ, அதேபோல் பாலின பேதமும் இல்லை என்று கூறி தன் கருத்தை முன்வைத்து வாதிடுகிறார்.
பொதுவாக இயல்பாக ஆண், பெண் பாஸ்பரம் ஈர்க்கப்பட்டு எதிர் பாலினத்தவர் மேல் கொள்ளும் காதல் போன்றே, தன் பாலினத்தவர்கள் மத்தியில் எழும் காதலும் இயற்கையானது, என்கிறார்.
ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் இருவருமே கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடியான சரியான தேர்வு எனலாம். சற்றே பயந்த, தைரியமான சுபாவம் கொண்ட பெண்களாக, தங்களது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
பொதுவாக இவ்வகைப் படங்களில் பாலுணர்ச்சியைத் தூண்டும் வகையிலான காட்சிகள் இடம் பெறும். அதையே பரபரப்பாக்கி வணிக வசூலைக் குறி வைத்து எடுக்கப்படுவதுண்டு ஆனால் இப்படம் இப்படிப்பட்ட ஈர்ப்பாளர்களின் மன உணர்வைக் கூற முயன்றுள்ளது. அதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்
‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ மேலும் அழுத்தமாக சொல்லப்பட வேண்டிய ஒரு படம்.மேலோட்ட முயற்சியாக உருவாகி வெளிவந்துள்ளது.